இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொளி வாயிலாக சந்தித்தார். அப்போது பேசிய அவர், `கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வாட் வரியை குறைத்ததுபோல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை. குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா உளிட்ட மாநிலங்களில் மத்திய அரசின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை. வாட் வரியை குறைக்காமல் மாநில மக்களை கூடுதல் சுமைக்கு ஆளாக்குகிறது. இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது’ என்று பேசினார்.

தொடர்புடைய செய்தி:  `பெட்ரோல் டீசல் உயர்வுக்கு தமிழ்நாடு போன்ற மாநிலங்களே காரணம்’- பிரதமர் மோடி விளக்கம்

பிரதமர் குற்றஞ்சாட்டிய மாநில தலைவர்கள், பிரதமருக்கு பதிலளிக்கும் விதமாக இன்று காலை முதலே கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் சிறு தொகுப்பு இங்கே:

அந்தவகையில் பிரதமரின் பேச்சு `முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்’ உள்ளது என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமர்சித்திருந்தார். மேலும் மு.க.ஸ்டாலின், `பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் யார் நாடகமாடுகிறார்கள் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்’ என்றும் பதிலடி கொடுத்திருந்தார். போலவே தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் பேரவையில் இதுகுறித்து விளக்கமளித்தார்.

image

அப்போது அவர், “பெட்ரோல், டீசலுக்கான கூடுதல் வரிகளை அடிப்படை கலால் வரியுடன் சேர்ப்பதன் மூலமே மாநில அரசுகளுக்கு நியாயமான நிதி பங்கீடு கிடைக்கும். அதுவரை அவற்றின் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க முடியாது. அந்தவகையில் பெட்ரோல், டீசலுக்கான அடிப்படை கலால் வரியை குறைத்த போதும் கூடுதல் வரிகளை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாயின் பங்கு குறைந்த நிலையில் மத்திய அரசின் வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ளது” எனக்கூறி அதை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார். இப்படியாக அடிப்படை கலால் வரி வருவாய் மட்டுமே மாநில அரசுகளுடன் பகிரப்படுவதாகவும் கூடுதல் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை மத்திய அரசே வைத்துக்கொள்வதாகவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கினார். மேலும் பேசுகையில், “அடிப்படை வரிகளுடன் கூடுதல் வரிகளை இணைத்து 2014ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலை வந்தால் மட்டுமே தமிழகத்தில் வரிக்குறைப்பு சாத்தியம்” என்றும் தெரிவித்த்தார்.

தொடர்புடைய செய்தி: “பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக” – பிடிஆர் தியாகராஜன்

இதுவொருபுறமிருக்க, மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே, “மத்திய அரசு விதிக்கும் வரியால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. மகாராஷ்டிராவில் 13.5 விழுக்காடாக இருந்த வாட் வரி, இயற்கை எரிவாயுவை ஊக்குவிக்கும் வகையில் 3 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் – டீசல் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரிவிகிதங்களிலும் அவ்வளவு வித்யாசங்கள் உள்ளன” எனக்கூறி வரிவிகிதங்களை முழுவதுமாக பட்டியலிட்டு ஒப்பிட்டுள்ளார்.

Uddhav-Thackeray-responds-to-Modi-in-fuel-price-increase

இவர்களைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பிரதமருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் தெரிவித்த கருத்தில், “பிரதமரின் மாநில முதல்வர்களுடனான சந்திப்பு, கொரோனா குறித்து பேசுவதற்காக அல்ல. ஏனெனில் சந்திப்பில் களப்பிரச்னைகள் பற்றி பேசுவதைவிடுத்து, மாநிலங்கள் மேல் பழியை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி, ஒருதலைபட்சமாக இருந்துக்கொண்டு தவறான கருத்துகளை பரப்புகிறார். அவர் சொல்லும் ஒவ்வொரு தரவும், தவறாகவே இருக்கிறது. இவற்றைவிடுத்து எல்.பி.ஜி மற்றும் எரிபொருள் விலைகளை உடனடியாக குறைக்க வேண்டும்” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசுகையில், “பிரதமர் இப்படி வரியை மாநிலங்கள்தான் குறைக்க வேண்டும் என்பது போல பேசியிருப்பதற்கு அவர் வெட்கப்படவேண்டும்” என்று கடுமையாக பேசியுள்ளார். அவர் பேசுகையில், “பிரதமரின் மாநில முதல்வர்களுடனான அந்த சந்திப்பு, ஒரு ட்ராமா கலந்துரையாடல். அந்த கலந்துரையாடலின் முடிவில், உருப்படியாக எதுவுமே பேசப்படவில்லை. உண்மையில், அந்த கலந்துரையாடல் நடந்தது எதற்காக? கொரோனாவுக்காகத்தானே… ஆனால் இவர்கள் எதைப்பற்றி பேசினார்கள்? மாநிலங்கள் வரியை குறைக்க வேண்டுமென்று பேசுகிறார்கள். உண்மையில் இதைப்பற்றி பேசுகையில், அவருக்கேவும் கொஞ்சம் கூச்சம் இருந்திருக்க வேண்டும்; வெட்கப்பட்ட வேண்டும். மோடிக்கே நேரடியாக கேட்கிறேன் நான்… மக்கள் மீது சுமையை போடாதீர்கள் என்கிறீர்களே… பின் ஏன் நீங்களே அதை செய்கிறீர்கள்? மாநிலங்களை குறைக்க சொல்வதை விட்டுவிட்டு, வரியை ஏன் மத்திய அரசேவும் குறைக்கக் கூடாது? மத்திய அரசு வரிகளை உயர்த்தியது மட்டுமின்றி, செஸ் வரியையும் வசூலித்து வருகிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால், மேம்படுத்தப்பட்ட வரிகள் குறித்து விளக்குங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

image

கேரளா தரப்பில் அதன் நிதியமைச்சர் பாலகோபால் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் பேசுகையில், “பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம், மத்திய அரசு கொண்டு வந்த செஸ் மற்றும் கூடுதல் வரி விதிப்புகள்தான். மற்றபடி கேரள அரசு கடந்த 6 ஆண்டுகளில் எரிபொருள் சார்ந்த எந்தவொரு பொருளுக்கும் வரியை உயர்த்தவே இல்லை” எனத் தெரிவித்துள்ளார். 

இவை ஒருபுறமிருக்க, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர், “`லாபம் எங்களுடையது; நஷ்டம் உங்களுடையது’- பாஜக-வின் கிளாசிக் கோட்பாடே இதுதானே! அதையே இப்போதும் செய்துள்ளனர்” என்று ட்வீட் செய்துள்ளார். மாநில முதல்வர்கள் எதிர்ப்பு – தேசிய கட்சிகள் எதிர்வினை போன்றவற்றை தொடர்ந்து இப்பிரச்னை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் – மத்திய அரசுடன் முரண்பட்டு நிற்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.