நடப்பு சீசனில் ஒரு வழியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில் பெங்களூருவிற்கு எதிரான 5 ஆவது போட்டியில் சென்னை அணி வெற்றிக் கணக்கை தொடங்கியிருக்கிறது. தனக்கு பிரச்சனையாக அமைந்திருந்த விஷயங்களுக்கு சென்னை எப்படி தீர்வை எட்டியது? சென்னை அணி தோல்வியிலிருந்து எப்படி மீண்டது?

பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளெஸ்சிஸ்தான் டாஸை வென்றிருந்தார். வழக்கமான சம்பிரதாயத்தை பின்பற்றி சேஸிங்கை தேர்வு செய்திருந்தார். சென்னை அணி முதலில் பேட்டிங் செய்திருந்தது.

பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் நல்ல தொடக்கம் கிடைக்காததும் பவர் ப்ளேயில் செய்யும் சுமாரான பெர்ஃபார்மென்ஸும் சென்னை அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இந்த போட்டியிலும் அந்த சொதப்பல்கள் தொடரவே செய்திருக்கிறது. சென்னையின் பேட்டிங்கை இரண்டு பாதிகளாக பிரித்து பார்க்கலாம். முதல் 10 ஓவர்கள், அதாவது அந்த பவர் ப்ளேயை உள்ளடக்கிய 10 ஓவர்களில் இந்த போட்டியிலும் சென்னை சுமாராகவே ஆடியிருந்தது.

குறிப்பாக, அந்த முதல் 6 ஓவர்களில் வெறும் 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. முக்கியமான பேட்ஸ்மேனான ருத்துராஜ் கெய்க்வாட் இந்த போட்டியிலும் தோல்வியடைந்திருந்தார். முதல் 3 போட்டிகளுக்கு பிறகு ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் நான்காவது போட்டியிலும் சொதப்பினார். ஐந்தாவது போட்டியிலும் சொதப்பினார். புல், கட் என அடித்து பவுண்டரிகளுடன் ருத்துராஜ் தொடங்கிய போதும் அதை தொடர்ந்து செய்ய முடியவில்லை. 17 ரன்களில் ஹேசக்வுட்டின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகியிருந்தார். ஹேசல்வுட்டும் சிராஜும் அந்த 6 ஓவர்களை நன்றாகவே வீசி முடித்தனர்.

image

பவர்ப்ளே முடிந்த கையோடே மொயீன் அலி ஒரு தவறான கணிப்பால் ரன் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். சென்னை 36-2 என்ற நிலையில் ஊசலாட தொடங்கியது. இந்த சமயத்தில்தான் உத்தப்பாவும் நம்பர் 4 இல் இறங்கிய சிவம் துபேவும் கூட்டணி அமைத்தனர். முதல் சில ஓவர்களை இவர்களுமே மெதுவாகத்தான் ஆடினர். 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 60 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஓவருக்கு வெறும் 6 ரன்கள் என்ற விகிதத்திலேயே ஸ்கோர் கூடியிருந்தது.

இந்த சமயத்தில் ஹர்ஷா போக்ளேவிடமிருந்து ஒரு ட்வீட் வந்தது. ‘இந்த போட்டியிலும் சரி இந்தத் தொடரிலும் சரி சென்னை அணி மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்தாக வேண்டும்..ஓவருக்கு 9 ரன்கள் என அடித்தால் சென்னை 155 ரன்களை எட்ட முடியும். பனியின் தாக்கம் இல்லாதபட்சத்தில் அது ஒரு கௌரவமான ஸ்கோராக இருக்கும்’ என ஹர்ஷா கூறியிருந்தார். அதாவது, ஓவருக்கு 6 ரன்கள் என்ற விகிதத்தில் ஸ்கோர் செய்து கொண்டிருக்கும் சென்னை அணி கூடுதலாக 3 ரன்களை சேர்த்து ஸ்கோர் செய்வதே மிகப்பெரிய கம்பேக்தான் என்ற வகையில் ஹர்ஷா கணித்திருந்தார். இதில் தவறொன்றும் இல்லை. சென்னை அணியின் முதல் பாதி ஆட்டம் அந்த வகையில்தான் இருந்தது. ஆனால், அந்த ஆட்டம் அப்படியே தொடரவில்லை. இரண்டாம் பாதியில் ஒரு ட்விஸ்ட் நடந்தது. சென்னை அணி கம்பேக் கொடுத்தது. ஆனால், ஹர்ஷாவோ ரசிகர்களோ கணித்தப்படி ஓவருக்கு 3 ரன்களை மட்டுமே கூடுதலாக அடித்துக் கொடுத்து கௌரவமான ஸ்கோரை எட்ட வைத்த கம்பேக் அல்ல; அத்தனை பேரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி போட்டியையே வெல்ல வைத்த கம்பேக் அது.

image

கடைசி 10 ஓவர்களில் மட்டும் சென்னை அணி 156 ரன்களை அடித்து வெளுக்கிறது. ரன்ரேட் 15 க்கும் மேல் இருந்தது. ஓவருக்கு கூடுதலாக 3 ரன்கள் அடிப்பதே மிகப்பெரிய கம்பேக் என பார்க்கப்பட்ட சூழலிலிருந்து அதை மும்மடங்கு அதிகமாக ஓவருக்கு 9 ரன்களை கூடுதலாக அடித்து சென்னை அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்தது. சிவம் துபேவும் உத்தப்பாவும் ஆடிய ஆட்டமே இந்த 10 ஓவர்களில் நிகழ்ந்த அசாத்தியமான ரன்பொழிவிற்கு காரணமாக அமைந்தது.

