வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

அன்று ஆடி வெள்ளி. சாதாரண நாட்களிலேயே குவியும் கூட்டத்தால் திணறிப்போகும் காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில் பகுதி அன்று ஆடிவெள்ளி என்பதால் காலை ஆறரை மணிக்கே பக்தர்களின் வருகையால் சைக்கிள்கூட நுழைய முடியாதபடி வாகனங்களின் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய் எள்போட்டால் போட்டால் எள் கீழே விழாத அளவு கட்டுப்படுத்த முடியாத கூட்டம் திமிறிக்கொண்டிருந்தது.

கோயிலின் கோபுரவாசலுக்கு நேரெதிரே இருந்த தெருவிலிருந்த யாத்ரிநிவாஸிற்கு அடுத்ததாய் கிராமத்து வீட்டின் தோற்றத்தோடு காணப்பட்ட அந்த சிறிய ஓட்டுவீட்டின் முகப்பில் மாமா-மாமி மெஸ் என்று எழுதப்பட்டிருந்த போர்டு தொங்கியது. இரட்டைத் திண்ணையோடுகூடிய வீடு. உள்ளேயிருந்து காபியின் மணமும் இட்லி சாம்பாரின் மணமும் வீட்டின் திறந்திருந்த ஜன்னலின் வழியாக வெளிவந்து அந்தக்காலை ஆறரை மணிக்கே அங்கு கூடியிருந்த பக்தகோடிகள் பலபேருக்குப் பசியைத் தூண்டியது.

காஞ்சிபுரம்

மெஸ்ஸின் வாசல் கதவு திறக்கப் படவில்லை.சரியாய் ஏழரை மணிக்குதான் திறக்கப்படும். ஏழரை மணியிலிருந்து ஒன்பதரை மணிவரைதான் காலை டிபன் காபி

வியாபாரம்..டிபனும்.. இட்லி.. சாம்பார்.. சட்னி.. மெதுவடை.. காபி மட்டும்தான்.வேறு எதுவும் கிடையாது.காலை ஏழரைமணி தாண்டி கதவு திறந்திருக்காது. அதற்குள்ளாகவே தயாரிக்கப்பட்ட டிபனும் காபியும் தீர்ந்துவிடும். அத்தனை ருசி.. மதிய சாப்பாடு காலை பத்தரைமணிக்கே தொடங்கி ஒருமணிக்கெல்லாம் முடிந்து கதவு சாத்தப்பட்டுவிடும். மாலை டிபனெல்லாம் இல்லை .இரவு மாதப்பணம் கட்டும் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் எளிய உணவு வழங்கப்படும். மெஸ்ஸின் வாசலில் கதவு எப்போது திறக்கப்படும் என்று காத்திருந்தார்கள் பலபேர்.

மெஸ்ஸின் உள்ளே இருந்த அறையொன்றில் ஈஸிசேரில் தலைசாய்த்து அமர்ந்திருந்தார் முத்துசாமி. வயது எண்பதிருக்கும். தாகூரின் தாடிபோல் போல் கலர்போடாத பஞ்சு மிட்டாய்போல் வெளுத்த பொசுபொசுவென்று அடர்ந்து நீண்ட தாடி.. கத்தையாய் வெண்ணிற மீசை..

வற்றி மெலிந்த தேகம். பஞ்சடைந்த பார்வை குறைந்த கண்கள். நெற்றியில் பட்டையாய் விபூதி. கண்களை மூடி தலையை அண்ணாந்தபடி சேரில் சாய்ந்து அமர்ந்திருந்த முத்துசாமியின் கண்களின் ஓரங்களிலிருந்து கண்ணீர் கோடாய்க் கன்னங்களில் இறங்கியிருந்தது.தாயே காமாக்ஷி.. அம்பாளின் நாமத்தை உச்சரிக்கும் போதே தொண்டை அடைத்தது.

குளியலறையிலிருந்து ஸ்னானத்தை முடித்துவிட்டு வெளியேவந்தார் மங்களா மாமி. நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டு சுவாமி அலமாரியிலிருந்த காமாக்ஷி விளக்கை ஏற்றிக்கொண்டே சிவம்பவது கல்யாணம் ஆயுளாரோக்ய வர்த்தனம் மமதுக்க வினாயசாய காலைதீபம் நமோநம:என்று சொல்லிக்கொண்டே விளக்கிற்குக் குங்குமமிட்டுவிட்டு நமஸ்கரித்து விட்டு காமாக்ஷி என்றபடி எழுந்தவர் காபி கொண்டுவரேன் என்று சொல்லிக்கொண்டே அறையின் கதவைத்திறந்து கொண்டு ஹால் என்று சொல்லப்படும் கூடத்தில் கால்வைத்தார்.

