மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான பொதுநுழைவுத் தேர்வில் (சியுஇடி) பங்கேற்காதவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட மாட்டாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை நடத்தும் முறை, நடப்புக் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு வரை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்தது. மத்திய பல்கலைக்கழகங்களில் கிராமப்புற மாணவர்கள் சேர்வதை இந்த நுழைவுத் தேர்வு தடுக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. எனினும், தனது முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கவில்லை.

image

இந்த சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி நாடு முழுவதும் சியுஇடி நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக 510 நகரங்களில் 285 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, கடைசி நேரத்தில் சில மாணவர்களுக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதவில்லை. இதுபோல், நுழைவுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு விரைவில் மறு தேர்வு நடத்தப்படும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

image

மறு தேர்வு கிடையாது

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து யுஜிசி தலைவர் மமிதாலா ஜெகதீஷ் குமார் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தேர்வு மையங்கள் மாற்றப்பட்டது குறித்து மாணவர்களுக்கு முன்னதாகவே மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதை கவனிக்காத மாணவர்கள், முந்தைய தேர்வு மையங்களுக்கு சரியான நேரத்தில் சென்றால் அவர்களை அனுமதிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு 2 மணிநேரத்துக்கு முன்னதாக வருமாறு மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், தேர்வு தொடங்கப்பட்டு 30 நிமிடங்கள் வரை கூட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என வதந்தி பரவி வருகிறது. அதில் உண்மை இல்லை. தேர்வெழுத தவறிய மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.

மறு தேர்வு வேண்டும்

இதனிடையே, கடைசி நேரத்தில் மையத்தை மாற்றியதால் தேர்வெழுத முடியாத மாணவர்கள், தங்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த ஆன்ச்சல் என்ற மாணவி கூறுகையில், “எனக்கு முதலில் துவாரகா பகுதியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு சென்று பார்த்த போது டெல்லி பல்கலைக்கழகத்தில் எனக்கு மையம் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் இரண்டு மணிநேரம் பயணித்து டெல்லி பல்கலைக்கழகத்துக்கு சென்றேன். ஆனால் நேரம் கடந்துவிட்டதாக கூறி என்னை அங்குள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கடைசி நேரத்தில் தேர்வு மையத்தை மாற்றினால் மாணவர்களுக்கு எப்படி தெரியவரும்? எனவே எங்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும்” என அந்த மாணவி கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.