தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் பேரவையின் சார்பில், ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம், ஊதிய உயர்வு உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது. இதில், வி.சி.க தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவனும் கலந்துகொண்டார். அதன்பிறகு திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கு அரசு தடைவிதித்தது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், “ஆதீனத்தில் பணியாற்றுபவர்கள் விரும்பினால் அதை செய்யட்டும், அதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் மரபு, நடைமுறை என்கிற பெயரில் உழைக்கிற மக்களின் தோள்களில் இதை சுமத்துவது ஏற்புடையது அல்ல” என்று கூறினார்.

இளையராஜா-கங்கை அமரன்

அதைத்தொடர்ந்து, மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட விவகாரத்தில், திருமாவளவன் மற்றும் முதல்வரைக் குறித்து கங்கை அமரன் விமர்சித்தது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அவர் எங்களை விமர்சிக்கவில்லை கேள்வி எழுப்பியிருக்கிறார். திருமாவளவனை ஒப்பிடலாமா, முதல்வரை ஒப்பிடலாமா என்றெல்லாம் கேள்வியெழுப்பியிருக்கிறார். அவருக்கு இதை யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள், சங்கிகள் அல்லது சங்கபரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள். அதாவது நாம் சொல்வது கொள்கை அடிப்படையில் ஒருமித்த கருத்துள்ளவர்களை ஒப்பிடுவது தவறு இல்லை. அம்பேத்கர் யாருடனும் ஒப்பிடக் கூடாதவர் என்று நாம் சொல்லவில்லை. யாரோடும் கூப்பிடலாம், ஒப்பிடுவதில் தவறில்லை.

மோடி

ஆனால் மோடி அவர்களின் அரசியல் என்பது, அம்பேத்கரின் அரசியலுக்கு நேர் எதிரானது. அவர்(மோடி) சங்கபரிவாரங்களின் கும்பலில் உள்ள ஒரு தலைவர். அவர் பிரதமராக இருந்தாலும்கூட அவருடைய கொள்கை, நிலைப்பாடு, செயல்பாடு எல்லாம் சமத்துவத்திற்கு எதிரானது, சமூக நீதிக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது, விளிம்புநிலை மக்களுக்கு எதிரானது, சாதியை காப்பாற்றக் கூடியது, வர்ணாசிரமத்தை காப்பாற்றக் கூடியது, மனுதர்மத்தைக் காப்பாற்றக் கூடியது. இது இசைஞானிக்குத் தெரியாது அவர் உடன் பிறப்புக்கும் தெரியாது. யாரோ அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நான் பரிதாபப்படுகிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.