கடந்த 2021 – 22 நிதியாண்டில் சம்பாதித்த பணத்துக்கு வருமான வரி செலுத்த கடைசி தேதி 2022 ஜூலை 31.

ஒரு நிதியாண்டில் 2.5 லட்சம் ருபாய்க்கு மேல் சம்பாதித்திருப்பவர்கள் மட்டுமே வருமான வரிப் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதிக மதிப்பு கொண்ட ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களும் வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்து விடுவது நல்லது. இல்லையெனில் வருமான வரித் துறையிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பிருக்கிறது.

வருமான வரி தாக்கல் செய்பவர்களில் பலரும் Form 26 AS என்கிற படிவத்தை பதிவிறக்கம் செய்து பார்த்திருப்பீர்கள். அதில் Part E – Details of SFT Transaction என ஒரு தலைப்பில் சில பரிவர்த்தனைகளை பதிவு செய்திருப்பார்கள் அல்லது காலியாக இருக்கும். யாருடைய படிவத்திலாவது ஏதாவது பரிவர்த்தனைகள் இருந்தால், அவர்கள் கட்டாயம்  வருமான வரிப் படிவத்தைப் பூர்த்தி செய்வது நல்லது.

image

SFT என்றால் Statement of Financial Transaction என்று பொருள். இதில் அதிக ரொக்கத்தைப் (Cash) பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அதிக பணமதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளைப் பட்டியலிடுவார்கள். அப்படி வருமான வரி பட்டியலிடும் பணப்பரிவர்த்தனைகள் என்ன?

நாம் காய்கறி, மளிகை சாமான் வாங்குவதை எல்லாம் இதில் பட்டியலிடுவார்களா? வீடு வாங்குவது விற்பது, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் எல்லாம் பட்டியலில் இருக்குமா? வாருங்கள் பார்ப்போம்.

1. ஒரு நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிடி, பே ஆர்டர்கள், வங்கி காசோலைகள் போன்றவைகளை ரொக்கம் கொடுத்துப் பெற்றால் அந்த பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் இங்கே பட்டியலிடப்படும்

2. மொபைல் வேலட்டுகள் போன்ற நிதி சார்ந்த, ஆர்பிஐ அனுமதித்துள்ள ப்ரீபெய்ட் சாதனங்களில் ஒரு நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தைச் செலுத்தி இருந்தால் அவருடைய பரிவர்த்தனைகள் இதில் பட்டியலிடப்படும்.

3. ஒரு நபருக்குச் சொந்தமான, ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகளில் (Current Account) இருந்து ஒரு நிதியாண்டுக்குள் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் அப்பரிவர்த்தனைகள் இங்கு எதிரொலிக்கும்

3.1. பேரர் செக் குறித்து இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். காசோலை எடுத்துச் செல்லும் நபருக்கே பணத்தை ரொக்கமாக கையில் கொடுப்பது தான் பேரர் செக். அப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்புக் கணக்கிலிருந்து ஒரு நிதியாண்டுக்குள் 50 லட்சம் ரூபாய் பணம் கேஷாக எடுக்கப்பட்டிருந்தால் (Withdrawal) அப்பரிவர்த்தனைகள் இங்கே பிரதிபலிக்கும்.

4. ஒரு நபர் பயன்படுத்தி வரும் அனைத்து வங்கிக் கணக்குகளில், ஒரு நிதியாண்டுக்குள் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் (Cash) டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் அப்பரிவர்த்தனைகளை இங்கே பார்க்கலாம்.

5. வங்கிகளில் 1 – 10 ஆண்டுகள் வரை பல டைம் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் நடைமுறையில் உள்ளன. அப்படிப்பட்ட ஃபிக்ஸட் டைம் டெபாசிட்களில் (ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட) ஒரு நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்திருந்தாலும், வருமான வரித் துறைஅதை இங்கே சுட்டிக் காட்டும்.

6. ஒரு நபர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கான பில் தொகையாக, ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகவோ, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் யூபிஐ, நெட் பேங்கிங் என எந்த வழிமுறையில் செலுத்தி இருந்தாலும் அப்பரிவர்த்தனைகள் இங்கே வந்து சேரும்.

7. பாண்டுகள் மற்றும் கடன்பத்திரங்களை வாங்க, ஒரு தனி நபர், ஒரு நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தால் அந்த பரிவர்த்தனைகள் இங்கே வந்துவிடும்.

8. ஒரு நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளை வாங்க செலவழித்தால் அந்த பரிவர்த்தனை விவரங்களும் இங்கே காட்டப்படும்.

9. ஒரு நபரிடமிருந்து ஒரு நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு அல்லது விலைக்கு மேல் பங்குகளை பை பேக் செய்தால் அந்த பரிவர்த்தனைகள் வருமான வரித் துறையின் பார்ம் 26 ஏ எஸ் படிவத்தில் பிரதிபலிக்கும்.

10. ஒரு நபரிடமிருந்து, மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்களை வாங்க, ஒரு நிதியாண்டில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கினால் அப்பரிவர்த்தனைகள் சிறப்பு பரிவர்த்தனைகளாகக் கருதப்பட்டு இங்கே பிரதிபலிக்கும்.

11. ஒரு நிதியாண்டில் வெளிநாட்டு கரன்சியை விற்று 10 லட்சம் ரூபாய்க்கு மேல் திரட்டினால் அந்த பரிவர்த்தனைகளும் அதிக மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளாகத்தான் கருதப்படும். இதில் ஃபாரெக்ஸ் கார்டுகள், டிராவலர் செக் போன்றவைகளும் அடக்கம்.

12. ஒரு நிதியாண்டில் 30 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் அசையாச் சொத்துக்களை வாங்குவது விற்பது இரண்டுமே அதிக மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளாகக் கருதப்பட்டு பார்ம் 26 ஏ எஸ்-ல் காட்டப்படும்.

13. ஒரு விற்பனை இரண்டு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்கத்தில் நடந்தால் அப்பரிவர்த்தனைகள் அனைத்தும் இங்கு பிரதிபலிக்கும்.

image

இந்த பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் ஏன் வருமான வரிப் படிவத்தைச் தாக்கல் செய்யச் சொல்கிறார்கள்? ஏன் ஐடி நோட்டீஸ் வரலாம் என பயமுறுத்துகிறார்கள்.

நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளதுபோல லட்சக் கணக்கில் ரொக்கமாக பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டிருக்கிறீர்கள், ஆனால் வருமான வரிப் படிவத்தைச் செலுத்தவில்லை என்றால் உங்களுக்கு இப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள எங்கிருந்து பணம் வந்தது என வருமான வரித் துறைக்குத் தெரியாது. எனவேதான் அந்தந்த நிதியாண்டுக்கான வருமான வரிப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்துவிட்டால் வருமான வரித் துறையினர் அதிலிருந்து விவரங்களைப் பார்த்துக் கொள்வர். அப்படி வருமான வரி தாக்கல் செய்யப்படாதபோது, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படுகிறது.

எனவே மேற்கூறிய பரிவர்த்தனைகளை செய்தவர்கள் ஐடி நோட்டீஸ் வராமல் இருக்க இப்போதே ஐடிஆர் படிவத்தை நிரப்பி சமர்பித்துவிடுங்கள். சந்தேகம் உள்ளவர்கள் உங்கள் பட்டையக் கணக்காளர்களை அணுகி  விரைந்து ஐடிஆர் படிவத்தை தாக்கல் செய்யவும்.

-கெளதம்

இதையும் படிக்க: கடிகாரத்தின் முதல் டிக் மெதுவாக இருப்பது ஏன்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.