அதிவேக பவுலர்களை எல்லாம் முன்னரே பயன்படுத்தி விட்டதால் கடைசி ஓவரை யார் வீசுவது என்பதில் ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் ரிஸ்கான முடிவையே எடுத்துவிட்டார். கடைசி ஓவரில் அந்த முடிவை எடுக்க எந்த கேப்டனும் யோசிப்பார்கள்.

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் அழுத்தத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. கொல்கத்தா அணியின் ஓப்பனர்களாக வெங்கடேஷ் அய்யர், ரகானே களமிறங்கினர். இருவரும் அதிரடியாக தலா ஒரு பவுண்டரி விளாச, திடீரென மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி அதிர்ச்சி அளித்தார் வெங்கடேஷ்.

அடுத்து வந்த நிதிஷ் ரானா நிதானமாக துவங்கி, அதிரடியாக நடராஜன் ஓவரிலேயே பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசி வான வேடிக்கை காட்டினார். மார்கோ ஜான்சன் வீசிய ஓவரிலும் 2 சிக்ஸர்களை ரானா அடித்து அசத்தினார். இந்த வேகத்திற்கு தன் அதிவேகம் மூலம் ஸ்பீட் ப்ரேக்கர் போட்டார் உம்ரான் மாலிக். நிதிஷ் ரானாவை பெவிலுயனுக்கு அனுப்பிவைத்து விட்டு, அவருக்கு துணையாக ரகானேவையும் அதே ஓவரில் விடைகொடுத்தார் உம்ரான்.

அடுத்து வந்த ஸ்ரேயாஷ் அய்யர், சாம் பில்லிங்ஸ் இணை நெருக்கடியை உணர்ந்து பொறுமையாக விளையாடத் துவங்கியது. ஆனால் அங்கும் வில்லனாக வந்த உம்ரான், ஸ்ரேயாஸ் விக்கெட்டை காலி செய்தார். அடுத்து வந்த ரிங்கு சிங்கை எல்பிடபுள்யூ ஆக்கி நடராஜன் வெறியேற்ற கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் மொத்தமாக வீழ்ந்தது. அதாவது 94 ரன்களுக்குள் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அடுத்து வந்த ரஸல் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக் கோட்டுக்கு விரட்டி அதிரடி காட்டினார். மற்ற பந்துகளில் கட்டைப் போட்டார்.

நடராஜன் ஓவரில் ரஸல் சிக்ஸர் விளாச, உம்ரான் ஓவரில் பில்லிங்ஸ் பவுண்டரிகளை விளாசியதால் ஸ்கோர் மீண்டும் உயரத் துவங்கியது. சிக்கன பவுலராக இந்த சீசனில் வலம்வரும் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சிலும் இந்த கூட்டணி பவுண்டரிகளை விரட்ட தவறவில்லை. இருப்பினும் அவரது பந்துவீச்சில் இந்த அதிரடிக் கூட்டணிக்கு முடிவுரை எழுதப்பட்டது. பில்லிங்ஸ் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த சுனில் நரைன் நிதானமாக விளையாடினார்.

அதிவேக பவுலர்களை எல்லாம் முன்னரே பயன்படுத்தி விட்டதால் கடைசி ஓவரை ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் வீச வைத்தார் கேப்டன் வில்லியம்சன். ஆனால் இதை சரியாக பயன்படுத்தி ரஸல் ருத்ர தாண்டவம் ஆடினார். மூன்று சிக்ஸர்களை விளாசி ரஸல் அமர்களப்படுத்தியதால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 177 ரன்களை கொல்கத்தா அணி குவித்தது. சிக்ஸர் விளாசப்பட்ட மூன்று பந்துகளும் புல் டாஸ் பந்துகளில். நன்றாக் அடிக்கக் கூடிய பேட்ஸ்மேனுக்கு யாரும் புல் டாஸ் பந்து வீசமட்டார்கள். வாஷிங்டன் சுந்தர் ஏன் அப்படி வீசினார் என்று தெரியவில்லை. ஆனால், அத்தனை பந்துகளையும் எல்லைக்கோட்டுக்கு வெளியே பறக்கவிட்டார் ரஸல்.

வெறும் 28 பந்துகளை சந்தித்து 49 ரன்களை விளாசினார் ரஸல். ஒரு ரன்னில் அரைசதம் மிஸ்! இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைவான பந்துகளில் (1120 பந்துகள்) 2 ஆயிரம் ரன்களை கடந்த புதிய சாதனையை படைத்தார். 94 ரன்களுக்கு முக்கிய விக்கெட்டுகள் சரிந்த நிலையில், தன்னுடைய அதிரடியால் மீண்டுமொருமுறை அணியை மீட்டுள்ளார் ரஸல். அவர் இந்த சீசன் முழுவதும் சரியாக விளையாடவில்லை. இதுதான் இந்த சீசனின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர். மொத்தம் 181 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சீசன்களில் இதேபோல் தான் அணி கடும் சரிவை சந்திக்கும் தருணங்களில் களமிறங்கி ஆபத்பாண்டவனாக மாறி சிக்ஸர் மழை பொழிந்து ரன்னை உயர்த்தி கொடுப்பார். 

image

இருந்தபோதும் ரன்களை வழங்கும் பவுலர் என தன்மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி பதில் அளித்திருக்கிறார் உம்ரான் மாலிக். தற்போது 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.