பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட போவதில்லை. ஊழல் நடந்திருக்கிறதா என நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்யும் என திண்டுக்கல்லில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி புதிதாக தோட்டனூத்து பகுதியில் கட்டப்பட்டு வரும் அகதிகள் முகாம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பேசினார்.

image

அப்போது, ’’பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறுவதைப் பற்றி நாங்கள் கவலைக்கொள்ள போவதில்லை. எந்தத் துறையிலும் திமுக ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லை. அவர் அவரது முதுகினை திரும்பிப் பார்க்கட்டும். பின்னர் அடுத்தவர் பற்றி குறைகூற வரட்டும். ஊழல் குற்றச்சாட்டு என்று அண்ணாமலை கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை. ஊழல் நடந்துள்ளது என்றால் விசாரணையில் அதனை நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்யும். தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் திமுகவினை அதிகளவில் விமர்சனம் செய்தால் அவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும்.

image

இதற்கு தற்போது மத்திய இணை அமைச்சர் பதவியில் உள்ள எல்.முருகன் மற்றும் தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சாட்சி. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அரசில் ஏதேனும் பதவிவேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து திமுகவினை விமர்சித்து வருகிறார். அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இருந்த காரணத்தினால் 4 இடங்களைப் பெற்றது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து பாஜகவினரால் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா?’’ எனக் கேள்வி எழுப்பினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.