பொதுவாக மாத சம்பளக்காரர்கள் வருமான வரியை தாக்கல் செய்யும்போது பல முக்கியமான ஆவணங்கள் இருந்தால் வெகு விரைவாக வருமான வரி படிவத்தை நிரப்பி சட்டென தாக்கல் செய்து விடலாம். என்னென்ன ஆவணங்கள் தேவை அதெல்லாம் எதற்கு பயன்படும் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஃபார்ம் 16

நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கிறது, உங்களிடமிருந்து எவ்வளவு ரூபாயை வரிப் பிடித்தம் செய்திருக்கிறது என்பதை விளக்கும் டிடிஎஸ் சான்றிதழ்தான் இந்த ஃபார்ம் 16. ஜூன் 15ஆம் தேதிக்குள் ஒரு நிறுவனம் தங்களின் ஊழியர்களுக்கு ஃபார்ம் 16 படிவத்தைக் கொடுத்துவிட வேண்டும்.

image

இந்த படிவத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல்வேறு தரவுகள், அப்படியே வருமான வரி படிவத்தில் தன்னிச்சையாக எதிரொலிக்கும். எனவே படிவத்தில் உள்ள விவரங்கள் 100% சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக பார்ட் பி-யில் குறிப்பிடப்பட்டிருக்கும் வருமான விவரங்களை நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

பார்ம் 16 A, மற்றா டிடிஎஸ் சான்றிதழ்கள்

சம்பளம் தவிர மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மற்றும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இருந்து வரும் கமிஷன் தொகைகளுக்கு, ஃபார்ம் 16 A என்கிற டிடிஎஸ் சான்றிதழை அந்த நிறுவனங்கள் தங்களின் ஏஜெண்டுகளுக்கு வழங்குவர்.

அதேபோல ஒரு தனி நபர், ஒரு நிதி ஆண்டு காலத்தில் 40,000 ரூபாய்க்கு மேல் (மூத்த குடிமக்களாக இருந்தால் 50,000 ரூபாய்க்கு மேல்) வட்டி வருமானம் ஈட்டினால், வட்டித் தொகையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இந்த டிடிஎஸ் பிடித்த விவரங்கள் ஃபார்ம் 16 A படிவத்தில் குறிப்பிடப்படும்.

இப்படி வேறு என்ன என்ன டிடிஎஸ் சான்றிதழ்கள் எல்லாம் பெற வேண்டுமோ அனைத்தையும் சரியாக பெற்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல ஒருவர் தன்னுடைய நிலத்தையோ வீட்டையோ கடந்த 2021 – 22 நிதியாண்டில் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கி இருந்தாலோ அல்லது 50 லட்சத்துக்கு மேல் விற்றிருந்தாலோ, பணம் கொடுத்து வீட்டை வாங்கியவர் டிடிஎஸ் பிடித்தம் செய்து, வீடு விற்றவரின் பெயரில் வரியைச் செலுத்த வேண்டும். எனவே வீட்டை வாங்கியவர் ஃபார்ம் 16B என்கிற படிவத்தை பூர்த்தி செய்து வீட்டை விற்றவரிடம் கொடுக்க வேண்டும்.

வட்டி வருமான சான்றிதழ்கள்

சேமிப்பு கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் போன்றவைகளில் இருந்து வரும் வட்டி வருமானத்துக்கு கூட வருமான வரி செலுத்த வேண்டும். வங்கி கணக்கு முதல் முதலீடு செய்திருக்கும் அனைத்து நிதி நிறுவனங்களில் இருந்தும் பேங்க் ஸ்டேட்மென்ட், அஞ்சலக ஸ்டேட்மெண்ட் மற்றும் இன்கம் ஸ்டேட்மெண்ட் என்று அழைக்கப்படும் வருமான சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளவும்.

புதிய வருமான வரி படிவத்தில் எங்கிருந்து எவ்வளவு வட்டி வருமானம் வந்திருக்கிறது போன்ற விவரங்களையும் கேட்கிறார்கள். எனவே அதை நிரப்ப இந்த சான்றிதழ்கள் உதவும்.

ரீபேமெண்ட் சான்றிதழ்

நீங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் கடந்த 2021 – 22 நிதியாண்டில் நீங்கள் எவ்வளவு ரூபாய் அசல் செலுத்தி இருக்கிறீர்கள் எவ்வளவு ரூபாய் வட்டி செலுத்தி இருக்கிறீர்கள் என்கிற விவரங்கள் அடங்கிய ரீபேமெண்ட் சான்றிதழை, நீங்கள் கடன் வாங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்களுக்கு கொடுக்கும்.

