ஜம்மு காஷ்மிருக்கு சிறப்பு அங்கீகாரத்தை வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ஒன்றிய அரசு திரும்பப் பெற்றதை அடுத்து ஜம்மு, காஷ்மிர் மற்றும் லடாக் என மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் கீழ் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பிரதமர் மோடியின் பெயரிலான சிறப்பு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான காஷ்மிர் பண்டிட்கள் அங்கு பணியமர்த்தப்பட்டனர். இப்படி இருக்கையில், கடந்த சில நாட்களாக அங்கு நாளொரு மேனியும் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. 

அதன்படி ஜம்முவில் 2 நாட்களுக்கு முன் ரஜினிபாலா என்ற ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். அதேபோல நேற்று (ஜூன் 1) ஃபரூக் அகமது ஷேக் என்பவர் சோஃபியான் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் சுடப்பட்டார். ஆனால் அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை.


தற்போது இன்று காலை (ஜூன் 2) தெற்கு காஷ்மிரின் குல்காம் பகுதியில் உள்ள இலாகி தேஹாதி வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த விஜயகுமார் என்பவர் தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் மர்மநபரால் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டார். இதனையடுத்து வங்கியில் இருந்த சக ஊழியர்கள் விஜயகுமாரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமாங்கர் பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த வங்கி அதிகாரி அண்மையில்தான் இங்கு பணியில் சேர்ந்தார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியை ஜம்மு & காஷ்மிர், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர் சுற்றி வளைத்து தங்களது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.


ராஜஸ்தானைச் சேர்ந்த வங்கி அதிகாரி காஷ்மிரில் கொல்லப்பட்டதற்கு கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், “ஜம்மு & காஷ்மிரில் அமைதியை நிலைநாட்ட மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாகவும், காஷ்மிர் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், நமது குடிமக்கள் மீதான தீவிரவாதிகளின் கொலை வெறியாட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், காலை வங்கி அதிகாரியை மர்மநபர் ஒருவர் சுட்டுக் கொன்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், முகமூடி அணிந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது பதிவாகியிருக்கிறது. அந்த காணொலியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இப்படியாக ஜம்மு, காஷ்மிர் பகுதிகளில் அண்மைக்காலமாக படுகொலை சம்பவங்களும், பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருவதால் அங்கு வாழும் காஷ்மிர் பண்டிட்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே திட்டமிட்டு கொலை சம்பவங்கள் அரங்கேற்றப்படுவதாகவும், காஷ்மிரை விட்டு வெளியேற நினைத்தாலும் தங்களை வெளியேற விடாமல் அரசு தடுக்கிறது எனவும் குற்றஞ்சாட்டி காஷ்மிர் பண்டிட்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் ஜம்மு & காஷ்மிரில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

ALSO READ: ’கூகுள் சந்தேகங்களுக்கு ரூ.1000’ : நெட்டிசன்களின் வரவேற்பை பெற்ற மருத்துவரின் OPD கட்டணம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.