சமீபத்திய வழக்கு ஒன்றில், `தாலியை மனைவி கழற்றிவைப்பது கணவரை மனரீதியாகக் கொடுமைக்கு உள்ளாக்கும் செயல்’ என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறியிருப்பது, அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கும் இரு நீதிபதிகளில் ஒருவர் பெண். அதுவும் திருமணமாகாத பெண்.

ஈரோடு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் சிவக்குமார், குடும்பநல நீதிமன்றம் தனக்கு விவாகரத்து கொடுக்க மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்து திருமணச் சட்டம் பிரிவு 7-ன்படி தாலி அவசியமில்லை என்று மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘தாலி திருமண பந்தத்தைக் குறிப்பிடும் புனிதமான விஷயம், கணவரின் மறைவுக்குப் பின்பே அகற்றப்படக்கூடியது. மனதால் கொடுமைப்படுத்தும் நோக்கத்துடன் அதை மனுதாரரின் மனைவி கழற்றியது, மனுதாரருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கக்கூடியது’ என்று குறிப்பிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஒரு பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது என்பதைக் குறிக்கும் குங்குமம், மெட்டி, தாலி என ஏராளமான அடையாளங்கள் உள்ளன. ஆனால், ஓர் ஆண் திருமணமானவன் என்பதைக் குறிக்கும் அடையாளம் ஏன் ஒன்றுகூட இல்லை? காரணம், இவையெல்லாம் ஆணாதிக்க மனப்பான்மையிலிருந்து உருவாக்கப்பட்ட, பெண்ணை ஆணுக்கு அடிமையாக்க உருவாக்கப்பட்ட சடங்குகள். குறிப்பாக, தாலி என்பது, நூற்றாண்டு காலமாக பெண்ணை ஆணுக்கு உடைமையாக்கும் `புனித’ பொருள். இப்படி, பெண்ணடிமைத்தனத்துக்கு நீரூற்றும் ஒரு வழக்கத்துக்கு, உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் வலுவேற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சில போட்டித் தேர்வு அறைகளில் நகைகள் எதுவும் அனுமதிக்கப்படாது என்பதால், தேர்வு நிலைய வாயிலிலேயே மனைவிகள் தங்கள் தாலிகளைக் கழற்றி கணவர்களிடம் கொடுத்துவிட்டு உள்ளே செல்ல, அவர்கள் வெற்றிகரமாகத் தேர்வெழுதித் திரும்ப கையில் தாலியுடன் காத்திருக்கும் கணவர்களைப் பார்க்கிறோம். பிரசவ அறை உள்ளிட்ட அறுவைசிகிச்சை அறைகளில் பெண்களின் தாலிகள் அகற்றப்படுகின்றன. அவ்வளவு ஏன்… இன்று ஜிம், பியூட்டி பார்லர் செல்லும்போதுகூட, சௌகர்யம் கருதி பெண்கள் தாலியை அகற்றிவிட்டுச் செல்கிறார்கள். சில பெண்கள், தாலி அணிவதையே தவிர்ப்பதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி, காலத்துக்கு ஏற்ப ‘புனிதங்கள்’ கரைந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், ‘தாலி திருமண பந்தத்தில் இணைந்திருப்பதைக் குறிப்பது, கணவரின் இறப்புக்குப் பிறகே அகற்றப்பட வேண்டும்’ என்றெல்லாம், உயர் நீதிமன்றத் தீர்ப்பில் வரிகள் இடம்பெறுவது, பெண் விடுதலையை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தள்ளவே செய்யும்.

`விவாகரத்து தீர்ப்பு, சம்பந்தப்பட்ட மனைவி தாலியைக் கழற்றியதால் மட்டுமே வழங்கப்பட்டதல்ல. 2011-ம் ஆண்டில் இருந்து இருவரும் பிரிந்து வாழ்ந்தும், கணவருடன் சேர மனைவி தரப்பிலிருந்து முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்ற மற்ற காரணங்களும் உள்ளன’ என்று கூறப்படுவது ஏற்புடையதா? ஒரு விவாகரத்து வழக்கில் பிரிவுதான் தீர்வு என்று சொல்ல, சட்டரீதியான, சாட்சிரீதியான காரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால், ‘மனைவி தாலியைக் கழற்றி வைத்தது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயல்’ என்று குறிப்பிட்டிருப்பது… ஆணாதிக்கத்தை வலியுறுத்தும் வரிகளே.

இத்தீர்ப்புடன் மாறுபடுவோம் தோழிகளே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.