Quartier français” என்று அழைக்கப்படும் புதுச்சேரியின் பிரெஞ்சு குடியிருப்பு பகுதிகளைப் போல காரைக்காலில் கிடையாது. கவர்னர் மஹால் எனப் பெயர் விளங்கிய ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியை சுற்றித் தான் பெரும்பாலான சொல்தாக்கள் வாழ்ந்தார்கள். இவர்களுக்கான பிரெஞ்சு பிரதிநிதிகள் வந்து போகும் இடமான அலியான்ஸ் பிரான்சே கட்டிடம் கவர்னர் மஹால் பகுதியின் தெய்த்தா வீதியில் தான் அமைந்திருக்கிறது.

நகராட்சி அலுவலகம் நீதிமன்ற வளாகம் தொடங்கி, பொது மருத்துவமனை பள்ளிக்கூடங்கள் வரை அமைந்திருக்கும் இந்த பகுதியின் பிரதான வீதிகளாக ஜவஹர்லால் நேரு வீதியும் மாதா கோவில் வீதியும் திகழ்கின்றன. இன்று ஜவஹர்லால் நேரு வீதி என்ற பெயரில் திகழும் முன்னாள் கவர்னர் மஹால் வீதி, இருபுறமும் மரங்கள் நடப்பட்ட அகலமான நடைபாதைகளை கொண்ட வீதி.

Alliance francais karaikal

பிரெஞ்சு நிர்வாக சிறப்புகளில் ஒன்றாக நேர்க்கோட்டில் அமைந்த பெரும்பாலான வீதிகளைக் கொண்ட நகர வடிவமைப்பைக் குறிப்பிடலாம். புதுவையின் மரங்கள் சூழ்ந்த அகலமான நடைபாதைகளைக் கொண்ட நேர்க்கோட்டு வீதிகளின் அழகை குறிப்பிட்டு,

“நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு” எனும் சொலவடை உண்டு.

லஞ்சம் மலிந்திருந்த பிரெஞ்சு காலனியாதிக்க நிர்வாகத்தைக் குட்டும் பொருட்டே “நீதி அழகு இல்லையென்றாலும்” வார்த்தைகள்!

“காரைக்கால் வீதி பார் காதர் சுல்தான் வீடு பார்” எனக் காரைக்கால் வீதிகளின் புகழ் பாடிய ஒரு பழங்கால சொலவடையும் உண்டு!

இதில் காதர் சுல்தான் வீடு எனக் குறிப்பிடப்படுவது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிங்கப்பூரில் பொருளீட்டி பெரும் செல்வந்தராக வாழ்ந்த காரைக்காலின் மூனா காதர் சுல்தான் என்பவர் கட்டிய காதர் சுல்தான் மஹால் எனும் கலைநயமிக்க வீடு.

குடிநீர் வடிகால், குழாய் பதிப்பு, மின்சார கம்பி பதிப்பு, தொலைத்தொடர்பு தேவை என முடிவுகளற்ற நகராட்சி அகழ்வாராய்வு பணிகளாலும், முறையான பராமரிப்பின்மையாலும் புதுச்சேரி வீதிகள் அவற்றின் பெருமைகளை இழந்து மாமாங்கம் ஆகி , அதுவே பழகியும் விட்டது !

Governor mahal karaikal

தோளைத் தொடும் நரைத்த முடி, பிரெஞ்சு குறுந்தாடி, வட்டக்கண்ணாடி எனச் சகல அறிவுஜீவி அடையாளங்களுடன் கையில் ஒரு தோள் பெட்டியை தூக்கிகொண்டு, அலியான்ஸ் பிரான்சே கட்டிடத்தைச் சுற்றி அலைந்துகொண்டிருந்த ஒரு சொல்தாவுக்கு இளவட்டங்கள் சூட்டிய நாமகரணம் போஞ்சூர் முசியே !