மாமா- மாமி மெஸ்ஸுக்கு சாப்பிட வருபவர்கள் அமர்ந்து சாப்பிட வசதியாக எதிரும்புதிருமாய் பத்து பத்து நாற்காலிகளும் நீண்ட சாப்பாட்டு மேஜையும் போடப்பட்டிருந்தன.ஒரே நேரத்தில் இருபது பேர் மட்டுமே சாப்பிடமுடியும்.ஹாலை ஒட்டினாற்போல் சமயலறையும்.. வலதுபுறத்தில் நீண்ட வாஷ் பேசினில் கைகழுவ மூன்று பிளாஸ்டிக் குழாய்களும் இருந்தன.மெஸ் சிறிய இடம்தான் என்றாலும் வெகுசுத்தமாய் இருந்தது.

இட்லி

காலை டிபன் தயாராகிக் கொண்டிருந்த சமையலறைக்கு மாமி சென்றப்போது மெஸ்ஸில் சமைக்கும் வெங்கியும் சுப்புவும் வேலையில் வெகுகவனமாயிருந்தார்கள். பாத்திரம் கழுவும்பெண் நறுக்கிய வாழையிலைக் குப்பைகளை பொறுக்கி கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள்.

மாமியைப் பார்த்ததும் மூன்றுபேருமே கையெடுத்துக் கும்பிட்டார்கள். விடிந்தும் விடியாத அந்த காலைநேரத்தில் மாமியின் லட்சுமிகடாக்ஷமான முகத்தைப் பார்ப்பதே ஒரு கொடுப்பினைதான். ஆனாலும் மாமியின் முகத்தில் எப்போதும் மிகலேசாய்ப் படர்ந்திருக்கும் வேதனையை மாமியைப் பற்றி அறிந்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.

என்னப்பா வெங்கி..சுப்பு.. மணி ஆறேமுக்காலாயிடுத்தே எல்லாம் ரெடியா.. ஆயிடுத்துமாமி..பாலும் அடுப்புல காஞ்சுண்ருக்கு..ரெடி ரெடி எல்லாம் ரெடி..என்றான் சுப்பு..வயதில் ரொம்பவும் சின்னவனென்பதால் எல்லோரிடமும் அவன் அவனிவன்தான்.

சரி.. மாமாக்கும் எனக்கும்னா காபி தரியா. .மாமா காபிக்குக் காத்துண்ருக்கார்.

பேஷா..இரண்டு பித்தளை டம்ளர்களில் காபியை நிரப்பி டபராவில் வைத்து மாமியிடம் நீட்டினான் வெங்கி.

காபியை கணவர் முத்துசாமி அமர்ந்திருந்த ஈஸிசேரின் அருகில் வைத்துவிட்டு அறையின் கதவைச்சாத்திவிட்டுத் திரும்பிவந்த மாமி கணவரின் வலதுபக்கமாய் வந்து தரையில் அமர்ந்து கொண்டு கணவருக்கான காபியை ஆற்றத் தொடங்கினார்.

மங்களா..

ம்..

ஏ..என்னமோபோல இருக்க..

ப்ச்..காலேல படுக்கேல எழுந்து ஒக்காந்ததுலேந்து என்னமோ மனசே சரியில்ல.. அடிவயத்துல இனம் புரியாத சங்கடம்.. குபீர்குபீர்னு ஏதோவந்து நெஞ்சநெஞ்ச அடைக்கிறது.. இன்னிக்கு ஏதோ நடக்கப்போறாமாரி தோனிண்டே இருக்கு.. அது நல்லதா கெட்டதா என்ன நடக்கப்போருதுன்னு தெரீல..

குரல் கம்ம விம்மினார் மங்களாமாமி.

மங்களா.. அழைத்தபடியே வயோதிகத்தால் நடுங்கும் வலது கரத்தால் மாமியின் தலையைக் கோதிவிட்டார் முத்துசாமி. அழறியா

என்ன.. அழாத மங்களா.. இனிமே நமக்குப் புதுசா கஷ்டமும் வேதனையும் வரதுக்கு என்ன இருக்கு.. அம்பது வருஷம் முன்னாடி ஏழுவயசு புள்ளைய உயிரோட தொலச்சோம்.. அடுத்த நாலுவருஷத்துல மூணுவயசு பொண்ண காலனுக்குப் பறிகுடுத்தோம்.. அம்பது வருஷமா நடபொணமாதானே வாழறோம்.. நாம. இத்தன வருஷமா அனுபவிக்கிற கஷ்டத்தவிட வேதனையைவிட துக்கத்தவிட அதிகமான வேதனையும் துக்கமும் என்ன வந்துடப்போறுது.. சொல்லு மங்களா..

