பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக இந்து இளம்பெண் ஒருவர் காவல்துறையில் உயர் பதவியில் அமர உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ஜகோபாபாத்தைச் சேர்ந்தவர் 26 வயதான மனிஷா ரொபேட்டா. தனது தந்தையை 13 வயதில் இழந்தநிலையில், மனிஷா ரோபேட்டா, அவரது தாயார், உடன்பிறந்த 3 சகோதரிகள், ஒரு இளைய சகோதரர் உள்பட அனைவரும் கராச்சி நகருக்கு குடிபெயர்ந்துள்ளனர். தந்தை இல்லாத குறை தெரியாமல் இருக்க, மிகவும் கடுமையாக உழைத்து மனிஷாவின் தாயார், குழந்தைகள் அனைவரையும் படிக்கவைத்துள்ளார். இதன்பலனாக மனிஷாவின் சகோதரிகள் 3 பேரும் மருத்துவம் படித்து மருத்துவர்களாக உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தாயின் விருப்பப்படி மனிஷாவும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் ஒரே ஒரு மதிப்பெண்ணால் அந்த வாய்ப்பு தவறிப்போக, பிசியோதெரபி படிப்பை மேற்கொண்டுள்ளார் மனிஷா. அதேநேரத்தில் விடாமுயற்சி செய்து சிந்து அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வில் கடந்த ஆண்டு நம்பிக்கையுடன் கலந்துகொண்டார். இந்நிலையில் இந்தத் தேர்வில் கலந்துகொண்ட 468 பேரில் 152 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதில், மனிஷா ரொபேட்டா 16-ம் இடம் பிடித்து டிஎஸ்பியாக தேர்வாகியுள்ளார்.

image

பாகிஸ்தானில் அரசுத் துறையில் பெண் ஒருவர் அதிகாரியாக நுழைவது அவ்வளவு எளிதல்ல. அதிலும் அங்கு இந்துவைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக கருதப்படும்நிலையில், மனிஷா ரொபேட்டா காவல்துறை போட்டித் தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது பயிற்சியில் உள்ள மனிஷா, விரைவில் குற்றம் நிறைந்த பகுதியான லயரியில் டி.எஸ்.பி.யாக பதவியேற்க உள்ளார்.

இதுகுறித்து மனிஷா கூறுகையில், “சிறுவயது முதல் நானும் என் சகோதரிகளும் அதே பழைய ஆணாதிக்க முறையைப் பார்த்தது வளர்ந்திருக்கிறோம். பொதுவாக பெண்கள் கல்வி கற்கவும் வேலை செய்யவும் விரும்பினால் அது ஆசிரியர்களாகவோ அல்லது மருத்துவராகவோ மட்டுமே ஆக முடியும். அதேபோன்று தான் நானும் எனது சகோதரிகளும் படித்து வந்தோம். அவர்கள் மருத்துவர்கள் ஆகிவிட்டார்கள்.

image

ஒரு மதிப்பெண் குறைந்ததால், எனக்கு விருப்பமான காவல்துறையை தேர்ந்தெடுத்து அதற்காக கடுமையாக உழைத்தேன். தற்போது வெற்றி அடைந்துவிட்டேன். ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக போராடுவேன். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணிபுரிவேன். மேலும் காவல் துறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்க விரும்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மனிஷாவின் இளைய சகோதரரும் தற்போது மருத்துவம் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.