என் பெண் குழந்தைக்கு 8 வயதாகிறது. வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருக்கிறாள். நாளுக்கு நாள் எடை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வயதில் இப்படி இருக்கலாமா? இது பின்னாளில் உடல் பருமனுக்கு காரணமாகுமா? குழந்தைக்கும் உணவுக்கட்டுப்பாடு அவசியமா?

பெண் குழந்தை – சித்தரிப்பு படம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களது வளர்ச்சி நிலையில் எடையோடு உயரத்தையும் கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் உயரத்துக்கேற்ற எடையில் இருக்கிறார்களா என்பதுதான் முதல் மதிப்பீடாக இருக்கும்.

ஒருவேளை உங்கள் குழந்தை வயதுக்கு மீறிய எடையுடன் இருந்தாலோ, உயரத்துக்கேற்ற எடையில் இல்லாமலிருந்தாலோ, குழந்தையின் உணவுப்பழக்கம், உடலியக்கம் போன்றவற்றை மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும்.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

வளரும் பருவத்தில் இருக்கும் எட்டு வயதுக் குழந்தைக்கு உணவுக்கட்டுப்பாடு விதிப்பது சரியாதனல்ல. ஆனால் குழந்தைக்கு சரிவிகித உணவு கொடுக்க வேண்டியது மிக முக்கியம். குழந்தையின் வயதுக்கேற்ற அளவு உணவைக் கொடுக்கலாம்.

அதே நேரம் குழந்தைக்குக் கொடுக்கும் உணவுகள் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துத் தேர்வு செய்ய வேண்டும்.

குழந்தையின் உணவில் காய்கறிகளும் பழங்களும் அதிகம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். முழுதானிய உணவுகளைக் கொடுங்கள். மைதாவில் தயாரித்த பரோட்டா போன்ற உணவுகளைத் தவிர்த்து முழு கோதுமையில் செய்த சப்பாத்தி போன்றவற்றைக் கொடுங்கள்.

கொழுப்பு அதிகம் உள்ள ஃபுலஃபேட் பால் தவிர்த்து, லோ ஃபேட் பால் கொடுக்கலாம். அசைவ உணவுகள் கொடுப்பதானால் ஃப்ரை செய்தவை தவிர்த்து கிரேவியாக கொடுக்கலாம். குழந்தை நிறைய தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்துங்கள்.

இனிப்பு சேர்த்த உணவுகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். பாலில் கூட இனிப்பு சேர்க்காமல் கொடுக்கலாம். திடீரென நிறுத்தாமல் மெல்ல மெல்ல அளவைக் குறைத்து பிறகு நிறுத்திவிடலாம். கொழுப்புள்ள பிற உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்காதீர்கள்.

பெண் குழந்தை

சைக்கிளிங், ஸ்கிப்பிங், நடனம் என உங்கள் குழந்தைக்குப் பிடித்த ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்துங்கள். போதியளவு தூங்குகிறாளா என்று பாருங்கள்.

இந்த விஷயங்களைச் செய்து பார்த்து, மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவளது எடையை பரிசோதித்துப் பாருங்கள். மாற்றம் தெரியாவிட்டால் மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.