முத்துசாமியின் எண்பது வயது தேய்ந்த தேகம் குலுங்கியது.

Representational Image

மங்களா எனக்குக்கூட காலேலேந்து, என்னமோ தெரீல நம்மபுள்ள ராமதுரையோட ஞாபகம் மனசுல வந்துவந்து மோதறுது. எப்பவுமே அவனோட நெனப்ப சொமந்துண்டு – தான் நடமாடிண்ருக்கோம்.. ஆனாலும் காலேலேந்து மனச ஏதோ பண்ணீண்டேருக்கு.. மங்களா..அவன் இத்தன வருஷமா எங்க இருப்பான்.. சௌக்கியமா இருப்பானா..உயிரோடதானே இருப்பா.. காலேல அவ என்ன அப்பான்னு கூப்டாப்புல இருந்துது மங்களா.. இப்ப அவுனுக்கு அம்பத்தேழு வயசிருக்கும்.. கும்பகோணம் மகாமகத்துலதானே நாம அவன தொலச்சோம்.. கண்ணிமைக்குற நேரத்துல காணாபோய்ட்டானே..போலீசும் நாமளும் எத்தன வருஷம் தேடீருப்போம்.. ஊர்ஊரா ஜாகமாத்தி மாத்தி புள்ளையத் தேடித்தேடி.. கடசியா காஞ்சிபுரம்வந்து பதினேழு வருஷமாச்சு..காமாக்ஷியே கதின்னு கெடக்கோம்.. கண்ணத்தொறக்கிலியே காமாக்ஷி..கெடக்கிலியே நம்மபுள்ள.. நாமதான் எப்பேற்பட்ட பாவிங்க..உயிரோட புள்ளையத் தொலைச்சு.. சாதாரண ஜொரத்துக்கு பொண்ண சாகக்குடுத்து.. ஒருவர் கையை ஒருவர்பற்றி மாமாவும் மாமியும் அழ காபி ஆறிப்போய்க் கிடந்தது.

கச்சபேஸ்வரர் கோயிலைக்கடந்து குறிப்பிட்ட அந்தத் தெருவுக்குள் நுழைந்தமே மேற்கொண்டு செல்லமுடியாமல் போலீஸ்காரரால் நிறுத்தப்பட்டது அந்தக்கார். காமாக்ஷி கோயிலுக்குப் போறீங்களா? எறங்கி நடந்துதா போகணும்..கார் மேக்கொண்டு போகமுடியாது. போலீஸ்காரர் சொன்னதும் காருக்குள்ளிருந்து அறுபதைத்தொடக்கூடிய வயதிலிருந்த ஒரு ஆணும் முப்பது வயதிருக்கலாம் ஒரு வாலிபனும் அவர்களைத்தொடர்ந்து வாலிபனின் மனைவியாய் இருக்கவேண்டும் ஒர் இளம் வயதுப்பெண் தோளில் ஒன்னரை வயதிருக்கலாம் பெண்குழந்தையைச் சாய்த்தபடி அடுத்தடுத்து இறங்கினார்கள். பூமியில் கால் வைத்ததுமே உடல் ஒருமுறை சிலிர்த்தது வாலிபனின் தந்தைக்கு.

சந்தோஷ்.. என்னமோ தெரியல

காஞ்சிபுரம் மண்ண மிதிச்சதுமே ஒடம்பு சிலிர்த்துப்போச்சு.. எல்லாம் காமாக்ஷியோட மகிம.. என்னதான் சிங்கப்பூர்ல இருந்தாலும் சொந்தநாட்டுக்கு வந்தா சொர்க்கத்தப் பாத்தாப்ல அத்தன சந்தோஷமா இருக்கு என்றார்.

ஆமாம்ப்பா என்றான் சந்தோஷ்.

உலகளந்தபெருமாள் கோயிலைத் தாண்டி தெருமுனையிலிருந்து இடதுபக்கம் திரும்ப அண்ட சராசரங்களையும் ஆள்பவள்..

ஜகன்மாதா.. கருணையே வடிவான அன்னை காமாக்ஷி வீற்றிருக்கும் திருக்கோயில் வெகுகம்பீரமாய் நின்றிருக்க உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாய் பக்தர்களின் கூட்டம் அலைமோதியபடி, ஜனவெள்ளத்தில் நீந்தியபடி நடந்து கொண்டிருந்தார்கள் அந்த வயதானவரும் அவரின் மகனும் மருமகளும். மருமகளின் தோளில் சாய்ந்திருந்த குழந்தை பசியோ என்னவோ சிணுங்கியது.