அதைப் பயன்படுத்தி வீட்டுக் கடனுக்கு செலுத்திய வட்டி தொகையை வருமான வரி சட்டப் பிரிவு 24ன் கீழ் ஒரு நிதி ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை ஒருவர் வரிச் சலுகை பெறலாம்.

image

அதேபோல வீட்டுக் கடனுக்கு திருப்பி செலுத்தும் அசல் தொகையை 80சி பிரிவின் கீழ் ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை காட்டி வரிச்சலுகை பெறலாம்.

கல்விக்கடன் பெற்றிருக்கும் மாணவர்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும் போது, திருப்பி செலுத்தும் வட்டி தொகைக்கு மட்டும் 80E பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறலாம். எனவே வீட்டுக் கடன் & கல்விக் கடனுக்கு ரீபேமெண்ட் சான்றிதழ் அவசியம்.

ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மென்ட்

இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் வருமான வரித்துறை கடந்த நவம்பர் 2021-ல் ‘ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மெண்ட்’ என்கிற சேவையை கொண்டுவந்தது. இதில் ஒரு தனி நபருக்கு ஒரு நிதியாணடு காலத்தில் வந்த வட்டி வருமானங்கள், ஈவுத்தொகை வருமானங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள், மியூச்சுவல் ஃபண்ட் பரிவர்த்தனைகள், அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள்… என அனைத்து விவரங்களும் இருக்கும். அதில் நீங்கள் மேற்கொள்ளப்படாத பரிவர்த்தனைகள் ஏதாவது இருந்தால் உங்கள் பட்டயக் கணக்காளரைத் தொடர்பு கொண்டு வருமான வரித் துறையிடம் முறையாகத் தெரியப்படுத்துங்கள்.

ஒருவேளை நீங்கள் செய்த அனைத்து பரிவர்த்தனைகளும், வருமானங்களும் அதில் இருந்தால், அவையனைத்தும் வருமான வரிப் படிவத்தில் பிரதிபலிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மூலதன ஆதாய வரி

பங்குகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள்… போன்ற முதலீடுகளை விற்று லாபம் ஈட்டி இருந்தால், அதற்கு குறுகிய கால மூலதன ஆதாய வரி அல்லது நீண்ட கால மூலதன ஆதாய வரியைச் செலுத்த வேண்டும். இந்த விவரங்களை பங்குச் சந்தை தரகர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கொடுக்கும் கேப்பிட்டல் கெயின் ஸ்டேட்மெண்டிலிருந்து பெறலாம்.

வீடு நிலம் போன்ற சொத்துகளை விற்று லாபம் கிடைத்திருந்தால், உங்களுடைய பட்டயக் கணக்காளரை அணுகி அதற்கு எவ்வளவு ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்கிற விவரத்தை கேட்டு பெற்று அதை சரியாகச் செலுத்தவும்.

2021-22 நிதியாண்டில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளில் இருந்து ஏதாவது லாபம் வந்து இருந்தால், அதையும் உங்கள் வருமான வரி படிவத்தில் குறிப்பிடத் தவறாதீர்கள்.

பட்டியலிடப்படாத பங்கு முதலீடுகள்

ஸ்விக்கி, பைஜூஸ், சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா… போன்ற பல பிரமாண்ட நிறுவனங்கள் இன்றுவரை இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படவில்லை. இது போன்ற நிறுவனங்களின் பங்குகளில் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அதை வருமான வரி படிவத்தில் குறிப்பிட தவறிவிடாதீர்கள்.

இதுபோக ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை சரியாக கையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு வங்கி கணக்கை வருமான வரித்துறை ரீ-ஃபண்ட் செலுத்துவதற்கு தேர்வு செய்யலாம். ஆனால் உங்கள் பெயரில் இருக்கும் அனைத்து வங்கிக் கணக்குகளையும் வருமான வரி படிவத்தில் குறிப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். இதில் 2021 – 22 நிதியாண்டில் வங்கியிடம் முறைப்படி கடிதம் எழுதி குளோஸ் செய்த வங்கி கணக்கிலும் அடக்கம்.

-கெளதம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.