நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும்விதமாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சீமானுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனைச் சீமான் விமர்சித்திருந்தார். இந்த நிலையில், கரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, “நவீன இந்தியாவின் தந்தையாகவும், பஞ்சாயத்து ராஜ் எனும் திட்டத்தின் மூலம் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்கிய முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் குறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில் குறித்து, சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தேன். அதற்கு நேர்மையாகப் பதிலளிக்க முடியாத சீமான், என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் எண்ணத்தில் ஆபாசமாகவும், வக்கிரமாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார். சீமான்மீது தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டை நான் கூறவில்லை. பொதுவெளியில் ஆதாரத்துடன் கூறி விஜயலட்சுமி, காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரில் உண்மை இல்லை என்றால், சீமான் மான நஷ்டஈடு வழக்கு நீதிமன்றத்தில் ஏன் தொடுக்கவில்லை?

பேட்டியளிக்கும் ஜோதிமணி

சீமானுக்கு எதிராக இதே விவகாரம் குறித்துப் பல ஆண் தலைவர்கள் கருத்து தெரிவித்தபோது, பதிலளிக்காத சீமான், ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்றுகூட பாராமல் எனக்கு எதிராகக் கூறிய கருத்துகள்தான் அவருடைய தரம். அவருடைய தகுதி என்ன என்பது வெளிப்பட்டுவிட்டது. சீமான் அளித்த பேட்டியில், `சகோதரி’ என்று என்னைக் கூறிவிட்டு, பிறகு ஆபாசமாகவும், வக்கிரமாகவும் பேசியதில் அவரின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது.

அரசியலில் உள்ள பெண்கள்மீது அவதூறு பரப்புவது, ஆபாச தாக்குதல் நடத்துவது, அருவருக்கத்தக்க வகையில் பேசுவதால் பெண்கள் அரசியலை விட்டு ஓடிவிடுவார்கள் என நினைக்கிறார் சீமான். ‘கரூர் மக்களவையில் ஜோதிமணிக்கு வாக்களித்தவர்கள் மானங்கெட்டு வாக்களித்தார்கள்’ எனத் தரம் தாழ்ந்த விமர்சனத்தைச் சீமான் வைத்துள்ளார். அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கரூர் மக்களவை வாக்காளர்களிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் எனவும், கரூரில் உள்ள எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த எனக்கு 25 ஆண்டுக்கால அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத போராட்டவாதியாக, நேர்மையாக மக்கள் பணியாற்றிட மக்களவை உறுப்பினராகக் கரூர் மக்கள் வாய்ப்பு அளித்தார்கள். கரூர் மக்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் நேர்மையாக உழைத்து வாழ்பவர்கள் சீமானைப் போல இலங்கைத் தமிழர்களையும், அப்பாவித் தமிழ் மக்களையும் சுரண்டி ஆடம்பரமாக வாழ்பவர்கள் அல்ல. எனவே கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்காளர்களைப் பற்றிப் பேச சீமானுக்கு எந்த அருகதையும் இல்லை.

பேட்டியளிக்கும் ஜோதிமணி

எனவே, சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ‘சீமான் நீதிமன்றத்தில் பாலியல் குற்றவாளி என அறிவிக்கப்படாத நிலையில், இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைப்பது சரியா?’ எனச் செய்தியாளர்களாகிய நீங்கள் கேட்கிறீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் போலச் செயல்பட்டு வரும் நாம் தமிழர் கட்சி சீமான், பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகர் ராகவன் மீது பாலியல் புகார் எழுந்தபோது, ‘ஆண்களில் யாரும் செய்யாத தவறையா ராகவன் செய்துவிட்டார்?’ என்று விளக்கம் கூறி, பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், தமிழகத்தில் உள்ள நான்கு கோடி பெண்கள் குறித்து கவலை கொள்ளாமல், பொதுவெளியில் இதுபோன்று ஒரு பெண் எம்.பி-யை வக்கிரமாக பேசுவது எந்த வகையில் நியாயம்?

நாம் தமிழர் கட்சியிலும் பெண் தங்கைகள், தம்பிகள் கருத்து முரண்பாடுடன் பயணித்து வருகிறார்கள். அவர்களைச் சீமான் தவறாக வழிநடத்தி விடக்கூடாது என்பதற்காக, தொடர்ந்து சீமானுடைய முகத்தைத் தோலுரிக்கும் பணியினை மேற்கொள்வேன். சீமானுடைய உண்மையான முகத்தைத் தமிழக மக்களுக்குத் தெரியவைப்பேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.