Kanchipuram

இங்குமங்கும் பார்வையைச் செலுத்தியபடி நடந்துகொண்டிருந்த வயதானவரின் கண்களில் கிரிடிரேடர்ஸ்.. யாத்ரிநிவாஸ்.. மாமா-மாமி மெஸ் என்ற போர்டுகள் பட.. சந்தோஷ்.. நாம காமாக்ஷி அபிஷேகம் முடிஞ்சதும் தோபாரு மாமா-மாமி மெஸ்னு போட்ருக்கே..ப்ராமணா மெஸ்- ஸாட்டம் தோன்றது.. இங்க சாப்டுவம்.ஹோட்டல்ல சாப்ட்டு வயத்தகெடுத்துக்க வேண்டாம்.. ஆத்துசாப்பாடா சாப்டுவோம் என்றார்.

சரிப்பா என்றான் சந்தோஷ்.

டோக்கன் வாங்கிக்கொண்டு செருப்பை விட்டுவிட்டு கோயிலுக்குள் நுழைந்தார்கள்.

கோயில் வாசலியே கால்நனைத்து சுத்தப்படுத்திக் கொள்ள தண்ணீரைத் தேக்கி வைத்திருந்தது கோயில் நிர்வாகம்.

கோயில் அலுவலகம். எம்பேரு ராமதுரை.. சிங்கப்பூர்லேந்து வறோம்.

காமாக்ஷிக்கு அபிஷேகம் செய்ய கணபதி குருக்கள் மூலம் பணம் கட்டிருக்கோம். செல்லிலிருந்த பணம் கட்டிய ரசீதை அலுவலக மேலாளாரிடம் காண்பிக்க.. வாங்கோ வாங்கோ.. கணபதி மாமா சொல்லீண்ருந்தார் நீங்க வருவேள்னு.. நீங்க ஒம்பது மணி பேச்சுல இருக்கேள்.. மணி இப்ப எட்ர.. இன்னும் அரமணி இருக்கு..

கணபதி மாமாக்கு தகவல் சொல்றேன்.வந்து அழச்சுண்டு போவார். திவ்யமா அபிஷேகம் செஞ்சுவெப்பார். சிங்கப்பூர்லேந்து வந்து சிரத்தையா செய்யறேள். காமாக்ஷி அம்பாள் குடும்பத்த அமோகமா வெப்பா.. சொல்லிக்கொண்டே கணபதி குருக்களுக்கு போன்செய்ய.. அடுத்த ஐந்தாவது நிமிடம் குருக்கள் வந்து இவர்களை காமாக்ஷி சந்நிதானம் நோக்கி அழைத்துச் சென்றார்.

சந்நிதானத்துக்கு நுழைவதற்கான வாயிலுக்கு முன்புறம் அபிஷேகத்துக்குப் பணம் கட்டியிருந்த பல குழுக்கள் காத்திருந்தன. சார்.. ஆம்பளேல்லாம் சட்ட பனியன கழட்டிடனும்.. வெத்துமார்போடதான் சந்நிதானத்துக்குள்ளபோணும் என்றார் கணபதி குருக்கள்.

நெளிந்தான் அபிஷேக்.. அப்பா..என்னப்பா இது என்றான். பரவால்லடா.. எதுமொறையோ அப்பிடிதா செய்யனும்.. சித்த நாழிதானே என்றார்.

கர்பக்கிருகத்துக்கு வெளியே காமாக்ஷியின் எதிரே முப்பது பேருக்குமேல் நெருக்கியடித்து அமர்ந்திருந்தார்கள். சிங்கப்பூர் குடும்பமும் அவர்களோடு அமர்ந்திருந்தனர். வெளியிலிருந்து அம்பாளைப் பார்ப்பவர்களுக்கும் தியானமண்டபத்தில் நின்று கொண்டு தரிசிப்பவர்களுக்கும் மறைக்கக்கூடாது என்பதால் யாருக்கும் நிற்க அனுமதி இல்லை.

அம்பாளைப்பார்த்தபடி அமர்ந்திருந்த சிங்கப்பூர் வயதானவருக்கு ஏனோ கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் கன்னங்களில் இறங்கியது. அம்மா.. காமாக்ஷி என்று வாய்விட்டு வேகமாய் சொன்னார். அம்மா என்ற அந்த வார்த்தையை அவர் நாக்கு உச்சரித்தபோது சட்டென கடைசியாய் ஏழுவயதில் தன் தாயிடம்.. அம்மா.. பலூன் வாங்க காசு குடும்மா என்று கேட்ட நினைவும் தாயின் கலங்கலான உருவமும் தெரிந்து மறைந்தது. ஐம்பது வருடம் கடந்துபோயும் ஆழமாய் அம்மாவின் நினைவு.. தாயைமறப்பது அவ்வளவு எளிதா என்ன..அம்மா காமாக்ஷி என்றபடி கலங்கிய மனதோடும் கண்களோடும்.. அகிலாண்ட நாயகியை அவனியைக்காப்பவளை அருள் மழை பொழிபவளை தன்னைநாடி வந்தவர்க்கு அவர்கள் வேண்டுவதை வேண்டியபடி தருபவளை கைகள் கூப்பி வணங்கினார். என்னவோ தெரியவில்லை அன்னைகாமாக்ஷி தன்னைப்பார்த்து முன்முறுவல் பூத்துச் சிரிப்பதுபோல் தோன்றியது அவருக்கு. அம்பாளின் சிரிப்பின் அர்த்தமதை யாரால் சொல்ல முடியும். அவள் மட்டுமேயல்லவா அறிவாள்.