வனிந்து ஹசரங்கா வீசிய 11 வது ஓவரில் ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் சிவம் துபே அடித்திருந்தார். அங்கிருந்து தொடங்கிய அதிரடி 20 வது ஓவர் வரை நிற்கவே இல்லை. ஈவு இரக்கமின்றி அத்தனை பௌலர்களையும் அடித்து வெளுத்தனர். குறிப்பாக, ஸ்பின்னர்கள் எல்லாம் மரண அடி வாங்கியிருந்தனர். பார்ட் டைமரான மேக்ஸ்வெல்லுக்கு கூடுதலாக ஒரு ஓவரை கொடுத்து டூப்ளெஸ்சிஸ் தவறு செய்ய அந்த சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த ஓவரில் மட்டும் லெக் சைடில் 3 சிக்சர்களை உத்தப்பா பறக்கவிட்டிருந்தார். சிராஜ், ஆகாஷ் தீப், ஹேசல்வுட் போன்ற வேகங்களும் இவர்களின் அதிரடிக்கு தப்பவில்லை. ஆகாஷ் தீப்பெல்லாம் சிவம் துபேவிட்ச்ம் சிக்கி 18 வது ஓவரை நிறைவு செய்வதற்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியிருந்தார். 13, 13, 19, 13, 15, 12, 18, 24, 14, 15 கடைசி 10 ஓவர்களில் எந்த ஓவரிலும் சென்னை அணி 10 ரன்களுக்கு கீழ் ஸ்கோர் செய்யவில்லை. சிவம் துபேவும் உத்தப்பாவும் அசாத்தியமான ஆட்டத்தை ஆடி சதத்தை நெருங்கியிருந்தனர். ஆனால், இருவராலுமே சதமடிக்க முடியவில்லை என்பது சோகம்.

image

சென்னை அணிக்கு இந்த சமயத்தில் இப்படியான உத்வேகமிக்க ஆட்டம்தான் அதிகம் தேவைப்பட்டது. அது சரியான நேரத்தில் உத்தப்பா மற்றும் சிவம் துபே மூலம் வந்திருந்தது. எத்தனை நாளைக்குதான் ருத்துராஜ் அடிக்கவில்லை என்பதையே காரணமாஜ கூற முடியும்? யாராவது களத்தில் இறங்கி  ருத்துராஜின் இழப்பை போக்கும் வகையில் சாகசங்களை நிகழ்த்க வேண்டாமா? எனும் கேள்வி சென்னையை நோக்கி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அதற்கான விடையாக உத்தப்பாவும் சிவம் துபேவும் அமைந்திருந்தனர். இருவரும் இணைந்து  165 ரன்களை அடித்திருந்தனர். இது கடந்த போட்டியில் சென்னை ஒரு அணியாக அடித்த மொத்த ரன்களை விட அதிகம்.

பேட்டிங் பட்டாசாய் பட்டையை கிளப்ப பௌலிங்கிலும் சென்னை அணி சிறப்பான கம்பேக்கை கொடுத்திருந்தது. கடந்த 4 போட்டிகளில் சேர்த்து பவர்ப்ளேயில் சென்னை எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 2 மட்டுமே. அதிலும் 1 விக்கெட் ரன் அவுட் மூலம் வந்தது. ஆக ஒரே ஒரு விக்கெட் மட்டுமே பௌலர் மூலம் வந்திருந்தது. சென்னையின் தொடர் தோல்விகளுக்கு இதுவும் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. ஆனால், இந்த போட்டியில் அந்த பிரச்சனையையும் சென்னை போக்கியிருந்தது. பெங்களூருவிற்கு எதிராக பவர்ப்ளேயில் சென்னை எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 3. டூப்ளெஸ்சிஸ், அனுஜ் ராவத், கோலி என மூன்று முக்கியமான பேட்ஸ்மேன்களை வீழ்த்தியிருந்தனர். ஆர்சிபியின் டாப் ஆர்டரே மொத்தமாக காலியாகியிருந்தது. பவர்ப்ளே ஸ்பெசலிஸ்ட்டாக அணிக்குள் கொண்டுவரப்பட்டிருந்த மஹீஸ் தீக்சனா தனது லாவகமான மிஸ்டரி டெலிவரிக்களின் மூலம் டூப்ளெஸ்சிஸ் மற்றும் அனுஜ் ராவத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகேஷ் சௌத்ரி கோலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இங்கிருந்தே ஆட்டம் சென்னை பக்கமாக திரும்ப தொடங்கிவிட்டது.

மேக்ஸ்வெல், ஷபாஷ் அஹமது, பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் என கடைசி வரை அச்சமூட்டும் வகையில் பேட்ஸ்மேன்கள் ஆடியிருந்தாலும், சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது. இதனால் உத்தப்பாவுக்கும் சிவம் துபேவுக்கும் இடையே அமைந்ததை போன்ற பெரிய பார்ட்னர்ஷிப்கள் பெங்களூரு பேட்ஸ்மேன்களுக்கு அமையவில்லை. ‘கேப்டன்’ ஜடேஜா மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை 7 வது முறையாக சொல்லியெடுத்து கெத்து காட்டி ஃபார்முக்கு திரும்பினார். இறுதியாக சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சில குறைகள் சென்னை அணியிடம் இன்னமுமே இருந்தாலும் இந்த வெற்றி இந்த சமயத்தில் அணிக்கு கட்டாயம் தேவைப்பட்ட ஒன்று. இந்த வெற்றி கொடுக்கும் உத்வேகத்தில் அடுத்த போட்டியில் இருக்கும்.சில குறைகளையும் சென்னை தீர்க்கும் என நம்புவோமாக!

-உ.ஸ்ரீராம்

இதையும் படிக்கலாம்: ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு, நாட்டிற்காக போராட வாருங்கள்‘- அழைக்கும் இலங்கை முன்னாள் வீரர்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.