தாஜ்மஹால் முன்பு அமைந்திருந்த இந்து கோயிலின் நிலத்தின் மீது கட்டப்பட்டிருக்கலாம் என பல காலமாகவே ஒரு சர்ச்சைக்குரிய கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தாஜ்மஹாலின் பேஸ்மென்ட் அறையில் இந்துக் கடவுள்கள் சம்பந்தப்பட்ட சிலை ஏதேனும் உள்ளதா எனக் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறை, தாஜ்மஹாலின் அடித்தளத்தில் இந்துக்கடவுள்களின் சிலைகள் எதுவும் இல்லை எனக் கூறியதோடு, தாஜ்மஹால் எந்த வித கோயில் நிலத்திலும் கட்டப்படவில்லை என கூறியுள்ளது.

தாஜ்மஹாலின் அடித்தளத்தில் அமைந்துள்ள பூட்டப்பட்ட 20 அறைகளின் கீழும் இந்துக்கடவுள்களின் சிலை இல்லை என விளக்கம் தரப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சகேத் கோக்லே தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இந்த விவரங்களைக் கோரியிருந்தார். அவருடைய கேள்விகளுக்கு பதில் எழுதி இருந்த மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் சந்த் மீனா, “இல்லை. எந்த விதமான கடவுள்களின் சிலைகளும் அடித்தளத்தில் இல்லை” என ஒற்றை வரியில் பதில் எழுதி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆக்ரா சுற்றுலா சங்கத் தலைவர் ப்ரஹலாத் பிரசாத் கூறுகையில், “கோவிட் 19 காலத்தில் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிப்படைந்தது. இதுபோன்ற சமயத்தில் இப்படி சர்ச்சைகளை ஏற்படுத்துவது தாஜ்மஹாலுக்கு மட்டும் பாதிப்பைத் தராது. ஆக்ரா மற்றும் மொத்த நாடு குறித்த அபிப்ராயத்தையும் பாதிக்கும்” எனக் கூறினார்.

டிவிட்டரில் தாஜ்மஹால்!

தாஜ்மஹால் குறித்து பல சர்ச்சைகள் பல காலகட்டங்களில் இருந்துள்ளன. வரலாற்றாசிரியர் பி.என்.ஓக்(P.N.Oak) தான் எழுதிய புத்தகம் ஒன்றில் தாஜ்மஹால் உண்மையில் ராஜ்புத்திர அரசர் ஒருவரால் கட்டப்பட்ட இந்துக் கோயில் எனக் குறிப்பிட்டிருந்தார். இது உண்மையில்லை எனப் பல வரலாற்றாசிரியர்கள் கூறினாலும் அந்த காலத்தில் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு தாஜ்மஹால் இந்து மன்னனால் கட்டப்பட்டது என தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.