காமாட்சி அம்மன் கோயில்

அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கப் போவதை டாண்..டாண்..டாண் என்று கம்பீரத்தோடு ஒலியெழுப்பி கோயில் காண்டாமணி அறிவித்தது.

அபிஷேகம் செய்ய பணம் கட்டியிருந்த குடும்பத்தலைவர் அல்லது தலைவிக்கு சங்கல்பம் செய்துவைக்கபட்டு அபிஷேகம் ஆரம்பமானது. அதிக எண்ணிக் கையிலான திரவியங்கள் அபிஷேகத்தில் இடம்பெறாது என்பதால் அரைமணி நேரத்தில் அபிஷேக ஆராதனைகள் முடிந்து கற்பூரதீபாராதனை முடிந்துவிடும். இப்போதும் நாதஸ்வர மேளதாளங்களோடு காண்டாமணி ஒலிக்க பக்தர்களின் தாயே காமாக்ஷி… காமாக்ஷி என்ற பக்தகோஷம் விண்ணைமுட்ட தீபாராதனை முடிந்தது.

அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து சந்நிதானத்திற்குள் இருக்கும் அரூபலெஷ்மிக்கு.. அங்கே கொட்டிக்கிடக்கும் குங்குமத்தை வலதுகையால் எடுத்து இடது கைக்கும் கொஞ்சம் மாற்றி இன்ன உருவமென்று கண்டு கொள்ளமுடியா சிலை(அரூபம்) உருவத்தின் மீது பூசிவிட்டு மனமுருக வேண்டிக் கொண்டு ஒரு சிட்டிகை குங்குமத்தை எடுத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் ஸ்தம்பத்தின்(கம்பம்) அடியிலிருக்கும் சின்ன துவாரத்தில் போட்டுவிட்டு அந்த கம்பத்தை ஆலிங்கனம் செய்து கொண்டனர். குழந்தைபாக்கியம் வேண்டுவோர் இந்தக் கம்பத்தை ஆலிங்கனம் செய்தால் கட்டாயம் குழந்தை பாக்கியம் கிடைக்கு மென்பது ஐதீகம். ஆனாலும் சிறுபிள்ளைமுதல் மிகவயதானவர்கள் வரை எல்லோருமே இதனைச் செய்கிறார்கள்.

எல்லா நடைமுறைகளையும் முடித்துவிட்டு சிங்கப்பூர் குடும்பம் கோயிலின் பிராகாரம் வந்தபோது மணி பத்தாகியிருந்தது. மூன்று முறை பிராகாரம் சுற்றி தங்க கோபுரம் தரிசித்து குளத்தைப் பார்த்து ரசித்து கொடிமரதின் கீழ் நமஸ்கரித்து மீண்டும் காமாக்ஷியை மனமுருகி வேண்டி எழுந்தாகி விட்டது.

அப்பா பசிக்கில.. ஆரம்பித்தான் சந்தோஷ்..

கோயிலைவிட்டு வெளியே செல்லும் முன் நிமிடநேரம் உட்கார்ந்து எழ வேண்டுமென்பது சிலரின் நம்பிக்கை என்பதால் பிராகாரத்து மண்டபமேடையில் அமர்ந்து எழுந்தார்கள்.

அபிஷேக் பசிக்குதா..பிரசாதம்னா சாப்டேன். சின்னச்சின்ன டப்பால சக்கர பொங்கல் புளியோதரை தட்டைசீடை பிரசாதமா குடுத்துருக்கா..சாப்டறியா..

இல்லப்பா..குங்குமம் இட்டுண்டாச்சு

இப்பக்கி அதுபோதும்.

இவர்களைக் கடந்து குருக்கள் ஒருவர் போக..அவரை அழைத்தார்

சிக்கப்பூர் பெரியவர்.

குருக்கள்ஜி.. நல்ல சாப்பாடா எங்க கிடைக்கும்.

