திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல்காந்தியின் தனிப்பட்ட வீடியோவை பாரதிய ஜனதா கட்சி சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சனம் செய்தது. அதற்கு நாகரிகம் இல்லாமல் பாஜகவினர் நடந்து கொள்கின்றனர் என காங்கிரஸ் கட்சி எதிர்வினை ஆற்றி இருப்பதும், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் அரசியல் தளத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. 

ராகுல்காந்தி எங்கே இருக்கிறார்? எங்கே நடந்த பார்ட்டியில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்? என ராகுல்காந்தியுடைய தனிப்பட்ட வீடியோவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜகவினர், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யக்கூடிய ராஜஸ்தானில் மதக்கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில் அதை கவனிக்காமல் ராகுல் காந்தி பார்ட்டி கொண்டிருப்பதாக விமர்சனம் செய்தனர்.

ராகுல் காந்தி ஒரு நாள் மட்டுமல்ல; வருடத்தின் எல்லா நாளிலும் பார்ட்டி கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கு சொந்தக் கட்சி பணியைவிட பார்ட்டி கொண்டாடுவதுதான் முக்கியம் என பாஜகவின் மூத்த தலைவரான வாசுதேவன விமர்சனம் செய்திருந்தார். மற்றொரு மூத்த தலைவரான ராஜ்யவர்தன் ரத்தோர் கூறும்போது, பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் பகுதிநேர அரசியல்வாதிகள் என்று விமர்சனம் செய்தார்.

image

பாரதிய ஜனதா கட்சியின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, நேபாளில் உள்ள தனது பத்திரிகையாளர் நண்பர் ஒருவருடைய திருமணத்திற்கு சென்றதாகவும், அங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொண்ட வீடியோதான் அது என்றும் கூறியுள்ளது.

மேலும் இந்தியாவின் நட்பு நாடு ஒன்றில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்பது எந்த இடத்திலும் தவறு  இல்லை என்றும், குடும்பம், நண்பர்கள் ஆகியோரை கொண்டிருப்பது, அவர்களுடைய திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என்பது இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதி எனவும் விளக்கமளித்திருக்கிறது. பாஜகவின் செயல்பாடுகளை பார்த்தால் நாளையே அவர்கள் நண்பர்களை கொண்டிருப்பதும் அவர்களது திருமணங்களில் கலந்துகொள்வதும் சட்டவிரோதம் என அறிவித்து விடுவார்கள் போல என கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

image

ராகுல்காந்தி எங்கு போகிறார் யாருடைய பார்ட்டியில் கலந்து கொள்கிறார் என்பதையெல்லாம் கவனிப்பதுதான் இந்த உலகில் யாருக்காவது வேலையா? தேநீர் கோப்பையில் பீர் அருந்தும் இரட்டை வாழ்கையை நடத்துகிறார்கள் பாஜகவினர். அதனால்தான் ராகுல் காந்தியின் சொந்த நிகழ்ச்சியைக்கூட தவறான கண்ணோட்டதில் பார்க்கின்றனர் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கடுமையாக தாக்கியுள்ளார்.

image

இதற்கிடையில் திருமண பெண்ணின் தந்தை கூறுகையில், நான் மியான்மர் நாட்டின் நேபாள தூதரகத்தில் பணியாற்றினேன். என் மகள் தனியார் செய்தி நிறுவனத்தில் பணி புரிந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் அதில் கலந்துகொள்ள ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்தோம், அவரும் பங்கேற்றார். ராகுல்காந்தியை தவிர இந்தியாவில் இருந்து மேலும் பல முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர். எனினும் இந்த வீடியோ விவகாரம் அரசியல் தளத்தில் கடும் வார்த்தைப்போராக கட்சிகளுக்கிடையே மாறியுள்ளது என்றார்.

– நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.