சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியை சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி இன்னமும் அந்த ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

சென்னை அணியே முதலில் பேட் செய்திருந்தது. கான்வேயும் ருத்துராஜூம் மிகச்சிறப்பாக ஓப்பனிங் கூட்டணியை அமைத்திருந்தனர். தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியில் இந்த கூட்டணி அரைசதத்தை கடந்திருந்தது. இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 110 ரன்களை சேர்த்திருந்தனர். இதன்பிறகு, சிவம் துபே, மொயீன் அலி, தோனி ஆகியொர் ஆடிய ஆட்டத்தில் சென்னை அணி 208 ரன்களை எடுத்திருந்தது.

சேஸிங்கை தொடங்கிய டெல்லி அணி சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை விட்டுக்கொண்டே இருந்தது. ஏறக்குறைய 11 வது ஓவருக்குள்ளேயே டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரும் அவுட் ஆகிவிட்டனர். டெல்லியின் தோல்வியும் அங்கேயே உறுதியாகிவிட்டது. அதன்பிறகு, வீசப்பட்ட ஓவர்கள் எல்லாம் சம்பிரதாயத்துக்காக மட்டுமே வீசப்பட்டது.   சென்னை அணி ஒரு நல்ல பெரிய வெற்றியை பதிவு செய்தது.

image

நேற்றையை போட்டியில் இரண்டு அணிகளின் வெற்றி தோல்வியையும் நிர்ணயித்த விஷயமாக ஸ்பின்னர்களே இருந்தனர். ஸ்பின்னர்களின் பெர்ஃபார்மென்ஸ்தான் இரண்டு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாகவும் இருந்தது. சென்னை அணியின் ஸ்பின்னர்களான மஹீஸ் தீக்சனா மற்றும் மொயீன் அலி இருவரும் 8 ஓவர்களை வீசி 42 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர். எக்கானமி ரேட் 5.25 மட்டுமே. 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், ரிஷப் பண்ட், ரிப்பல் படேல் என இவர்கள் வீசிய நான்கு விக்கெட்டுகளுமே ரொம்பவே முக்கியமான விக்கெட்டுகள்.

மஹீஸ் தீக்சனா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே நல்ல ஃபார்மிலிருந்த டேவிட் வார்னரை lbw ஆக்கியிருப்பார். மொயீன் அலி வீசிய முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஸ் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை பறிகொடுத்திருப்பார். அவர் வீசிய அடுத்த ஓவரில் ரிஷப் பண்ட் போல்ட் ஆக, ரிப்பல் படேல் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆகியிருப்பார். மைதானத்தின் பெரிய பகுதியை கணக்கில் கொண்டு மொயீன் அலி வகுத்த வியூகமும் தோனி செய்த ஃபீல்ட் செட்டப்பும் நல்ல பலனை கொடுத்தது. மஹீஸ் தீக்சனா மற்றும் மொயீன் அலி வீசிய இந்த மூன்று ஓவர்களும்தான் சென்னைக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது.

அப்படியே டெல்லி பக்கமாக வருவோம். டெல்லி அணியின் ஸ்பின்னர்களான அக்சர் படேலும் குல்தீப் யாதவும் 6 ஓவர்களை வீசியிருந்தனர். இந்த 6 ஓவர்களில் 66 ரன்களை கொடுத்திருந்தனர். எக்கானமி ரேட் 11. இந்த 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட இவர்களால் வீழ்த்தியிருக்க முடியவில்லை. சென்னை அணி பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை கூட விடாமல் 57 ரன்களை எடுத்திருந்தது. ரன்ரேட் ஏறக்குறைய 10 ஆக இருந்தது. பவர்ப்ளேக்கு பிறகு 5 ஃபீல்டர்கள் வெளியே நிற்கும் சமயத்தில், மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் சென்னையின் ரன்ரேட்டை இழுத்து பிடித்து கொஞ்சமேனும் இறங்க வைத்திருக்க வேண்டும். ஆனால், அதைக்கூட அவர்கள் செய்யவில்லை. 7-15 மிடில் ஓவர்களில் அக்சரும் குல்தீபும் வீசிய 5 ஓவர்களில் மட்டும் 52 ரன்கள் சென்றிருந்தது. டெவான் கான்வே ரொம்பவே சௌகரியமாக இறங்கி வந்து நேராகவும் ஸ்வீப் ஆடியும் பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் அடித்திருந்தார்.

