சமூக வலைதளமான ட்விட்டரை, உலகின் நம்பர் ஒன் கோடிஸ்வரரான எலான் மஸ்க் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவது இறுதியாகி உள்ளது.

ட்விட்டர் நிர்வாகக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும், மொத்தமாக ரூ.3.30 லட்சம் கோடிக்கு எலான் மஸ்க்கிற்கு பங்குகள் விற்பனைக்கு போவதாகவும், ஒவ்வொரு பங்குக்கும் ரூ.4,154 கொடுக்க எலான் மஸ்க் முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து, `தான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை’ என்றும் `பயனர்கள் சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பதற்கு நம்பிக்கையான ஒரு சமூக வலைத்தளத்தை கட்டமைக்கும் நோக்கில் ட்விட்டரை வாங்க விரும்புவதாகவும்’ என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

image

முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை மறுத்த எலான் மஸ்க், தற்போது அவரேவும் அந்நிறுவனத்தை முழுமையாக வாங்க முன்வந்துள்ளார். `ட்விட்டர் இணையதளம் கருத்து சுதந்திரத்திற்கான தளமாக இல்லை’ என கூறிவந்த எலான் மஸ்க், அந்த நிறுவனத்தின் 9 சதவிகித பங்குகளை வாங்கியதுடன் அந்த நிறுவனத்தையே வாங்கப் போவதாகவும் அறிவித்திருப்பது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்று நேற்று காலையில் (இந்திய நேரப்படி) அவர் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது ரூ.3.30 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகக் குழுவினர் மற்றும் எலான் மஸ்க் தரப்பினர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். `ட்விட்டர் தன்னுடைய ஒப்பந்தத்துக்கு சம்மதம் தெரிவிக்காத பட்சத்தில் பங்குதாரர் நிலையை மாற்ற யோசிக்க வேண்டியிருக்கும்’ என எலான் மஸ்க் கூறினார். அதைத்தொடர்ந்தே நேற்று இரவு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அவர் ட்விட்டர் தளத்தை உண்மையிலேயே வாங்குவாரா, அது சாத்தியமா என பலவிதமாக விவாதங்கள் எழுந்த நிலையில், பங்குகளை வாங்குவதற்கான நிதி ஆதாரத்தை நேற்று இரவு அவர் வெளியிட்டார்.

image

மார்கன் ஸ்டான்லி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் கடனாக சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயை தர முன்வந்துள்ளதாகவும், எஞ்சிய தொகையை தம்முடைய பங்கு முதலீடாக தரவிருப்பதாகவும் அறிவித்துள்ளார் மஸ்க். முதலில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை தடுக்க முயற்சி செய்த அந்த நிறுவனத்தின் நிர்வாகக்குழு அந்த முயற்சிகள் பலிக்காததால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பின்னர் எலான் மஸ்க் முன்வைத்த பேரத்தின்படியே ஒவ்வொரு ட்விட்டர் பங்குக்கும் தலா 4,154 ரூபாய் என மொத்தம் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் என்ற விலைக்கு அவர் வாங்கிக்கொள்வது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவர் நிறுவனத்தை வாங்கியதும் நிறுவனங்கள் பங்கு சந்தையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டு அவரது தனிநபர் நிறுவனமாக மாறிவிடும். இதை ட்விட்டர் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இதன் பின்னர் டிவிட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், `ஜனநாயகத்தின் அடித்தளமே கருத்துச் சுதந்திரம்தான். மனிதகுலத்தின் எதிர்காலம் விவாதிக்கப்படுவது ட்விட்டர் என்ற டிஜிட்டல் நகர சதுக்கத்தில்தான். ஆகவே வரும் நாள்களில் ட்விட்டரில் மேலும் பல அம்சங்களை அறிமுகப்படுத்தி மேம்படுத்தவிருக்கிறோம். தேவையற்ற செய்திகளை பரப்புவதை தடுப்பதற்கும் அனைத்து மனிதர்களையும் அனுமதிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என தெரிவித்தார். தம்மை பற்றி மிக மோசமாக விமர்சிப்பவர்களும் ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து இயங்கவேண்டும் என விரும்புவதாகவும் அதுவே கருத்துச் சுதந்திரம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

image

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தாலும், அவரது நோக்கம் குறித்து கேள்வி எழுப்புவோரும் இல்லாதில்லை. அவர் தனக்கு எதிராக கருத்து கூறியவர்களை தனது பக்கத்தில் பிளாக் செய்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எலான் மஸ்க்கின் கீழ் ட்விட்டர் எந்தவிதமான மாறுதல்களை எதிர்கொள்ளப்போகிறது என்பதை உலகமே எதிர்நோக்கியிருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.