சாப்பாடு..ம்..பக்கத்துலயே மாமா-மாமி மெஸ்னு ஒன்னு இருக்கு.. தஞ்சாவூர்க்காரா..அதுவும் கும்பகோணம்..கேக்கனுமா சமயலுக்கு.. ருசின்னா ருசி.. அப்டியோரு ருசி..அங்கபோய் சாப்டுங்கோ.. நான் கேரண்டி.. சொல்லிவிட்டு நகர்ந்தார் குருக்கள்.

தஞ்சாவூர்க்காரா.. அதுவும் கும்பகோணம் என்ற குருக்களின் வார்த்தைகள் காதில் விழுந்ததுமே உடம்பு ஓர்முறை குலுங்கி.. பந்துபோல் ஏதோவொன்று அடிவயிற்றிலிருந்து கிளம்பி நெஞ்சை வந்து அடைத்தது சிங்கப்பூர் பெரியவருக்கு. கும்பகோணமும் மகாமகமும் அப்பாவின் முகமும் அம்மாவின் முகமும் ஒருவயதே ஆகியிருந்த தங்கை அலமேலுவின் நினைவும் மனதில் மோதின. கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. பெரியவனாகி விபரம் தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து எத்தனை முறை சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்து ஊர்ஊராய் அப்பா அம்மாவைத் தேடியிருப்போம்.. ஏழுவயதில் மகாமகக்கூட்டத்தில் பலூன் வாங்க அம்மாவிடம் காசுவாங்கிக்கொண்டு பலூன்காரரை அணுகிய நேரத்தில் தீடீரென மயக்கம் வருவருவதுபோல் உணர்ந்த நேரத்தில் யாரோ தன்னைத் தூக்குவதுபோல் தோன்றியது.. அவ்வளவுதான் தெரியும்.. அதன் பிறகு கண்விழித்தபோது முகமறியா ஆட்களோடும் இடத்தோடும் வாழ்க்கை மாறிப்போனது. அம்மா அப்பாவை நினைத்துநினைத்து அழுதநாட்கள் கொடுமையானவை.

இதோ காஞ்சிபுரம் வந்து காமாக்ஷியை தரிசித்த நேரம் இவளாவது.. தன்னைப் பெற்றவர்களைத் தன்னோடு சேர்க்கமாட்டாளா என்று மனது தவித்தது. தனக்கே வயது அறுபதாகப்போகும் நேரம்.. அப்பா அம்மா இன்னும் உயிரோடு… நினைக்கவே அஞ்சியது நெஞ்சம்.

தாயே காமாக்ஷி.. நீ என்ன செய்ய நினைக்கிறன்னு யாருக்குத் தெரியுமென்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே தளர்ந்த நடையோடு கோயிலைவிட்டு வெளியேவந்தார் பெரியவர்.

மாமா-மாமி மெஸ்..உள்ளே நுழைந்ததுமே சிங்கப்பூர் குடும்பத்தை வீட்டுக்கு வருபவர்களை முகம்மலர வரவேற்பதைப்போல் வரவேற்றார் வெங்கி. இலைபோடப்பட்டு உணவுபரிமாறப்பட்டது. காசு வாங்குகிறோம் சாப்பாடு போடுகிறோம் என்றில்லாமல் பார்த்துப்பார்த்து சிரித்தமுகத்தோடு பரிமாறினார்கள். சாம்பார் பொரியல் கூட்டு ரசம் என்று ஒவ்வொன்றுமே தன் அம்மாவின் கைப்பக்குவம் போலவே இருப்பதாகத்தோன்றியது பெரியவருக்கு. ரசித்து ரசித்து ருசித்து ருசித்து சாப்பிட்டார். எங்கம்மா சமச்சா மாதிரியே இருக்கு.

எங்கம்மாவும் இப்டிதான் ருசியா ப்ரமாதமா சமைப்பா..சாப்பாடு ரொம்ப அருமை.. ரொம்ப வருஷமாச்சு எங்கம்மா சமையல்மாரி ஒரு சாப்பாட சாப்ட்டு என்றார் வெங்கியிடம்.

பாராட்டுக்கு நன்றி சார்..இந்த மெஸ்ஸோட ஓனர் மாமி பிரமாதமா சமைப்பா.. அவாதான் எனக்கும் சுப்புக்கும் சமைக்கக் கத்துக் குடுத்தது.. அவா குடுத்த ட்ரெயினிங்தா நாங்க இப்டி சமைக்கக் காரணம்.. இப்பமாமிக்கு வயசாயிடுத்து.. மாமாவுக்கும் முடியல அவரையும் மாமி கவுனிச்சுக்க வேண்டிருக்கு.. அதால மாமி இப்ப சமைக்றதில்ல.. மேற்பார்வையோடு சரி என்றார் வெங்கி.

இட்லி

ஓ..அவா இப்ப எங்க இருக்கா..அவாம் தூரக்கயா..

