அமைச்சரவையில் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும் ஒரு மாநில ஆளுநர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி கட்டமைப்பின் மீது மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. மேலும் அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் பேரறிவாளன் சிக்குவதை தவிர்க்க அவரை ஏன் நாங்கள் விடுவிக்கக்கூடாது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. 

பேரறிவாளன் விவகாரத்தில் இன்னும் ஆளூநர் முடிவெடுக்காமல் இருக்கிறார்; விசாரணை அமைப்புகள் பல ஆண்டுகள் ஆகியும் அறிக்கையை சமர்பிக்காமல் இருக்கிறார்கள் என பேரறிவாளன் தரப்பு வாதம் முன்வைத்தது.

அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், பிறகு ஏன் பேரறிவாளனை விடுவிக்கக்கூடாது? அவரை யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில் அவர் ஏன் சிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர். மேலும் ஆளுநர் அல்லது குடியரசு தலைவர் அதிகாரம் குறித்த விஷயங்களுக்குள் போகாமல் நாங்கள் ஏன் பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிடக்கூடாது? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினவினர். மேலும் அவரை விடுவிப்பது மட்டும்தான் இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான ஒரே தீர்வு என நாங்கள் நினைக்கிறோம் நீதிபதிகள் கருத்து கூறினர்.

image

அதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், அமைச்சரவையின் முடிவின் மீது ஆளுநரோ, குடியரசு தலைவரோ தங்களது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை செலுத்தாமல் அது அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதா என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஒருவேளை அரசியல் சாசன விவகாரங்கள் சம்மந்தப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். பேரறிவாளன் விவகாரத்தில் மரண தண்டனை குறைப்பு செய்யப்பட்டுவிட்டது; அது குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. தற்போது சிறையில் இருந்து விடுவிப்பது என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என வாதிட்டார்.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் அரசியல் சாசனம் 72வது பிரிவின் கீழ், ஆளுநரின் முடிவுகளை குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்யவேண்டும். ஆளுநர் செயல்படலாமா இல்லையா என்பதையும் குடியரசு தலைவர் தான் முடிவு செய்யமுடியும் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆளுநரின் நடவடிக்கை என்பது அனுமதிக்கப்பட்டாதாக நாங்கள் நினைக்கவில்லை. ஆளுநர் ஒவ்வொரு விசயத்தையும் குடியரசு தலைவருக்கு அனுப்புவார் என்றால் அதற்கான காரணத்தை அவர் கூற வேண்டும். பேரறிவாளன் தண்டனை அனுபவித்துவிட்டார். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விடுதலையின் பலன்களை கொடுக்க அரசு நினைக்கிறது. இதில் ஆளுநர் தனிப்பட்ட அதிகாரத்தில் செயல்படுகிறாரா? அல்லது நிர்வாக ரீதியில் செயல்படுகிறாரா? என கேள்வி எழுப்பினர்.

image

மாநில அரசு ஒரு பரிந்துரையையோ, முடிவையோ ஒப்புதலுக்கு அனுப்புகிறது. அது பிடித்தால் ஆளுநரே ஒப்புதல் தருவார்; பிடிக்கவில்லை என்றால் குடியரசு தலைவருக்கு அனுப்பிவிடுவாரா? எந்த அடிப்படையில் ஆளுநர் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுத்தார்? ஆளுநர் அதிகாரம் குறித்து மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய போது, மாநில அரசின் அமைச்சரவை முடிவுகளை மத்திய அரசு ஆளுநரை கொண்டு எப்போதும் முடக்கிக்கொண்டிருந்தால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பே சீர்குலைந்துவிடும் என தமிழக அரசு வாதிட்டது.

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கக்கூடிய விவகாரத்திற்கு முன்பு முதலில் மாநில அரசின் அதிகாரம், மத்திய அரசின் அதிகாரம் அல்லது ஆளுநரின் அதிகாரம் என்பது குறித்து முதலில் விளக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்தபோது கோபமடைந்த நீதிபதிகள், பேரறிவாளன் விவகாரத்தில் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்கு இருக்கிறது என ஏற்கெனவே அரசியல் சாசன அமர்வு தெளிவுபடுத்தி விட்டது. எனவே இந்த விவகாரத்தில் தயவுசெய்து ஆளுநரை கொண்டு வராதீர்கள். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின்படி 7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை. அமைச்சரவையில் ஒவ்வொரு முடிவிற்கு எதிராகவும் ஒரு மாநில ஆளுநர் செல்வார் என்றால் அது கூட்டாட்சி கட்டமைப்பின் மீது மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

image

மேலும் பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் முடிவு ஒவ்வொரு முறையும் முரண்பட்டதாக இருக்கிறது. இதனால் பலமுறை வழக்கை தேவையே இல்லாமல் ஒத்திவைக்க வேண்டிய சூழல் உள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியை வெளிபடுத்தினர். அப்போது பேசிய பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் சபாநாயகரை போலவே ஆளுநரும் ஒரு விஷயத்தில் செயல்படுவதற்கு கால அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என வாதிட்டார்.

இதனையடுத்து உத்தரவுகளை பிறப்பித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 7 பேர் விடுதலை தொடர்பான அதிகாரம் அரசிடம் இருக்கிறது என்ற உச்சநீதிமன்ற அரசியல் சாசன தீர்ப்பிற்கு எதிராக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அதனை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுங்கள் எனவும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு இருக்கக்கூடிய அதிகாரம் மற்றும் அதன்மீது தனிப்பட்ட முறையில் அவருக்கு இருக்கும் அதிகாரம் குறித்தும் தெரிவிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

image

மேலும் பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர். பேரறிவாளன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு தமிழக அரசு தரப்புக்கும் அறிவுறுத்தல் கொடுத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.