உத்தராகண்ட், கேரளா மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. உத்தராகண்டின் சம்பாவத் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற முதல்வருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். கேரளாவில் ஆளும் கட்சி வேட்பாளரை தோற்கடித்து காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது.

ஒடிசாவின் பிரஜராஜ் நகர், கேரளாவின் திருக்காகரை, உத்தராகண்டின் சம்பாவாத் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மே 31-ஆம் தேதியன்று நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை அந்தந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது உத்தராகண்ட் மாநில இடைத்தேர்தல் தான். ஏனெனில் அண்மையில் நடந்து முடிந்த உத்தராகண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால் அந்த தேர்தலில் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி தோல்வி அடைந்தார். எனினும் அவரை முதலமைச்சராக பாஜக தலைமை தேர்வு செய்தது.
image
புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியில் தொடர வேண்டுமானால், அடுத்த 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வகையில் சம்பாவத் தொகுதியில் வெற்றிபெற்றிருந்த கைலாஷ் சந்திர கெஹ்டோரி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் புஷ்கர்சிங் தாமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் நிர்மலா கஹ்டோரி, சமாஜ்வாதி கட்சி சார்பில் மனோஜ் குமார் பட் ஆகியோர் போட்டியிட்டனர். இன்று நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே அதிக வாக்குகள் எண்ணிக்கையில் புஷ்கர்சிங் தாமி முன்னிலை பெற்றார். 
image
13-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தாமி 57,268 வாக்குகளும், கஹ்டோரி 3,147 வாக்குகளும் பெற்றிருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற புஷ்கர்சிங் தாமி முதலமைச்சர் பதவியை தக்கவைத்து கொண்டுள்ளார். தமது வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாமி, இது வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும், தமக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநில முதல்வருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.
image
அதேப்போல கேரளாவில் நடைபெற்ற திருக்காகரை இடைத்தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சியின் வேட்பாளரான ஜோ ஜோசப்பை, காங்கிரஸ் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட உமா தாமஸ் 25,016 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மறைந்த எம்எல்ஏ பி.டி.தாமஸின் மனைவி ஆவார். காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது கோட்டையை பிடித்துள்ளது ஆளும் இடதுசாரி அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
image
அதே நேரத்தில் ஒடிசா மாநிலத்தின் பிரஜ்ராஜ் நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட அல்கா மோஹேன்டி வெற்றிபெற்றார். இன்று அறிவிக்கப்பட்ட 3 மாநில இடைத்தேர்தல் முடிவில் உத்தராகண்டில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.