சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 5 வது லீக் போட்டியில் நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. முதல் 4 போட்டிகளையும் தோற்றிருக்கும் நிலையில் இந்த போட்டியிலாவது சென்னை அணி வெற்றிக்கணக்கை தொடங்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில், சென்னை அணியின் கேப்டனான ஜடேஜாவிடமும் சிஎஸ்கே அணியிடமும் இவை சார்ந்து கேட்பதற்கு சில கேள்விகள் இருக்கிறது.  அவை இங்கே…

1. சென்னையின் ப்ளேயிங் லெவன் என்ன?

2021 சீசனில் மிகக்குறைவான வீரர்களை பயன்படுத்தியிருந்த அணியாக சென்னையே இருந்தது. குறைவான வீரர்களை பயன்படுத்தி அவர்களிடம் தரமான பெர்ஃபார்மென்ஸ்களை வாங்கி சாம்பியன் ஆகியிருந்தது. நிலையான ப்ளேயிங் லெவன் என்பது சென்னை அணியின் வெற்றி ரகசியங்களுள் ஒன்று. ஆனால், இந்த சீசனில் சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடியிருக்கிறது. 4 போட்டிகளிலுமே வெவ்வேறு ப்ளேயிங் லெவனோடு களமிறங்கியிருக்கிறது. இது சென்னை அணியின் இயல்பான குணமே இல்லை. டூப்ளெஸ்சிஸுக்கு மாற்று என வாங்கப்பட்டிருந்த டெவான் கான்வே முதல் போட்டியோடு பென்ச்சில் வைக்கப்பட்டிருக்கிறார். கொல்கத்தாவிற்கு எதிராக ஆடிய அந்த போட்டிதான் ஐ.பி.எல் இல் அவர் ஆடிய அறிமுக போட்டி. அந்த ஒரு போட்டியோடு அவர் பென்ச்சில் வைக்கப்பட்டது ஏமாற்றமளிக்கும் விஷயம். அவருக்கு பதில் ஓப்பனராக ப்ரமோட் செய்யப்பட்டிருக்கும் உத்தப்பா சீராக ஆடுவதில்லை. இதனால் உத்தப்பாவை பென்ச்சில் வைத்துவிட்டோ அல்லது மீண்டும் நம்பர் 3 க்கு இறக்கும் திட்டம் எதுவும் இருக்கிறதா? அப்படியிருந்தால் அதை செய்வதற்கு இதுதான் சரியான நேரம்.

image

இன்னும் 2-3 போட்டிகள் கடந்துவிட்டால் அந்த சமயத்தில் இந்த தொடரே சென்னை அணியின் கையைவிட்டு சென்றிருக்கும். துஷார் தேஷ் பாண்டே இரண்டே போட்டியோடு பென்ச்சில் இருக்கிறார். நன்றாக ஆடியும் ப்ரெட்டோரியஸ் பென்ச்சுக்கு சென்றிருக்கிறார். இப்படி சென்னை அணி தனது வழக்கத்தை மீறி சில அதிரடி முடிவுகளை எடுத்தபோதும் சென்னை அணிக்கு தேவையான அந்த வெற்றி மட்டும் கிடைக்கவே இல்லையே?

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் ப்ளேயிங் லெவனுக்குள் கொண்டு வரப்பட்ட மஹீஸ் தீக்சனாவாது நாளைய போட்டியில் தொடர்வாரா அல்லது மூன்று ஸ்பின்னர்கள் எதற்கு என அவரும் ஓரங்கட்டப்படுவாரா? துஷார் தேஷ் பாண்டே, முகேஷ் சௌத்ரி வரிசையில் U19 கிரிக்கெட்டர் ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கரை ப்ளேயிங் லெவனில் எடுக்கும் திட்டம் இருக்கக்கூடும். அப்படி பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கினால் அவருக்காவது தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்குமா? மொத்தத்தில் ஒரு நிலையான ப்ளேயிங் 5 வது போட்டியிலிருந்தாவது சென்னை கடைபிடிக்குமா?

image

2. அந்த 6 ஓவர்களுக்கு யார் பொறுப்பு?

சென்னை அணி இதுவரையிலான நான்கு போட்டிகளில் பவர் ப்ளேயில் மட்டும் 9 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. ஒரு நல்ல பாசிட்டிவ்வான தொடக்கம் கிடைப்பதே இல்லை. மூன்று போட்டிகளை தாண்டிய பிறகு அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் நான்காவது போட்டியிலும் சொதப்பியிருக்கிறார். பெங்களூருவிற்கு எதிரான போட்டியிலாவது ருத்துராஜ் ஃபார்முக்கு திரும்புவாரா? ருத்துராஜ் ஃபார்முக்கு திரும்புவதையும் சென்னை அணியின் பெர்ஃபார்மென்ஸையும் வெவ்வேறாக பார்க்க வேண்டியதில்லை. ருத்துராஜ் 30 ரன்களுக்கு மேல் அடித்த போட்டிகளில் சென்னை அணி 90 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. ஆக, ருத்துராஜ் காலம் கடப்பதற்கு முன்பாக பெர்ஃபார்ம் செய்தே ஆக வேண்டும். ருத்துராஜோடு ஓப்பனிங் இறங்கும் உத்தப்பாவும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும். உத்தப்பா சொதப்புகிற பட்சத்தில் டெவான் கான்வேயை உள்ளே கொண்டு வர சிஎஸ்கே தயாராக இருக்கிறதா என்பதும் கேள்வியாக இருக்கிறது. எப்படியோ பேட்டிங் பவர்ப்ளேயில் சென்னை அணிக்கு அவசர தேவையாக இருக்கும் பாசிட்டிவ்வான தொடக்கம் பெங்களூருக்கு எதிரான போட்டியிலாவது கிடைத்தே ஆக வேண்டும்.

image

3. தீபக் சஹாரின் இடத்தை நிரப்பப்போவது யார்?

