பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்கு இந்தியாவைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி சென்று பார்வையிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ரீனா வர்மா (90). இவர் 1932-ம் ஆண்டு ஒன்றுபட்ட இந்தியாவில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் பிறந்தவர் ஆவார். இந்நிலையில், 1947-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் உயிர் பிழைப்பதற்காக ரீனா வர்மாவின் குடும்பத்தினர் மகாராஷ்ட்ராவுக்கு குடிபெயர்ந்தனர். அப்போது ரீனாவின் வயது 15. அன்று முதல் அவர் தனது சொந்த ஊரான ராவல்பிண்டிக்கு சென்றதில்லை.

பாகிஸ்தானில் கைவிட்ட பள்ளிப்படிப்பை புணேவில் தொடர்ந்த அவருக்கு, 23 வயதில் திருமணம் நடைபெற்றது. இவருக்கு தற்போது கொள்ளுப் பேரன், பேத்திகள் இருக்கின்றனர். இதனிடையே, மகாராஷ்ட்ராவில் குடிபெயர்ந்த போதிலும் தனது பூர்வீக இல்லம் இருக்கும் ராவல்பிண்டிக்கு செல்ல வேண்டும் என்பது ரீனாவின் பெரு விருப்பமாக இருந்துள்ளது.

image

இதற்காக பாகிஸ்தானிடம் 1965 முதல் பல ஆண்டுகளாக விசா கேட்டு ரீனா விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு விசா கொடுக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இந்த சூழலில்தான், அவரது பேரன்கள் கொடுத்த அறிவுரையின் பேரில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானியை ட்விட்டரில் தொடர்பு கொண்டு தனது நீண்டகால விருப்பத்தை தெரிவித்திருக்கிறார் ரீனா. இதையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அவருக்கு அண்மையில் 3 மாதக்கால விசா வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினருடன் வாஹா – அட்டாரி எல்லை வழியாக நேற்று பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகருக்கு ரீனா வர்மா சென்றார். அப்போது, தான் பிறந்து வளர்ந்த தங்களின் பூர்வீக வீட்டுக்கு சென்று ஆனந்தக் கண்ணீருடன் அவர் பார்வையிட்டார். இதையடுத்து, தான் படித்த பள்ளி, தனது நண்பர்களையும் அவர் சந்தித்து உணர்ச்சிப் பொங்க உரையாடினார்.

image

இதுகுறித்து ரீனா வர்மா கூறுகையில், “நான் தான் எனது பெற்றோருக்கு கடைசி மகள். எனக்கு இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரர் இருந்தனர். எனது அண்ணனும், மூத்த சகோதரிகள் இருவரும் அடிக்கடி வீட்டுக்கு அவர்களின் நண்பர்களை அழைத்து வருவார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். ஆனால் எனது பெற்றோர் ஒருபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது கிடையாது. எனது தந்தை அந்த காலத்திலேயே முற்போக்கு சிந்தனை உடையவராக இருந்தார். நான் இந்தியாவில் இருந்த போதிலும் எனது நினைவுகள் ராவல்பிண்டியையும், எனது பூர்வீக வீட்டையுும் சுற்றியே இருந்தன. என் வாழ்நாளில் ராவல்பிண்டிக்கு வரப்போவதில்லை என்றே நினைத்தேன். ஆனால், 75 வருடங்களுக்கு பிறகு எனது சொந்த ஊரையும், எங்கள் பூர்வீக வீட்டையும் பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு வந்த போது எனது தந்தையும், தாயும் வீட்டில் இருப்பதை போன்ற உணர்ந்தேன். எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு வரை இந்து – முஸ்லிம் என்ற வேறுபாடுகள் இருந்தது கிடையாது. பிரிவினைக்கு பிறகே இந்த வேறுபாடுகள் எல்லாம் முளைத்துவிட்டன” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.