image

பிரச்சனை டெல்லி ஸ்பின்னர்களிடம் மட்டுமே இருப்பதாக தெரியவில்லை. அணித் தேர்விலேயே பிரச்சனை இருக்கிறது. சென்னை அணியின் ப்ளேயிங் லெவனில் மொத்தம் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதில் கான்வே, மொயீன் அலி, சிவம் துபே என மூன்று பேர் டாப் 4 இல் ஆடக்கூடிய முக்கியமான பேட்ஸ்மேன்கள். எப்போதுமே இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை ஸ்பின்னர்கள் என்பது நல்ல மேட்ச் அப்பாக இருக்காது. இடது கை ஸ்பின்னர்களை இடது கை பேட்ஸ்மேன்கள் சுலபமாக அட்டாக் செய்துவிடுவர். ஆனால், நேற்று டெல்லி அணியிலிருந்த அக்சர் படேல், குல்தீப் யாதவ் இருவருமே இடதுகை ஸ்பின்னர்கள்.

இருவருமே இந்த சீசனில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அவ்வளவு நன்றாக வீசவும் இல்லை. 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான பர்ப்பிள் தொப்பி பட்டியலில் சஹாலுக்கு அடுத்த இடத்தில் குல்தீப் இருக்கிறார். குல்தீப் எடுத்திருக்கும் இந்த 18 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்களுடையது. இந்த நான்கிலும் ரபாடாவை ஒரு முறையும் நரைனை இரண்டு முறையும் வீழ்த்தியதும் அடங்கும். இருவருமே முழுமையான பேட்ஸ்மேன்கள் கிடையாது. திடமான பேட்ஸ்மேன் என பார்த்தால் டீகாக்கின் விக்கெட்டை மட்டுமே குல்தீப் யாதவ் வீழ்த்தியிருக்கிறார்.

image

அக்சர் படேல் இந்த சீசனில் சுமாராகத்தான் வீசியிருக்கிறார். 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்யியிருக்கிறார். இந்த நான்கில் வெங்கடேஷ் ஐயருடையது மட்டுமே இடதுகை பேட்ஸ்மேனுடைய விக்கெட்.

டெவான் கான்வேதான் ஸ்பின்னர்களுக்கு எதிராக வெளுத்தெடுத்திருந்தார். அவருமே கடந்த நான்கு ஆண்டுகளில் இடதுகை ஸ்பின்னர்களுக்கு எதிராக 28 இன்னிங்ஸ்களில் 4 முறை மட்டுமே அவுட் ஆகியிருக்கிறார். ஆவரேஜ் 95 க்கும் மேல் இருக்கிறது. ஆக, மேட்ச் அப்பாக பார்த்தாலும் சரி ரெக்கார்டாக பார்த்தாலும் சரி டெல்லியின் இடதுகை ஸ்பின்னர்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை.

இந்த சமயத்தில் சென்னை அணியின் கடந்த போட்டியையும் கணக்கில் கொள்ள வேண்டும். பெங்களூருவிற்கு எதிரான அந்தப் போட்டியில் பெங்களூரு அணியில் வனிந்து ஹசரங்கா, ஷபாஷ் அஹமது, மேக்ஸ்வெல் மூன்று ஸ்பின்னர்கள் வீசியிருந்தனர். மேட்ச் அப்பின் படி லெக் ஸ்பின்னரான ஹசரங்காவும் இடது கை ஸ்பின்னரான ஷபாஷூம் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு செட் ஆகாதவர்கள். மேக்ஸ்வெல் பார்ட் டைமராக இருந்தாலும் ஒரு ஆஃப் ஸ்பின்னர், அவரால் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலளிக்க முடியும். இந்த மேட்ச் அப்பின் படிதான் ஆட்டமும் சென்றிருந்தது. கான்வே ஹசரங்காவையும், ஷபாஷையும் அட்டாக் செய்திருந்தார். மேக்ஸ்வெல்லுக்கு எதிராக அடக்கியே வாசித்திருந்தார். அந்த போட்டியில் ஷபாஷ் அஹமதுவின் எக்கானமி ரேட் 9, ஹசரங்காவின் எக்கானமி ரேட் 10.3, மேக்ஸ்வெல்லின் எக்கானமி ரேட் 5.5 இதிலிருந்தே ஓரளவுக்கு விஷயங்களை புரிந்துக்கொள்ள முடியும்.

