ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக 6000 ரன்களை கடந்துள்ளார் மகேந்திர சிங் தோனி.

தோனி பேட்டிங் செய்ய ஆடுகளத்திற்கு நடந்து வரும் போது மைதானமே ஆரவாரத்தால் அதிர்ந்து போகிறது. போன போட்டியில் அவர் சொதப்பினாலும், டக் அவுட் ஆனாலும் ஒவ்வொரு போட்டியிலும் தோனியை அவரது ரசிகர்கள் ஒரே மாதிரி கரகோஷத்துடன் வரவேற்கிறார். அப்படித்தான் டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும்.

image

தோனி களமிறங்கியதோ 18வது ஓவரில் தான். அவர் சந்தித்தோ மொத்தம் 8 பந்துகள் தான். அதில் தன் பங்கிற்கு இரண்டு சிக்ஸர்கள் விளாசி தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டார். தனக்கு பிடித்த வீரரிடம் இருந்து இந்த இரண்டு சிக்ஸரை விட வேறு என்ன வேண்டும் அந்த ரசிகர்களுக்கு.

image

ஆனால், ரசிகர்கள் கொண்டாட மற்றொரு விஷயத்தையும் செய்துகாட்டினார் தோனி. ரன்னிங்கில் இன்னும் தான் கெத்துதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கடைசி ஓவரில் கடைசி இரண்டு பந்துகளிலும் அவர் தலா இரண்டு ரன்களை எடுத்தார். அந்த இரண்டு பந்துகளிலும் தலா ஒரு ரன் மட்டுமே எடுக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், ஒரு ரன்னை இரண்டாகவும், இரண்டு ரன்னை மூன்றாக மாற்றும் ஓட்ட வேகத்தை கொண்டவர் தோனி.

image

விராட் கோலியை பல முறை அவருக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் திணறி இருக்கிறார். அப்படித்தான் இன்று பிராவோ சிக்கிக் கொண்டார். அதுவும் இரண்டு முறை பாய்ந்து தான் கோட்டை தொட்டார். அவர் தோனியை பார்த்த ரியாக்‌ஷனே ‘என்ன ஏன்ப்பா இப்படி ஓட வைக்கிற’ என தொனியில் இருந்தது.

image

ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக மகேந்திர சிங் தோனி 6000 ரன்களை கடந்துள்ளார். அதேபோல், டெத் ஓவர்களில் முதல் வீரராக தோனி 2500 ரன்களை கடந்துள்ளார். தோனிக்கு அடுத்தபடியாக பொல்லார்டு 1705, ஏபி ட்வில்லியர்ஸ் 1421, தினேஷ் கார்த்திக் 1244, ஜடேஜா 1155, ரோகித் சர்மா 1145 ரன்கள் எடுத்துள்ளனர். 

போட்டி நிலவரம்:

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே, கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சில பந்துகளை தடுப்பாட்டம் விளையாடிய பின்னர் கான்வே அதிரடியில் இறங்கி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார். ஆனால், கெய்க்வாட் நிதான ஆட்டத்தையே தொடர்ந்தார். இருப்பினும் இந்த ஜோடி நல்ல தொடக்கத்தை கொடுத்தது.

image

35 பந்துகளில் 50 ரன்களை எட்டிய இந்த ஜோடி, 10 ஓவர்களில் 100 ரன்களை குவித்தது. இந்த வேகத்தில் சென்றால் சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. சரியான நேரத்தில் 41 (33) ரன்களில் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே அதிரடி காட்டினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கான்வே 49 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்து அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த உடன் சென்னை அணியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்து.

image

துபே 19 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த அம்பத்தி ராயுடு 5 ரன்னில் நடையைக் கட்டினார். தோனி ஒரு புறம் சிக்ஸர் பறக்கவிட மொயின் அலி 9 ரன்னிலும், உத்தப்பா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. தோனி 8 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 21 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெல்லி அணியில் அகமது சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட் வீழ்த்தினார். நோர்ஜ் 3 விக்கெட் வீழ்த்திய போதும் 42 ரன்கள் விட்டுக் கொடுத்தார். நல்ல துவக்கம் இல்லை என்ற குறையை கான்வே – ருதுராஜ் ஜோடி கடந்த சில போட்டிகளில் தீர்த்து வருகிறது. இதனையடுத்து, 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடி வருகிறது.

image

டெல்லி அணி 15.2 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ரன்களை குவித்த போதும் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டமிழந்தனர். வார்னர் 19(12), மார்ஷ் 25(20), ரிஷப் பண்ட் 21(11) ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். சற்று நேரம் தாக்குப்படித்த ஷர்துல் தாக்கூர் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் டெல்லி அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியில் அசத்தலாக பந்துவீசிய மொயின் அலி 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் சவுத்திரி, சிமர்ஜீத் சிங், பிராவோ தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். சென்னை அணிக்கு இது நான்காவது வெற்றி. டெல்லி அணி இது 6வது தோல்வி.

கடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகவே இருந்திருக்கும். இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றாலும் வாய்ப்பு குறைவுதான். இருந்தால் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே மூன்று போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி வாகை சூட வேண்டும். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.