பேட்டிங் பவர் ப்ளேயை விட பௌலிங் பவர்ப்ளே இன்னும் மோசமாக இருக்கிறது. கடந்த 4 போட்டிகளில் சென்னை அணி பவர் ப்ளேயில் 2 விக்கெட்டை மட்டுமே எடுத்திருக்கிறது. அதிலும் ஒன்று ரன் அவுட் வகையில் வந்தது. ஒரே ஒரு விக்கெட்டை மட்டும்தான் பௌலர் எடுத்திருந்தார். பவர் ப்ளேயில் கடந்த சீசன்களில் தீபக் சஹார் மிக முக்கிய வீரராக இருந்தார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல தொடக்கங்களை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த முறை அவர் இல்லாதது பெரிய பிரச்சனையாகியிருக்கிறது. பவர் ப்ளே சொதப்பல்களால்தான் ப்ளேயிங் லெவனும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் வெல்ல வேண்டுமெனில் அவர்களின் டாப் ஆர்டரை சீக்கிரமே வீழ்த்தியாக வேண்டும். ஏனெனில், டூப்ளெஸ்சிஸ், அனுஜ் ராவத், கோலி என டாப் ஆர்டர் மூவருமே நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இவர்களின் விக்கெட்டுகளை பவர்ப்ளேயில் வீழ்த்த தவறினால் போட்டி அங்கேயே முடிந்துவிடும். இது சென்னை அணிக்குமே தெரியும். ஆனால், பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்திக் கொடுக்கப்போகிற அந்த பௌலர் யார்? அதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

image

4. அசாத்தியங்களை எப்போது நிகழ்த்துவீர்கள்?

ருத்துராஜ் அடிக்கவில்லை. பவர் ப்ளேயில் விக்கெட் விழவில்லை. அதெல்லாம் பிரச்சனைதான். இந்த பிரச்சனைகள் பெங்களூருவிற்கு எதிரான 5 வது போட்டியிலும் தொடர்ந்தால் என்ன செய்வீர்கள்?  தோல்விக்கான பழி மொத்தத்தையும் நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை என்பதில் தூக்கி போட்டுவிட்டு கையை கட்டி நிற்பீர்களா? அசாத்தியங்களை எப்போதுதான் நிகழ்த்துவீர்கள்? ருத்துராஜ் மட்டுமே சிஎஸ்கே இல்லையே. அவர் பெர்ஃபார்ம் செய்யாவிட்டால் அந்த இழப்பை ஈடு செய்து அணியை முன்நகர்த்தி செல்ல அடுத்தக்கட்டத்தில் வேறு வீரர்கள் இல்லவே இல்லையா? மிடில் மற்றும் டெத் ஓவர்களில் இன்னும் அதே பழைய அணுகுமுறையோடு மந்தமாக ஆடாமல் அதிரடி காட்டப்போவது யார்? பௌலிங்கில் தீபக் சஹார் இல்லைதான். ஆனால், கடந்த சீசனில் தீபக் சஹார் மட்டும்தான் பெர்ஃபார்ம் செய்தாரா? சஹாருக்கு உறுதுணையாக பவர்ப்ளேயில் ஹேசல்வுட் மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தாரே? மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப்களை பிரிப்பதையே பிரதானமாக கொண்ட ஷர்துல் தாகூர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாரே? தீபக் சஹார் சஹார் சொதப்பினாலும் அங்கே ஹேசல்வுட், ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பாக வீசியிருப்பர்.  தற்போதைய அணியில் தீபக் சஹாரின் இல்லாமையை போக்கி அசாத்தியமாக பெர்ஃபார்ம் செய்யும் ஹேசல்வுட் யார்? ஷர்துல் தாகூர் யார்?

image

5. தலைவன் தலைவனாக இருக்கிறானா?

இந்த சீசனில் பல புதிய கேப்டன்கள் களமிறங்கியிருந்தனர். பலருமே சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ஜடேஜா மட்டுமே கேப்டன்சி சார்ந்து எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். தோனியின் நிழலிலேயே ஜடேஜா இருக்கிறார் எனும் சர்ச்சையும் கிளம்பியுள்ளது. இதை ஆட்டத்தின் போது நாமே பார்த்திருக்கிறோம். ஜடேஜா பவுண்டரி லைனில் ஓரமாக நிற்க தோனியே பல முக்கியமான முடிவுகளை எடுப்பதை களத்திலேயே பார்க்க முடிகிறது. ஒரு வீரராகவும் கேப்டன் என்கிற பொறுப்பை உணர்ந்து மற்ற வீரர்களுக்கு உந்துதல் அளிக்கும் வகையில் ஆடவும் ஜடேஜா தடுமாறுகிறார். அணியின் கேப்டனாக ஒரு கேப்டன்ஸ் இன்னிங்ஸை ஜடேஜா  ஆடிக்கொடுத்தார் எனில் கூட எல்லாமே சரியாகக்கூடும். அதற்கு முதலில் ஜடேஜா தன்னை தலைவனாக உணர வேண்டும்.

இந்த 5 பிரச்சனகளையும் தீர்க்கும்பட்சத்தில் சென்னை அணி எதிர்பார்க்கும் அந்த முதல் வெற்றி சீக்கிரமே கிடைக்கும்.

-உ.ஸ்ரீராம்

இதையும் படிக்கலாமே: ஜடேஜாவுக்கு பதிலாக இவரை சென்னை கேப்டனாக ஆக்கியிருக்கணும் – யாரை சொல்கிறார் ரவி சாஸ்திரி?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.