பிரெஞ்சில் “Bonjour” என்றால் காலை வணக்கம். யார் எத்தனை முறை போஞ்சூர் சொன்னாலும், போஞ்சூர் போஞ்சூர் என அலுப்பில்லாமல் பதில் முகமன் கூறியதால் அவருக்கு அந்த பெயர். “அண்ணன்மார்களின் அலப்பறைகளுக்கு” பழகிய பள்ளி பிள்ளைகளான எங்களுக்கும் அவரை கண்டாலே போஞ்சூர் என அலறுவது பழக்கமாகிவிட்டிருந்தது !

அவர் நடுநிசியில் எதிர்ப்பட்டால் கூட போஞ்சூர் முசியே என உரக்கக் கூவுவது வழக்கம் ! அந்த மனிதரும் கையை உயர்த்தி, முகம் மலர பதில் கூறுவார். போஞ்சூர் தொந்தரவுகள் எதிர்ப்படாத சமயங்களில் தெருவில் எதிர்ப்படும் நாய், பூனைகளிடம் மண்டியிட்டுக் கொஞ்சிக்கொண்டிருப்பார் ! அப்பாவியான குணமுடையவர் என்றாலும், நல்ல வசதியுடன் வாழ்ந்தவர்.

காரைக்கால்வாசிகள் தங்கள் பிள்ளைகளின் “பிரான்ஸ் எதிர்காலம்” பற்றித் திட்டமிடுவதில் இரண்டு வகை உண்டு. பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளையும் பிரான்ஸுக்கு எதிர்காலத்தில் அழைத்துக்கொள்ளவோ அல்லது அனுப்பி வைக்கவோ திட்டமிடுதல் முதல் வகை .

இரண்டாவது,

“குடியுரிமை இல்லாவிட்டாலும் பரவாயில்லை பிள்ளையைப் பிரெஞ்சும் படிக்க வைப்போம்… சொந்த பந்தம் அக்கம் பக்கம் என ஏதாவது பிரெஞ்சு குடியுரிமை வரன் அமைந்தால் உதவும்… அப்படி வந்தால் பிரான்ஸ் வராவிட்டால் வளைகுடா !”

என்பதான ஒருவகை எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு அல்லது கனவு !

சொல்தாக்களின் பிள்ளைகள் பிரெஞ்சு குடியுரிமை கிடைக்கும் பட்சத்தில் உதவும் என்ற நப்பாசையில் பகுதி நேரமாகப் பிரெஞ்சு படிக்க அலியான்ஸ் பிரான்சே பக்கமெல்லாம் ஒதுங்க மாட்டார்கள். பிரெஞ்சு குடியுரிமை காப்பு பலம் என்பதால், ஊரின் பிரெஞ்சு பள்ளியில் ஆரம்பக் கல்வி, பின்னர் புதுச்சேரி Lycée françaisவில் மேற்படிப்பு, அங்கிருந்து பிரான்ஸ் என அவர்களின் எதிர்கால “ஸ்கெட்ச்” மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் அமைந்திருந்தது !

Kader sultan mahal

அவ்வப்போது பிரெஞ்சில் “பீட்டர்” விடும் சொல்தா வீட்டுப் பெண் பிள்ளைகளுக்கு உள்ளூர் ரோமியோக்களால் அனுப்பப்பட்ட காதல் தூதுகளில் பிரெஞ்சு குடியுரிமை கனவும் கண் சிமிட்டிக்கொண்டிருந்தது ! அப்படியான காதல்கள் பெண்பிள்ளை பிரான்சுக்கு “கப்பல்” ஏறியதுமே முடிவுக்கு வந்துவிடும் !

லியான்ஸ் பிரான்சேவில் நான் பிரெஞ்சு கற்றுக்கொண்டிருந்த சமயத்தில், புதிய கெளரவ தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் எனப் பேச்சு…

பிரசிடெண்ட் அறையை எட்டிப்பார்த்த போது, அங்கே போஞ்சூர் முசியே அமர்ந்திருந்தார் !