டெல்லி அணியும் ஒரு ஆஃப் ஸ்பின்னரை அணியில் எடுத்திருந்தால் இவ்வளவு சேதாரம் ஏற்படாமல் தப்பித்திருக்க முடியும். ஆனால், அந்த அணியில் திடமான ஒரு ஆஃப் ஸ்பின்னர் கிடையாது. அதேநேரத்தில், பேட்டிங் ஆல்ரவுண்டரான லலித் யாதவ் ஆஃப் ஸ்பின் வீசக்கூடியவர்தான்.

image

இந்த சீசனில் குல்தீப்பும் அக்சரும் இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்த திணறியிருக்கிறார்கள் என குறிப்பிட்டோம் அல்லவா? அவர்கள் அப்படி திணறும்போது டெல்லி அணி லலித் யாதவை வைத்தே சமாளித்திருக்கிறது. லலித் யாதவ் இந்த சீசனில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த நான்கு விக்கெட்டுகளில் மூன்று விக்கெட்டுகள் இடதுகை பேட்ஸ்மேன்களுடையது. அதுவும் டம்மியான பேட்ஸ்மேன்கள் கிடையாது. எவின் லீவிஸ், நிதிஷ் ராணா, தவாண் என எல்லாமே டாப் க்ளாஸ் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள். இப்படி ஒரு ஆஃப் ஸ்பின்னரை நேற்று வீச வைத்திருந்தால் கான்வே இந்தளவு அடித்து வெளுத்திருக்கமாட்டார்.

ஆனால், சன்ரைசர்ஸூக்கு எதிரான கடந்த போட்டியில் டெல்லியின் ப்ளேயிங் லெவனில் இருந்த லலித் யாதவ் நேற்று சென்னைக்கு எதிராக பென்ச்சில் வைக்கப்பட்டிருந்தார். அவருக்கு பதிலாகத்தான் அக்சர் படேல் அழைத்து வரப்பட்டிருந்தார். இந்த முடிவு டெல்லியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாகிவிட்டது.

சென்னையின் ஸ்பின்னர்கள் ரொம்பவே சிறப்பாக வீசி வருகின்றனர். பெங்களூருவிற்கு எதிரான கடந்த போட்டியில் மொயீன் அலியும் மஹீஸ் தீக்சனாவும்தான் நல்ல விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூருவை கட்டுப்படுத்தியிருந்தனர். அவர்களை ஆட்டத்திற்கு ஆட்டம் எந்த இடத்தில் சரியாக வீச வைக்க வேண்டுமோ அங்கே வீச வைத்து துல்லியமான ஃபீல்ட் செட் அப்களையும் வைத்து ‘கேப்டன்’ தோனியும் ஸ்பின்னர்களின் முழுத்திறனையும் வெளிக்கொண்டு வருவதில் கவனமாக செயல்படுகிறார்.

இது ஒரு ‘Perfect ஆன கேம். Perfect ஆன வெற்றி’ என தோனி Post Match Presentation இல் பேசியிருந்தார். இந்த போட்டியை சென்னைக்கு அத்தனை சௌகரியமாக மாற்றியதும் டெல்லிக்கு தலைவலியாக மாற்றியதும் ஸ்பின்னர்களே!

-உ.ஸ்ரீராம்

இதையும் படிக்கலாம்: மாஸ் வெற்றியை பதிவுசெய்த சிஎஸ்கே… புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.