ஜெர்மனியில் கிறிஸ்தவ பாதிரியார்களால் சிறார்கள் மீது தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வந்திருப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள முயென்ஸ்ட்டர் நகரில் மிகப்பெரிய கத்தோலிக்க டயோசீசன் செயல்பட்டு வருகிறது. மிகப் பழமையான இந்த டயோசீசனில் அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. ஜெர்மனியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தன. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட டயோசீசனில் ஆய்வு மேற்கொள்ள முயென்ஸ்ட்டர் பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முதல் அந்த டயோசீசனில் விசாரணை மேற்கொண்டு வந்த முயென்ஸ்ட்டர் பல்கலைக்கழக அதிகாரிகள், தங்கள் அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்தனர்.

image

அதில், கடந்த 1940 முதல் 2018-ம் ஆண்டு வரை முயென்ஸ்ட்டர் டயோசீசனில் எண்ணற்ற பாலியல் குற்றங்கள் நடைபெற்று வந்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் டயோசீசனில் பணியாற்றி வந்த 196 பாதிரியார்களால் 600-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக டயோசீசனின் அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையில் 5,000 முதல் 6,000 சிறார்கள் இந்த பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல முறை தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்த போதிலும், டயோசீசனுக்கு தலைமை வகித்து வந்த பேராயர்கள் (பிஷப்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வெறும் 5 சதவீதத்துக்கும் குறைவான பாதிரியார்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களே பெரும்பாலும் இந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாகவும், இவர்களில் சிறுமிகளை விட சிறுவர்களே அதிகம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. முயென்ஸ்ட்டர் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வறிக்கை ஜெர்மனியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஜெர்மனி அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.