ங்கள் தெருமுனை சஹீது நானா பெட்டிக்கடையில் கூடும் மாலைநேர இளவட்ட ஜமாவின் வம்பு பேச்சுகளில் நிரந்தர இடம் பிடித்தவர் ஜீ பூம்பா சொல்தா !

தட்டையான ஏணிமரம் போல அமைந்த, ஆறு அடியை தாண்டிய தேகம். பனைமர உயரத்துக்கு உச்சாணிக் கொம்பு போல மேல் நோக்கி வளர்ந்த பரட்டை முடி. எதிர்ப்படுபவர்கள் தன்னை அண்ணாந்து பார்ப்பதையே அறியாத, ஆகாச பார்வை ! கால்களையும் கைகளையும் வீசி கவாத்து நடை ! காக்கி அரைக்கால் சட்டை. பொத்தான்கள் மாட்டாததால், அவரது உயரத்துக்கும் நடையின் வேகத்துக்கும் துணி அலையாய் பின்னால் தவழும் சட்டை !

ஜீ பூம்பாவுக்கான பெயர்க்காரணம் புரிந்துவிட்டதா ?!

Lycée francais pondichéry

கையில் ஒரு குவார்ட்டர் பாட்டிலும், கால்சட்டை பையில் ஒரு குவார்ட்டர் பாட்டிலுமாக, யாரிடமும் பேசாமல் கவாத்து பழகும் அவரை பற்றிய ஏராளமான கதைகள் சஹீது நானா கடை “அந்தி ஜமாவில்” புழங்கின. அவற்றில் முதன்மையானது அவர் வீட்டிலிருக்கும் சமயங்களில் ஆடைகளின்றி இருப்பார் என்பது !

தன்னந்தனியாக அவர் வசித்த, ஜன்னல்களும் கூட மூடப்பட்ட வீட்டைத் தெரு சிறுவர்கள் வட்டமிட்டுக்கொண்டே இருப்பார்கள்…

என்றாவது அரிதாகத் திறந்திருக்கும் ஜன்னல் வழி அல்லது வாசல் கதவு வழி யாராவது எட்டி பார்த்துவிட்டால்,

“தெகாஜ்” எனும் ஜீ பூம்பா சொல்தாவின் குரல் தெருவையே கிடுகிடுக்க வைக்கும் !

“Dégage” எனும் பிரெஞ்சு வார்த்தைக்கு, பேச்சு வழக்கில் போய் தொலை என அர்த்தம்.

றக்குறைய அத்தனை வெட்டி உறுப்பினர்களும் ஆஜராகி, அந்தி ஜமா உச்சத்துக்குக் களைகட்டி நீண்டுகொண்டிருந்த ஒரு முன்னிரவில் கடைக்கு வந்தான் மரமேறி மரியநாதன்.

அனைத்து வீட்டுத் தென்னைமரங்களின் பராமரிப்புக்கும் குத்தகை எடுக்காமலேயே உரிமை பெற்றிருந்தவன் அவன் ! ஒன்றுக்கும் உதவாத தகவலைக் கூட “கண்,காது, மூக்கு” வைத்து அலங்கரித்துப் பேசி அனைவரையும் சிரிக்க வைக்கும் ஜமா கதாநாயகர்களை வாய் பிளந்து பார்த்தபடி இருப்பது அவன் வழக்கம். தனக்கு அந்த திறமை வாய்க்கவில்லையே என்ற ஏக்கமாக இருந்திருக்கலாம்…

அன்றும் அப்படி சிறிது நேரம் திகைத்து இருந்தவன்,

“நானா… ஒரு பீடி…”

சஹீது நானா கொடுத்த பீடியைப் பற்றவைத்து ஒரு இழுப்பு இழுத்துக்கொண்டவன்,

“ச்சே… ஏந்தான அந்த மரத்துல ஏறினேனோ…”

தலையை உலுக்கிப் புலம்பினான் !