இல்ல..இல்ல..தோ..கதவு சாத்திருக்கே அந்த ரூம்லதான் மாமாவும் மாமியும் இருக்கா..

நா அவாள பாக்கமுடியுமா.. அவாளப்பாத்து நமஸ்காரம் பண்ணா தேவலாம்போல இருக்கு.. வயசானவாங்கறேள் அவா ஆசீர்வாதம் கெடைக்க குடுத்து வெச்சுருக்கணுமில்லையா.. என்றார் சிங்கப்பூரார்.

அதுக்கென்ன பேஷா செய்யலாம்..

நாம்போய் அவாளண்ட கேட்டுண்டு

வரேன் என்றபடி ரூமுக்குள்சென்று

திரும்பிய வெங்கி… சார்..ஒங்கள வரச்சொன்னா..நீங்க உள்ளபோய்ப் பாருங்கோ என்று சொல்லிவிட்டு அடுத்த பந்திக்குப் பரிமாறச் சென்றார்.

லேசாய்க் கதவைத்திறந்து உள்ளே கால்வைத்த பெரியவருக்கு உடலில் மின்சாரம் பாய்ந்ததுபோல் ஓர் உணர்வு.எதிரில் தெரிந்த சுவற்றில் ஆளுயரத்தில் காமாக்ஷியின் மெகாசைஸ் படமும் அதனருகே அதே சைஸில் காஞ்சி மகாபெரியவா படமும் ஆக்ரமித்திருக்க.. காமாக்ஷியையும்.. மகாபெரியவாளையும் கைகூப்பி வணங்கியபோது கோயிலில் கர்பக்கிரகத்துக்குள்ளிலிருந்த அவளை வணங்கியபோது எப்படித் தன்னைப்பார்த்து முறுவலித்துச் சிரிப்பதுபோல் தோன்றியதோ அப்படியே இப்பொழுதும் காமாக்ஷி தன்னைப்பார்த்துச் சிரிப்பதுபோல் தோன்றியது சிங்கபூராருக்கு.

ஈஸிசேரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார் முத்துசாமி உள்ளே நுழைந்தவர்களின் காலடி சப்தத்தைக் கேட்ட முத்துசாமி சேரில் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

கண்கள் மசமசவென்று தெரிந்ததால் குத்துமதிப்பாய் வாங்கோ..வாங்கோ என்று அழைத்தார்.. ஒக்காருங்கோ என்றார்.

நமஸ்காரம் என்றபடியே சின்னதாய் கிடந்த பெஞ்ச் ஒன்றில் சிங்ப்பூர் பெரியவரும் அபிஷேக்கும் அமர குழந்தையை மடியில் வைத்தபடி தரையில் அமர்ந்தாள் மருமகள்.

அடர்ந்த தாடி மீசைக்குள் தேய்ந்துபோன முகத்தோடு ஈஸிச்சேரில் அமர்ந்திருந்த கிழவரை எங்கோ எப்போதோ பார்த்தமாதிரி இருந்தது சிங்கப்பூர்க்காரருக்கு.

ஆனால் எங்கே எப்போது என்று புரியவில்லையே தவிற..மனதில் ஓர் தவிப்பு தோன்றியது.

சொல்லுங்கோ..நீங்க எந்த ஊரு..விசாரிக்க ஆரம்பித்தார் முத்துசாமி.

நா சிங்கப்பூர்லேந்து.. என்று சொல்ல ஆரம்பித்த சிங்கப்பூராரின் பார்வை அவர் அமர்ந்திருந்த பெஞ்சுக்கு நேரெதிரே சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவில் நிலைத்தது. ஏழுவயதிருக்கும் ஒருபையன் டிராயர் மட்டும் அணிந்தபடி மேல்சட்டை அணியாமல்.. வலது கையில் சிலேட்டும்..இடது கையில் சிலேட்டுக்குச்சியும் இருக்க.. தலையை லேசாய்ச் சாய்த்தபடி வெட்கச்சிரிப்போடு நின்றிருந்தான்.

குபீரென்று எழுந்தார் சிங்கப் பூர்க்காரர்.போட்டோவிடம் ஓடினார்..

இது..இது..இது..என்னோட போட்டோ

நாந்தா நாந்தா நாந்தா இது..பக்கத்தாத்து ராமுமாமா எடுத்தது..அப்ப..அப்ப.. இதோ இதோ

ஒக்காந்துண்டிருக்கறது என்னோட

அப்பாவா..அப்பா என்று கத்தவேண்டும் போல் இருந்தது..

மங்களா..வெங்கிவந்து சொல்லிட்டுப் போனானே அவா

வந்ருக்கா பாரு..மாமியை அழைத்தார் மாமா.

