சென்னையில் 6 பேர் கொண்ட கும்பலால் பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர் (34). இவர் பாஜக பட்டியலின பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார். இவரது பெற்றோர் வீடு சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருப்பதால் அடிக்கடி இங்கு வந்து செல்வது வழக்கம். மேலும் இவருக்கு கொலை மிரட்டல் இருப்பதால் தனியாக போலீஸ் பாதுகாப்பை பெற்று உடன் எப்போதும் காவலர் செல்வார்.

இந்நிலையில் நேற்றிரவு சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில் பைக்கில் வந்துள்ளார். அப்போது உடன் வந்த பாதுகாப்பு போலீஸ் பாலகிருஷ்ணன் டீ குடிக்கச் சென்றார். பைக்கில் சாலையோரமாக நின்றிருந்த பாலச்சந்தரை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்னை காவல் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, கிழக்கு மண்டல இணை ஆணையர் பிரபாகர், திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் ஆகியோர் நேரில் வந்து சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர்.

கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாலச்சந்தர் தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பாதுகாப்பு காவலர கேட்டிருந்ததும் அதன்பேரில் பாலச்சந்தருக்கு பாதுகாப்பு காவலர வழங்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. சம்பவம் நடந்த நேரத்தில் பாலச்சந்தர் தனது நண்பர்களுடன் பேசி விட்டு வருவதாக சென்றபோது பாதுகாப்பு காவலர் டீ அருந்தி விட்டு வருவதாக பாலச்சந்தரிடம் கூறிவிட்டு அருகில் உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் பாலச்சந்தரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பாலசந்தரின் உறவினர்கள் துணிக்கடை நடத்தி வருகின்றனர். அந்த கடையில் மாமூல் கேட்டு அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் தொல்லை கொடுத்து வந்ததால் பாலசந்தர் காவல்துறையிடம் புகார் அளித்தார். பிரதீப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

image

இதனால் பிரதீப்பின் தந்தை மோகன் என்ற தர்கா மோகனுக்கும், பாலசந்தருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த பிரதீப், நேற்று மீண்டும் பாலசந்தர் உறவினரின் துணிக்கடைக்கு சென்று அங்குள்ளவர்களை மிரட்டி வந்ததால், மீண்டும் பிரதீப் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் தனது தந்தை மோகனுடன் சேர்ந்து பாலசந்தரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி வந்தததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மோகன், அவரது மகன் பிரதீப் உட்பட 6 பேர் சேர்ந்து பாதுகாப்பு போலீஸ் இல்லாத சமயத்தில் பாலசந்தரை கொலை செய்து விட்டு தப்பியோடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் கொலையாளிகளை கைது செய்த பிறகே முழுமையான காரணம் தெரியும் என்று சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தெரிவித்துள்ளனர்.

image

கொல்லப்பட்ட பாலச்சந்தர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்து மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளராக இருந்துள்ளார். அப்போது பசு மாட்டு தலையை வெட்டி வைத்து, அதை மாற்று மதத்தினர் வைத்ததாக பொய் புகார் கூறி மத கலவரத்தை உண்டாக்க முயன்றதாக பாலச்சந்தர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் பாலச்சந்தர் இருந்துள்ளார். பாஜகவில் பொறுப்பு பெற்ற பிறகு கடந்த 2019ல் ரவுடி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து கொலையாளிகள் விரைந்து கைது செய்யும் பணியை தீவிரப்படுத்தவும், வழக்கு விசாரணை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சென்னையில் 24 நாட்களில் 18 கொலைகள் என்பது வெளியாகும் தகவல் தவறானது. இந்த மாதத்தில் 10 கொலைகள் நடந்துள்ளது. 4 கொலைகள் முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது. மீதி குடும்ப பிரச்னை காரணமாக நடந்துள்ளது. கடந்த ஆண்டு கொலை வழக்கை விட இந்தாண்டு 25 சதவீத கொலைகள் துப்பு துலங்கி கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

image

பாஜக நிர்வாகி கொலை சம்பவத்தில் சம்பந்தப்ட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையா? என்பது தொடர்பாக துறைரீதியிலான விசாரணை நடந்து வருகிறது. முதலில் முதற்கட்ட விசாரணை அறிக்கை வந்ததும் பார்க்கலாம். பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் பகுதிகளில் கொலை நடப்பது இது ஒன்றும் முதல் முறை இல்லை.

இந்த சம்பவத்தை வைத்து காவல்துறை மீது ரவுடிகளுக்கு பயமில்லை என்று கூறமுடியாது. சட்டப்படி நடந்து வருகிறோம். சென்னை மாநகர் அமைதியான இடம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. கொலை நடக்கவில்லை என்று கூறமுடியாது. ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும்.

பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 64 ஆயிரம் சிசிடிவிக்களில் 4 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் மட்டுமே அரசு செலவில் அமைக்கப்பட்டுள்ளது. பழுதான சிசிடிவி கேமராக்களை பழுதுபார்க்கும் பணி நடந்து வருகிறது’ என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

பாலச்சந்தர் சமூக வலைதளங்களில் மத ரீதியிலான பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து வந்ததால் கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. இதையடுத்தை போலீஸ் பாதுகாப்பை கேட்டு பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கும்பல் ஒன்றிற்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை ஏற்கனவே சென்னை காவல்துறைக்கு எச்சரித்து இருந்ததாக கூறப்படுகிறது

இந்நிலையில் தான் பாலச்சந்தர் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்பு மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வைத்து பாஜக பிரமுகரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.