“அப்பா…மண்டையில் இருந்து போக மாட்டேங்குதே.”

அடுத்த இழுப்புக்கு மீண்டும் ஒரு புலம்பல்.

மெல்ல மற்றவர்களின் பேச்சு மட்டுப்பட தொடங்கியது… அனைவரின் பார்வையும் மரியநாதனை நோக்கிக் குவிய,

“ஓய் ! என்னத்தாம்புள்ள கதை ?”

சஹீது நானாவின் செல்ல அதட்டல் !

“இல்ல நானா… ஜீ பூம்பா வூட்டுக்கு பக்கத்து அலி நானா வீட்டு மரத்துல தேங்கா பறிக்க ஏறினேனா… அந்தப்பக்கம் திரும்பி பார்த்தா ஜீ பூம்பா வீட்டு முத்தத்துல… சாய்வு நாக்காலியில…”

“ஓய் ! சொல்லி தொலையும் !”

அவன் முத்தாய்ப்பாக நிறுத்திப் பீடி இழுக்க, சஹீது நானாவில் அவசர அதட்டல் !

“சாய்வு நாற்காலியில் அந்த ஆளு அம்மணமா கிடக்கான் நானா !”

அன்றிலிருந்து சஹீது நானா பெட்டிக்கடை பலகையில் மரமேறி மரியநாதனின் பெயரும் பொறிக்கப்பட்டுவிட்டது ! ஜீ பூம்பா சொல்தாவை பற்றி பல்வேறு கதைகளைக் கட்டவிழ்த்துப் பிரபலமானவனிடம், அலி நானா வீட்டுத் தென்னை மரங்கள் ஒவ்வொரு நாளுமா காய்த்துக் குலை தள்ளுகின்றன என்ற கேள்வியை யாருமே கேட்கவில்லை !

quartier francais pondichery

ப்படியாக தன் வாயை மூடிக்கொண்டிருந்தே மற்றவர்களின் வாய்க்கு அவலான ஜீ பூம்பா சொல்தா ஒரு நாள் இயற்கை எய்தினார். வீட்டுக்குள் இறந்து கிடந்து, மூன்று நாட்கள் கழித்தே தெரியவந்த பரிதாப மரணம்.

“மனுஷன் கால்சட்டை, சட்டையெல்லாம் போட்டுக்கிட்டுதாம்பா கிடந்தாரு !”

அவர் இறந்தது அறிந்ததும் உடனடியாக வீட்டினுள் நுழைந்த சில தைரியசாலிகள் பேசிக்கொண்டார்கள்.

ங்கள் தெரு முனையிலேயே வசித்தவர் டாக்டர் சொல்தா. கோல்டு பிரேம் கண்ணாடி, மடிப்பு கலையாத பேண்ட் சட்டையுடன் சதா சர்வகாலமும் டையும் கட்டிக்கொண்டு இருந்ததால் டாக்டர் !

அதிகாலையில் மஹ்மூதுவிடம் மாட்டிறைச்சி வாங்க ஒயர் கூடையுடன் வரும்போது கூட கழுத்தை டை தழுவியிருக்கும். டாக்டர் சொல்தாவின் நட்பால் மஹ்மூதுவுக்கு “Viande hachée, Bifteck” (கொத்திய கைமா, தொடைப் பகுதியின் எலும்பில்லாத கறி)போன்ற இறைச்சி பற்றிய தொழில்நுட்ப பிரெஞ்சு வார்த்தைகள் தெரிந்திருந்தன !

அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பிரான்சிலிருந்து வந்தவர்களிடம் கல்லா கட்டும் மஹ்மூது, ஒட்டி உலர்ந்த அடிமாட்டுத் தொடையில் கட்டி சதையைத் துழாவித் தேடி, டாக்டர் சொல்தாவுக்கு Bifteck வெட்டிகொடுத்து நன்றிக்கடன் செலுத்துவார் !

