நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, “பத்திரப்பதிவைக் குறைந்த காலத்தில் முடிப்பதற்கு வசதியாக, கூடுதல் கட்டணம் பெற்று தட்கல் முறையில் டோக்கன்கள் வழங்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக, முதற்கட்டமாக 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் தேர்வு செய்யப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். முன்பதிவு டோக்கனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கட்டணமாக விதிக்கப்படும்” என்று பேசியிருந்தார்.

அமைச்சர் மூர்த்தி

இதனைத் தொடர்ந்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆவணத்தைப் பதிவு செய்வதற்குப் பொதுமக்கள் பத்திரப்பதிவு இணையதளத்தில் தங்களின் விவரங்களை உள்ளீடு செய்கின்றனர். அப்போது, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வதற்கான, நேரமும், தேதியும் பார்வையிட இணையத்தளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்வதற்கு ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் நாளொன்றுக்கு 6 ஸ்லாட்களாக 100 டோக்கன் வழங்கப்படுகிறது. ஒரு சில அலுவலகங்களில் இரண்டு சார்பதிவாளர்கள் 200 பதிவுகளை மேற்கொள்கிறார்கள். இருந்தபோதிலும், அதிகபட்ச டோக்கன் ஏற்கனவே முன்பதிவு செய்யப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள்.

இந்தநிலையில்தான், பொதுமக்கள் தங்களின் விருப்பப்படி பதிவு செய்யும் வகையில் ஐந்தாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் டோக்கன் பெற ஏதுவாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் டோக்கன் ஸ்லாட்களின் நேர இடைவெளிகளில் செயல்படுத்தப்படும். தட்கல் டோக்கன்களில் தற்போதைய நடைமுறை போலத்தான் இதுவும் செயல்படுத்தப்படும். தட்கல் டோக்கன் பெற்றுவிட்டு அந்த நேரத்தில் அவர்கள் பதிவுக்கு வரவில்லை என்றால் அந்த டோக்கன் செல்லாது.

சார் பதிவாளர் அலுவலகம்

அவர்கள் டோக்கனுக்கு செலுத்திய கட்டணமும் திரும்பப் பெற முடியாது. இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தட்கல் முன்பதிவு தொடங்கும். இந்த தட்கல் டோக்கன் வழங்கும் முறை தேர்வு செய்யப்பட்ட 100 சார்பதிவாளர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டத்தைச் செயல்படுத்த அனுமதி வேண்டி அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையைப் பரிசீலனை செய்த அரசுத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 3.30 மணிவரை மொத்தமுள்ள ஆறு ஸ்லாட்டுகளில் நாளையொன்றுக்கு 10 தட்கல் டோக்கன்கள் வரை வழங்கப்படும்.

தட்கல் டோக்கன் முறையில் பொதுமக்களுக்கு உள்ள பயன்கள் என்ன, இயல்பு பதிவுகளில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து பத்திரப்பதிவு துறையில் உள்ள உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “இந்த தட்கல் பத்திரப்பதிவு முறை மூலமாக, இயல்பாக நடைபெறும் பதிவுகளில் எந்தவொரு தாமதமும் ஏற்படாது. ஏற்கனவே ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் ஆறு ஸ்லாட்டுகளில் டோக்கன் வழங்கப்பட்டு நாளொன்றுக்கு 100 பத்திரப்பதிவு வரை நடைபெறுவது வழக்கம். இந்த 100 டோக்கன்களிலும் இடம் கிடைக்காதவர்களுக்கு அல்லது குறிப்பிட்ட நேரத்தில் பத்திரப்பதிவு செய்யவேண்டும் என்று விருப்பப்படுபவர்களுக்கும், அவசரமாக அன்றே முன்பதிவு செய்து பதிவு செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும்.

தலைமைச் செயலகம்

தினசரி நடைபெறும் பதிவுகள் அனைத்தும் வழக்கமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். கூடுதலாக ஒரு 10 டோக்கன் வழங்கப்பட்டு அந்த உரிய நேரத்தில் தான் இந்த பதிவு நடைபெறும். இந்த முறை பலருக்கும் உதவியாக இருக்கும். அதோடு, அரசுக்கும் வருவாய் அதிகரிக்க ஒரு வாய்ப்பாக அமையும். தற்போதைய நிலையில், இந்த திட்டம் எப்படிச் செயல்படும் என்று 100 சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு முன்னோட்டம் பார்க்கப்படுகின்றது. இந்த அலுவலகங்களில் ஏற்படும் நிறை குறைகளைக் கண்டறிந்து அவை சரிசெய்யப்படும். அதன்பிறகு அரசு ஒப்புதல் பெற்று மாநிலம் முழுவதும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும்” என்று பேசினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.