சென்னையில் சமூகச் செயல்பாட்டாளர்கள் கூட்டியக்கம் என்ற அமைப்பு சார்பில் ‘வெறுப்பு பிரசாரத்தை வேரறுப்போம்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேசிய கிறிஸ்தவ பாதிரியார் ஜெகத் கஸ்பர், “இந்தியாவில் ஆதிக்குடிகள், முஸ்லிம்கள் 40 சதவிகிதம் பேர் வாழ்கிறார்கள். இந்திய அரசு அவர்களுக்குத் துரோகம் செய்வதால் நிலத்தில் 40 சதவிகிதத்தைப் பிரித்து வாங்குங்கள். ஆதிக்குடிகள் இல்லையென்றால் 20 சதவிகித முஸ்லிம்கள் கேளுங்கள். சகாரா பாலைவனத்தையாவது வாங்குங்கள். அங்கு சென்றாவது வாழ்ந்து கொள்வோம். வெளிநாட்டில் ஆதரவு கோருவோம், அது தேசவிரோதம் ஒன்றுமல்ல” எனப் பேசியிருக்கிறார்.

இதையடுத்து, “கிறிஸ்தவ மிஷனரிகள் ஆதரவாளரான ஜெகத் கஸ்பர் ராஜ், தேசவிரோத கருத்துகளை பேசியுள்ளார். இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்திலும், மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் விதமாகவும் தொடர்ந்து பேசிவருகிறார். அதன் ஒருகட்டமாக இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தனி நாடு கேட்க வேண்டும் என்று பேசியதோடு, தீய எண்ணத்தை விதைத்துள்ளார்” எனத் தமிழ்நாடு பா.ஜ.க சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்ஸி தங்கையா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயனிடமும் ஜெகத் கஸ்பர் ராஜ்-க்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கமலாலயம்

கஸ்பர் ராஜ் மீது இப்படியான புகார் எழுவது முதல்முறை அல்ல. 2019-ம் ஆண்டு மொழி ரீதியில் பிளவை ஏற்படுத்தும் விதமாகப் பேசியதாக இவர் மீது அப்போதே புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர் சர்ச்சைக்குள்ளான கஸ்பர் ராஜ் குறித்தும் பா.ஜ.க-வின் புகார் குறித்தும் ஒரு பார்வை…

“தொடர் புகார்களுக்கு உள்ளானவர்”

ஜெகத் கஸ்பர் ராஜ் மீதான புகார் குறித்து பா.ஜ.க தரப்பில் விசாரித்தோம். “கஸ்பர் ராஜ் மீது இப்படியான புகார் எழுவது முதல் முறை அல்ல. மாணிக்கவாசகர் இயற்றிய தமிழ் கீர்த்தனைகளின் தொகுப்பான திருவாசகத்தை இளையராஜா மூலம் சிம்பொனியாகத் தயாரித்து 2006-ம் ஆண்டு வெளியிட்டார் கஸ்பர் ராஜ். ஆனால், இது சர்ச்சையானது. மேலும், இந்தத் திட்டத்துக்காக சுமார் 1.06 கோடி செலவிடப்பட்டது என்றும் ஆனால், வெறும் 45 லட்ச ரூபாய்க்கே இந்தத் திருவாசகம் விற்பனையானதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து இளையராஜாவோடு இவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதெல்லாம் வேறு கதை. அப்போதுதான் முதன்முதலாக வெளிச்சத்துக்கு வந்தார் இந்த கஸ்பர் ராஜ்.

பின்னர் தி.மு.க-வினரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார் கஸ்பர் ராஜ். இவரது அமைப்போடு சேர்ந்து சென்னை சங்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது இந்த நிகழ்வு மூலம் விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் பணம் வசூல் செய்யப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதற்காகவும், வான் ஏவுகணைகளை வாங்க முயன்றதற்காகவும் சாக்ரடீஸ் என்பவர் 2006-ல் அமெரிக்க பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனால் கைது செய்யப்பட்டார். அவரோடு கஸ்பர் ராஜ்-க்குத் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக 2010-ம் ஆண்டு இவரின் தமிழ் மய்யம் அலுவலகத்திலும் சி.பி.ஐ சோதனை நடத்தியது.

சென்னை சங்கமம்

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் கே.டி.ராஜசிங்கம் என்பவர் நடத்தும் ஆசியா ட்ரிப்யூன் என்ற இணைய இதழ் கஸ்பர் ராஜை ‘இலங்கைத் தமிழர்களின் துயரத்தைப் பயன்படுத்தி மில்லியன் கணக்கில் சம்பாதித்த பாப் பாதிரியார்’ என விமர்சனம் செய்திருக்கிறது.” எனத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.” என்றனர்.

”பண மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்”

ஈழத் தமிழர்கள் ஆதரவாளர்கள் தரப்பில் விசாரித்தோம். “விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்குமான போர் முடிவுக்கு வந்த பிறகு பல்வேறு அமைப்புகளைத் தொடங்கி, பல்வேறு அமைப்புகளோடு இணைந்து ஈழத் தமிழர்களுக்காகப் பணம் வசூல் செய்வதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலில் ஈடுபட்டார். ஆனால், அந்தத் தொகையை ஈழத் தமிழர்களுக்காகப் பயன்படுத்தவில்லை எனப் புகார் எழுந்தது. மேலும், புலிகள் அமைப்புக்கும் அதன் தலைவர்களுக்கும் தான் நெருக்கமாக இருந்ததாகப் பொய்யான பிரசாரத்தைப் பரப்பியதாகவும் இவர்மீது புகார்கள் அடுக்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவ திருச்சபையின் இதழான நம்வாழ்வு இதழில் புலிகளை மோசமாகச் சித்திரித்து கட்டுரை எழுதினார். அன்றைய மதுரை ஆர்ச் பிஷப் ஆரோக்கியசாமி அதைக் கண்டித்தபோது உடனடியாக மறுப்பு ஒன்றை வெளியிட்டார். காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுக்கு நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டு ஈழத்தை வைத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்தும் தொடர்ந்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டார்” எனப் புகார் கூறுகிறார்கள்.

ஜெகத் கஸ்பர்

மேலும், “தொடர்ந்து மதம், இனம், மொழி குறித்து சர்ச்சையான கருத்துகளைக் கூறுவதாலும் ஈழத் தமிழர்களை மையமிட்டு சர்ச்சையான விவகாரங்களில் இவரது பெயர் அடிபடுவதாலும் பா.ஜ.க-வினர் இவர்மீது புகார்களைக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.” என்கின்றனர்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.