44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், இயக்குநர் ஐஸ்வர்யா, நடிகர் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் நேரடியாக கலந்துகொண்டனர்.

கடந்த 1927-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தியாவில் முதல்முறையாக இந்தாண்டு நடத்த தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை முதல் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி வரை போட்டி நடைபெறுவதை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

முதன்முதலில் போட்டி நடைபெற உள்ளதால் ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் நிலவிவந்தநிலையில், இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவக்க விழா நடைபெற்றது. கண்ணைக் கவரும் வண்ண விளக்குகள் வெளிச்சத்தில், இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர். என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மத்திய இணையமைச்சர் எல் முருகன், சினிமா பிரபலங்கள், செஸ் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

image

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரவேற்பு பாடல் டீசரை ரஜினிகாந்த் வெளியிட்ட நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் அவர் கலந்துகொண்டார். இதேபோன்று நடிகர் கார்த்தி, பாடலாசிரியர் வைரமுத்து, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

image

மேலும் கமல்ஹாசனின் கம்பீர குரலில், தமிழர்கள் பெருமையை ஆடியோவாக பதிவுசெய்து ஒலிக்கவிட்டு அதற்கேற்ப கலைஞர்கள் நடித்து காண்பித்த விதம் அனைவரையும் ரசிக்க வைத்தது. ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே’ என்ற அவரது காந்த குரல் ஆரம்பித்து, தமிழர்களின் பல நூறு ஆண்டுகால வரலாற்றை பின்னணியாக கொண்ட நிகழ்த்துக் கலை நடனம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

இதேபோல் இளம் வயதிலேயே இசைத்துறையில் சாதனை படைத்து வரும் லிடியன் நாதஸ்வரத்தின் பியானோ இசை நிகழ்ச்சி விழாவின் ஹைலட்டாக அமைந்தது. கண்ணைக் கட்டிக் கொண்டும், ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை அவர் வாசித்ததும் பார்வையாளர்களை மெய்சிலிக்க வைத்தது.

அதேநேரத்தில் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் தெருக்குரல் அறிவு, மற்றும் பின்னணி பாடகி தீ பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் இசைக்கப்பட்டு அதற்கேற்ற நடனம் ஆடப்பட்டது. இந்தப் பாடலை தீ பாடியநிலையில், மாரியம்மாளும் கலந்துகொண்டார். இதுமட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.