கடலூர் மாநகராட்சி மேயர் மறைமுகத் தேர்தலில் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்டதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மீது கட்சி ரீதியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அவர் கட்சியிலிருந்து இடை நீக்கி தி.மு.க-வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார். அதையடுத்து பலமுறை தலைமையை அணுகி தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற முயன்றார் எம்.எல்.ஏ அய்யப்பன். ஆனாலும் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை திரும்பப்பெறப் படாமலே இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ. தி.மு.க தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் விரைவில் பா.ஜ.க-வில் அவர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் பரவின.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே போல(ஆபரேஷன் கமலா) தமிழ்நாட்டில் அய்யப்பனை வைத்து பா.ஜ.க அரசியல் ஆட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துச் சொல்லத் தொடங்கியிருந்தனர். அய்யப்பனின் இந்த முடிவுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துடனான மோதலே காரணம் எனவும் சொல்லப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏ அய்யப்பனோ இதை முழுவதும் மறுத்து வந்தார். மேலும், தன்னுடைய உயிர் இருக்கும் வரை தான் தி.மு.க-வில்தான் இருப்பேன் எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நிலையில் “கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் அவர்கள் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு கழகத் தலைவர் அவர்களிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் ஜூலை 11ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அய்யப்பன்

மார்ச் மாதம் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ அய்யப்பன் திடீரென மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வந்து கட்சியில் மீண்டும் இணைந்திருக்கிறார். தலைமையின் இந்த நடவடிக்கையின் பின்னணியில் என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்…

“மார்ச் மாதம் நீக்கப்பட்ட கோ.அய்யப்பன் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து தலைவர் தலைமையில் மீண்டும் கட்சியில் செயல்படுவதற்கான உத்தரவைப் பெற்றுக்கொண்டார். கட்சியிலிருந்து நீக்கியது முதல் அவர் பா.ஜ.க-வில் சேர்ந்துவிடுவதாகப் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டன. ஜூலை முதல் வாரத்தில் தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தினார் அய்யப்பன். அப்போது அவரது ஆதரவாளர்கள் ‘கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை தலைமையில் அழைத்துப் பேசவில்லை. ஏதாவது முடிவு எடுங்கள். விரைவில் எடுங்கள்’ என அவரிடம் கூறியிருக்கிறார்கள். மேலும் ஜூலை 8ம் தேதி, நடைபெற்ற கடலூர் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தையும் அய்யப்பனின் ஆதரவாளர்கள் 12 பேர் தவிர்த்திருக்கிறார்கள். அய்யப்பனின் இந்த அதிருப்தி மனநிலையைப் பயன்படுத்தி அய்யப்பனை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டு, அ.தி.மு.க கவுன்சிலர்கள் ஆதரவோடு கடலூர் மாநகராட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டிருக்கிறது.

அண்ணா அறிவாலயம்

இந்த தகவல்கள் எல்லாம் உளவுத்துறை மூலம் தலைமைக்கும் வந்திருக்கின்றன. இதையறிந்த தி.மு.க தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயப்பனை மீண்டும் கட்சியில் இணைக்கத் திட்டமிட்டு, இந்தப் பணியைக் கட்சியின் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.” என்றனர் அறிவாலய வட்டாரத்தில்…

“அன்பகம் கலை அய்யப்பனை அழைத்து ஆலோசனை நடத்தி, மன்னிப்புக் கடிதம் ஒன்றைக் கொடுத்து மீண்டும் கட்சியில் இணைந்துகொள்ள அறிவுறுத்தவே, அதையொட்டியே இந்த இணைப்பு நடந்திருக்கிறது. இணைப்புக்கு முன்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்து மிகப்பெரிய புகாரை வாசித்திருக்கிறார் அய்யப்பன். மேலும், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார். ‘இப்போதைக்குக் கட்சியில் இணைந்து வேலைகளைத் தொடங்குங்கள். மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ எனத் தலைமையிலிருந்து உறுதி அளித்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியிலிருந்து 38 எம்.எல்.ஏ-க்கள் ஷிண்டே தலைமையில் கட்சியிலிருந்து விலகி அங்கு ஆட்சி மாற்றம் நடக்கக் காரணமாக இருந்தார்கள். கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் காரணமாகக் காட்டி தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்துவிட்டால் அது தேவையில்லாத சர்ச்சையையே ஏற்படுத்தும்.

ஸ்டாலின்

எதிர்க்கட்சியாக இருந்தபோது கு.க.செல்வம் சென்றபோதே தேவையில்லாத சர்ச்சைகள் எழுந்தன. எனவே மீண்டும் அதே மாதிரியான சர்ச்சை ஆட்சிக்கும் கட்சிக்கும் தேவையில்லை என்பதை யோசித்தே தலைமை இந்த முடிவு எடுத்தது” என்றனர் மேலும் விரிவாக…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.