திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தினமும் கேரள அரசுக்கு எதிராகவும், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளும் பட்சியான சி.பி.எம் பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், ஸ்வப்னா போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கேரள அரசும், போலீஸும் தயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் போலி சான்றிதழ் கொடுத்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளார் ஸ்வப்னா. இந்த குற்றச்சாட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்வப்னா சுரேஷ் – சிவசங்கர்

கேரள அரசின் ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்திலும், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திலும் பணிபுரிந்திருக்கிறார் ஸ்வப்னா சுரேஷ். எல்லா இடங்களிலும் பணியில் சேருவதத்காக மகாராஷ்டிராவில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் டெக்னாலஜிக்கல் பல்கலை கழகத்தில் பி.காம் பட்டம் பெற்றதற்கான சான்றிதழை கொடுத்திருக்கிறார். தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிபோது ஸ்வப்னா சுரேஷின் சான்றிதழ்கள் போலியானவை என தெரியவந்தன. போலி சான்றிதழ் குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகத்தில் ஸ்வப்னா சுரேஷ் மாணவியாக இருந்ததில்லை. இந்த பல்கலைல்கழகத்திலோ, அதன் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகளிலோ பி.காம் படிப்பு இல்லை என்றும் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸாரின் தீவிர விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் வழங்கிய சான்றிதழில் உள்ள கையெழுத்து, சீல் ஆகியவை போலியானவை எனவும், சான்றிதழில் பாதுகாப்பு முத்திரைகள் எதுவும் இல்லை எனவும் 2020 ஜூலை மாதம் நடத்தப்பட்ட விசாரணையிலேயே கண்டறியப்பட்டுவிட்டது. ஆனாலும், அதற்கு மேல் விசாரணை நடத்த வேண்டாம் என போலீஸாருக்கு அரசு முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பினராயி விஜயன்

“எனது சான்றிதழ் தொடர்பான அனைத்து விஷயங்களும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருக்கு தெரியும். ஆனாலும், சிவசங்கர் தனது பவரை பயன்படுத்தி ஸ்பேஸ் பார்க்கில் என்னை வேலைக்கு நியமித்தார்” என ஸ்வப்னா சுரேஷ் அடிக்கடி கூறி வருகிறார். சிவசங்கர் மட்டுமல்ல மேலும் சில உயர் அதிகாரிகள் ஸ்வப்னா வேலைக்கு சேர உதவியுள்ளனர். ஸ்பேஸ் பார்க்கில் ஸ்வப்னா வேலைக்கு சேர்ந்தபோது அறிவிக்கப்பட்ட 19,06,730 ரூபாய் சம்பளத்தில், ஜி.எஸ்.டி போக 16,15,873 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்த ஸ்வப்னாவுக்கு வழங்கப்பட்ட சம்பள பணத்தை, ஸ்பேஸ் பார்க்கில் ஸ்வப்னாவை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்திடம் இருந்து வசூலிக்க வேண்டும் என நிதி தணிக்கை பிரிவு பரிந்துரைத்துள்ளது.

ஆனால் அந்த நிறுவனம் பணம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படியானால் சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் இருந்து பணத்தை வசூலிக்க வேண்டும். அல்லது அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தால் கேரள அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் பலரும் சிக்குவார்கள் என்பதால் போலீஸார் விசாரணையை இழுத்தடிப்பதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கேட்டால் “விரைவில் மகாராஷ்டிராவுக்கு சென்று விசாரணை நடத்த உள்ளோம்” என கடந்த சில ஆண்டுகளாக சொல்லிவருகின்றனர். அதிகாரிகள் ஏற்படுத்திய சிக்கலை முடித்து வைக்க வழிதெரியாமல் நிற்கிறது கேரள அரசு.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.