நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா, 2021-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த மசோதா மீது எந்த பதிலும் அளிக்காமல் நான்கு மாதங்களாக ராஜ் பவனில் ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார். அது தி.மு.க தரப்பை கொதிப்படைய வைத்தது. ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குரல் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, நீட் மசோதா குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஆளுநருக்கு ஏற்பட்டது.

ஸ்டாலின்

பின்னர், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி, நீட் மசோதாவை சபாநாயகர் அலுவலகத்துக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். மசோதாவைத் திருப்பி அனுப்பியது சட்டத்தில் இருக்கும் நடைமுறைதான் என்றாலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் களத்தில் அது விவாதப்பொருளாக மாறியது.

ஆளுநர் மாளிகை பிப்ரவரி 3-ம் தேதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், ‘நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மற்றும் இது தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கை ஆகியவற்றை விரிவாக ஆளுநர் ஆய்வுசெய்தார். அந்த மசோதா மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கருத்தை ஆளுநர் கொண்டிருக்கிறார். குறிப்பாக, மாநிலத்தின் கிராமப்புற, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நலன்களுக்கு அது எதிரானது என்று ஆளுநர் கருதுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், “பிப்ரவரி 1-ம் தேதியே தமிழ்நாடு சபாநாயகருக்கு அந்த மசோதாவைத் திருப்பி அனுப்பி, அதை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்” என்றும் கூறப்பட்டது.

ஸ்டாலின், ரவி

அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், சட்டமன்ற சிறப்பு அமர்வைக் கூட்டி நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட ஆளுநரின் செயல் குறித்து விவாதிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 8-ம் தேதி சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

மீண்டும் ஆளுநருக்கு நீட் விலக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டது. அதுவும் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கக் கோரி ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் மார்ச் 15-ம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அதே நாளில், தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரச்னையை எழுப்பினார்.

டி.ஆர்.பாலு

நீட் விலக்கு கோரும் மசோதா மட்டுமல்ல, கூட்டுறவு சங்கங்கள் சட்டத்திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகிய மசோதாக்களும் ஆளுநர் ரவியின் ஒப்புதல் கிடைக்காமல் ராஜ்பவனில் கிடப்பில் உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது குறித்து ஆளுநர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், “கூட்டுறவு சங்க திருத்த மசோதாவைப் பொருத்தவரை, விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறப்படும் சங்கங்களின் செயல்பாட்டை இடைநிறுத்தி வைக்கவும், விசாரணையின்றி கலைக்கவும் உத்தரவிட அரசு ஊழியர்களான கூட்டுறவு சங்கப் பதிவாளர்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். அது குறித்து தமிழக அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதற்கு மாநில அரசிடமிருந்து பதில் வரவில்லை” என்று ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத் திருத்த மசோதாவில், பல்கலைக்கழக சிண்டிகேட் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்படுபவருக்கு கல்வித் தகுதியோ, அனுபவமோ தேவையில்லை என்று கூறப்பட்டுள்ள அம்சத்தை ஆளுநர் ஆட்சேபித்துள்ளார். நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் அளித்துள்ள ஆளுநர் தரப்பு, பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும், கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவை அனுப்பிவைக்க வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரவி

இது தொடர்பாக தமிழக முதல்வர் தன்னை சந்தித்தபோது, மசோதா தொடர்பான நிலை, சட்டபூர்வ சிக்கல்கள், அரசியலமைப்பின்படி அரசு செயல்பட வேண்டிய அவசியம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டதாகவும் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். ஆளுநர் ரவிக்கு எதிராக மக்களவையில் தி.மு.க-வினர் குரல் எழுப்பியது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆளுநர், தனது கடமையை செய்துவருவதாகவும், தி.மு.க-வினரின் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை என்றும் ஆளுநர் கூறியிருக்கிறார்.

ஆளுநரின் இத்தகைய அணுகுமுறைக்குப் பின்னால் மத்திய பா.ஜ.க அரசு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மசோதாக்களைக் கிடப்பில் போட்டிருப்பதால் ஆளும் தி.மு.க தரப்பு கொந்தளிப்பில் இருக்கிறது. இந்த நிலையில், தமிழக ஆளுநர் ரவி டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.