‘ஆடுகளம்’, ‘ஆரம்பம்’, ‘காஞ்சனா 2’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த டாப்ஸி தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது ‘சபாஷ் மிது’ திரைப்படத்தில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜாக ஆடுகளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்தப் படம் குறித்து ஒரு முன்னணி செய்தி இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சபாஷ் மிதுவின் முழு பட்ஜெட்டும் ஏ-லிஸ்ட் ஆண் நடிகர்களின் சம்பளத்தின் அளவே இருப்பதாகக் கூறியிருக்கிறார் டாப்ஸி.

“‘சபாஷ் மிது’ படத்தில் நான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது என்னுடைய மிகப்பெரிய பட்ஜெட் படம். ஆனால் இன்னும் எனது முழு படத்தின் பட்ஜெட் ஒரு ஏ-லிஸ்டரின் (முன்னணி ஆண் நடிகர்கள்) சம்பளத்திற்குச் சமமாகத்தான் இருக்கிறது. இதற்கும் இந்த லிஸ்ட்டில் நான் உச்ச நடிகர்கள் யாரையும் சேர்க்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் ஆண் மற்றும் பெண் சார்ந்த படங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாஷ் மிது – டாப்ஸி

“நடிகைகளாகிய நாங்கள் இது போன்ற விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளோம். இந்த வேறுபாடுகளைக் களைய முயலும் சரியான திசையில் நாம் எல்லோரும் முன்னேறி வருகிறோம். இந்த மாற்றம் 10-12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தால் நான் இங்கே உட்கார்ந்து இதுபோன்ற ஒரு பெண் நடிக்கும் படத்தை ஸ்பெஷலாக விளம்பரப்படுத்தியிருக்க மாட்டேன். இங்கே மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. மறுப்பதற்கில்லை. ஆனால் இதை மட்டும் வைத்து இங்கே சம உரிமை வந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது” என்று அவர் பேசியுள்ளார்.

டாப்ஸியின் இந்தக் கருத்து பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியான பல படங்கள் பெண்களை மையமாகக் கொண்டிருந்தன. அந்த வரிசையில் ‘சபாஷ் மிது’வும் தற்பொழுது இணையவுள்ளது.

டாப்ஸி கடைசியாக ‘லூப் லபேட்டா’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சபாஷ் மிது’ ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.