முதுமை படுக்கையில் வீழ்த்திய தாய் மற்றும் மூத்த சகோதரியுடன் டாக்டர் சொல்தா வாழ்ந்த வீட்டைப் பற்றியும் முற்றத்தில் நீச்சல் குளம், கூடத்தில் சினிமா புரஜெக்டர் என ஏராளமான கதைகள்.

அவரது சகோதரி ஞாயிறு தோறும் கடைத்தெரு செல்லும் காட்சி மேற்சொன்ன கதைகளுக்கு உண்மை சேர்ப்பது போல நிகழும்…

அந்த வீட்டுக்கு மட்டுமே வரும் பிரத்தியேக ரிக்சாக்காரர் வீட்டுக்கு முன்னால் ரிக்சாவை நிறுத்தி, அதன் மேற்கூரையை மடக்கிய சில நொடிகளில் சதாசர்வகாலமும் ஜன்னல்களும் அடைத்த வீட்டின் கதவைச் சிறிதளவு திறந்துகொண்டு வெளியே வருவார் அந்த பெண்மணி !

சகல ஒப்பனைகளுடன் பருத்தி புடவையில் குளிர் கண்ணாடி சகிதம் ஒய்யாரமாய் ரிக்சாவில் ஏறி அமர்ந்து, பூ வேலைப்பாடுகள் செய்த குடையை விரித்து தோளில் சாய்த்து பிடித்துக்கொள்வார் ! மறு கையில் மடக்கு விசிறி !

சென்றது போலவே சற்றும் ஒப்பனை கலையாத தோற்றத்தில் திரும்பியவர் வீட்டினுள் நுழைந்ததும், கதவு இடுக்கின் வழியே வாங்கிய பொருட்களை கொடுத்துவிட்டுப் போவார் ரிக்சாக்காரர்.

மாதம் ஒரு முறை டாக்டர் சொல்தாவின் தாயாரைப் பரிசோதிக்க வரும் மருத்துவர், வாரம் இருமுறை அந்த மூதாட்டிக்கு ஊசி போட வரும் “பெரிய ஆஸ்பத்திரி” நர்ஸ் ஆகிய இருவருக்கு மட்டுமே அந்த வீட்டின் கதவுகள் திறக்கும்.

டாக்டர் சொல்தா வீட்டின் நிதர்சன கதவுகளும் ஒரு மரணத்தின், அவரது தாயாரின் இறப்பின் காரணமாகத்தான் திறந்தன …

Pondy

மூதாட்டியை அடக்கம் செய்துவிட்டு திரும்பியிருந்த டாக்டர் சொல்தா துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, கழுவிவிடப்பட்ட வீட்டின் கதவுகளும் ஜன்னல்களும் அகலத்திறந்து வைக்கப்பட்டிருந்தன.

வீட்டினுள் எட்டிப்பார்க்க யத்தணித்த எங்களைக் கண்டும் காணாமல் இருந்த டாக்டரின் நிலை கொடுத்த தைரியத்தில் உள்ளே நுழைந்தோம்.

கழுவிய தண்ணீர் கொஞ்சமாய் தேங்கியிருந்த காரை பெயர்ந்த முற்றம்… ஒன்றிரண்டு பழைய மர அலமாரிகளுடன் பழைய பாய் விரிக்கப்பட்ட கூடம்… பலகை ஊஞ்சல் தாழ்வாரம்…

ஒப்பனை அடையாளங்கள் ஏதுவுமின்றி அழுது வீங்கிய கண்களுடன் மூக்கை சிந்திக்கொண்டிருந்த டாக்டர் சொல்தாவின் தங்கையின் தோற்றமும் எங்களின் கற்பனை அடையாளங்கள் எதுவுமற்ற அந்த வீட்டின் சூழலும் ஏதோ ஒரு இனம்புரியாத ஏமாற்ற உணர்வை ஏற்படுத்தின !

தொடரும்…

காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.