இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்து அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் பொங்கி எழுந்த பொதுமக்கள் இரவோடு, இரவாக அதிபர் கோட்டபய ராஜபக்ச இல்லத்தை முற்றுகையிட்டு பல மணி நேரம் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்வெட்டு, இணையதளம் துண்டிப்பு, ஊரடங்கும் அமல் கொரோனாவால் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி, ஒட்டுமொத்த இலங்கையின் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய அந்நிய செலாவணியை கரைத்ததால், இலங்கையின் பண மதிப்பு செல்லாக்காசாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால், மலிவு பொருட்களை வாங்குவதற்கு கூட நிறைய பணத்தை செலவழிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்கள் பொதுமக்கள். தொழில்கள் முடங்கிவிட்டன. கொரோனாவால் சுற்றுலாத்துறை ஸ்தம்பித்துவிட்டது. தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி சரிவால் அந்நியச் செலாவணி கையிருப்பு வறண்டு போய்விட்டது. கிட்டத்தட்ட கடனை திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு திவாலான நிலையில் இருக்கிறது இலங்கை.

இதனால் நாளுக்கு நாள் இலங்கை மக்களுக்கு பிரச்னை கூடிக் கொண்டே போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு கூட நீண்ட வரிசையில் காத்திருந்தும் அது கிடைக்காத நிலையே நீடிக்கிறது. இப்படி விலைவாசி உயர்வு, எரிபொருட்கள் தட்டுப்பாடு, நாள் முழுவதும் நீடிக்கும் மின் வெட்டு ஆகியவற்றால் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் இலங்கை மக்கள். விளைவு அவர்களின் ஒட்டுமொத்த ஆத்திரமும் தற்போது அதிபர் கோட்டபய ராஜபக்ச மீது திரும்பியிருக்கிறது.

image

பொருளாதார சீர்குலைவை, விரைவில் சீர்தூக்க முடியாவிட்டால், பதவி விலகி மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்ற கொந்தளிப்புடன் கொழும்புவின், மிரிஹானயில் உள்ள அதிபர் இல்லம் அருகே போராட்டத்தில் குதித்தனர். தொலைத்த வாழ்க்கையை திருப்பி கேட்க வந்த மக்களை, காவல்துறையினரும், ராணுவத்தினரும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி திருப்பி அனுப்ப எடுத்த முயற்சிகள் எதுவும் பயன் அளிக்கவில்லை. மக்களின் ஆத்திரத்தை மேலும் தூண்டிவிட்டிருக்கிறது.

கற்கள், காலணிகள் என கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வீசி காவல்துறையினருக்கு பதிலடி கொடுத்துள்ளனர். அதிபர் வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்துக்கும் தீ வைத்து, தங்களது ஆத்திரத்தை கொட்டியிருக்கிறார்கள். ஆனால், அதிபர் கோட்டபய ராஜபக்சவோ மக்களை சந்திக்க மனம் இல்லாமல், தனது இல்லத்தை விட்டு பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளர்ச்சி பரவுவதை தடுக்க பல இடங்களில் இணையதளமும், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

image

வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் ஜூப்ளி சந்திப்பில் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என அதனை விரிவாக்கம் செய்தவர் கோட்டபய ராஜபக்ச. தற்போது அந்த விஸ்தாரமான பகுதியில் தான் அவருக்கு எதிராகவே போர்கொடி உயர்த்தியிருக்கிறார்கள் பொதுமக்கள். எதை விதைத்தோமோ, அதையே தான் அறுவடை செய்ய முடியும் என்ற வாழ்வியல் தத்துவம் கண்ணீர் காட்சிகளாய் விரிகிறது இலங்கையில்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.