கைப்பிடித்துணியை அலச பாத்ரூமுக்குள் சென்றிருந்த

மங்களாமாமி தோ..வரேன்னா.. அவாள ஒக்காரச் சொல்லுங்கோ.. தோ வந்துட்டேன்.. என்று குரல் கொடுத்தார்.

ஈஸிசேரில் அமர்திருந்தவர் மங்களா என்று அழைத்த நொடி கொஞ்சநஞ்ச சந்தேகமும் நீங்கிவிட்டது சிங்கப்பூர்க்காரருக்கு.

Representational Image

அம்மா..

கத்திவிட்டார்..பாத்ரூமிலிருந்து வெளியேவந்த மாமியைப் பார்த்தவுடன்..அம்மா..அம்மா..கத்தினார். எத்தனை வயதால் என்ன..

முதுமையால் உடல் தேய்ந்து தோல் சுருங்கி எத்தனை மாற்றம் உடலில் ஏற்பட்டாலும் பெற்ற பிள்ளைக்குத் தாயை அடையாளம் தெரியாமல் போய்விடுமா..மகனை தாய்க்குதான் அடையாளாம் தெரியாமல் போய்விடுமா..அம்மா கத்திக் கொண்டே தாயிடம் ஓடித் தாயைக் கட்டிக்கொண்டார்.அம்மா..அம்மா.. நாந்தாம்மா ஒன்னோட புள்ள ராமதொர..நா ராமதொரம்மா..

கும்மோணத்துல மகாமகக் கூட்டத்துல தொலஞ்சு போனேனே..நாந்தாம்மா ஒம்புள்ள ராமதொர..

திக்பிரமைபிடித்தவள்போல் நின்று விட்டார் மாமி..

ராமதொர கத்தினார்

முத்துசாமி..அப்பா.. அப்பா முத்துசாமியை நோக்கி ஓடினார். காலைப்பிடித்து அழுதார்.

அப்பாவைக் கட்டிக்கொண்டார்.

மீண்டும் மாமியிடம் ஓடிவந்தார். அம்மா தோ பாரு.. தோபாரு.. சட்டை பனியனைக் கழற்றி முதுகைக் காண்பித்தார். முதுகில் நான்கு வயதில் வந்த விப்ருதிக் கட்டிகளை ஆபரேஷன் செய்த மூன்று தழும்புகள். அம்மா போதுமாம்மா.. போதுமாம்மா..நா ஒம்புள்ள ராமதுரைதான்னு நம்புறயாம்மா..

அதோ அதோ அந்த போட்டோ நா ரெண்டாவது படிக்கறத்தே அடுத்தாத்து ராமுமாமா எடுத்த போட்டோ..சரியாம்மா..இப்ப நா ஒம்புள்ள ராமதொரன்னு நம்புறயாம்மா..கதறினார்.

ராமதொர..எஞ்செல்லமே..ராமதொர.. பிள்ளையைக்கட்டிக்கொண்டு அழுதார் மாமி.

பிள்ளையை இழுத்து மடியில் போட்டுக்கொண்டார்.எத்தனை வயதானாலும் பெற்றபிள்ளைகள் தாய்க்குக் சின்னக் குழந்தைதானோ..

அடுத்துவந்த ஒவ்வொரு நொடியும்..

அங்கே அப்பா அம்மா பிள்ளை பேரன் பேரனின் மனைவி பேத்தி என்று பாச வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இது..இந்த பாசவெள்ளம் இனி என்னாளும் வற்றாத ஜீவநதியாய் காலன் அழைக்கும் வரை ஓடிக்கொண்டே இருக்கும்.

டாண்.. டாண்.. டாண்..காமாக்ஷிக்கு

அடுத்த அபிஷேகம் முடிந்து கற்பூர ஹாரத்தி நடப்பதைத் தெரிவிக்கும் ஆலயமணியின் கம்பீர ஓசை.

காமாக்ஷி.. அவள் அகிலாண்டகோடி

பிரம்மாண்ட நாயகி.. அவளின்றி ஓர் அசைவும் நிகழாது.. ஓர் அணுவும் அசையாது.. அவளுக்குத் தெரியும்

யாருக்கு எப்போது எதை எப்படித் தரவேண்டுமென்று.அவள் மீது நிறைந்த பக்தியும் உறுதியான நம்பிக்கையும் கொண்டிருந்தால் போதும்..நியாயமான வேண்டுதலை

நிச்சயம் நிறைவேற்றி வைப்பாள்.

ஆடிவெள்ளியில் தேரேறி ஆடி வருகிறாள் காமாக்ஷி..

நம்மைத்.. தேடிவந்து அருள் தரவே..

ஓடி வருகிறாள் காமாக்ஷி.

முற்றும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.