ஓர் இடத்தின் வானிலை மற்றோரிடத்தின் வானிலையைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களுடைய காலநிலை இடைவேளையைச் சரியாகப் பகிர்தல் அவசியமாகக் கருதப்பட்டது. இவ்வாறான பகிர்தலின் நோக்கோடு தொடங்கப்பட்டதே World Meteorological Organization (WMO) எனப்படும் உலக வானிலை அமைப்பு. 1950-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. உலக வானிலை அமைப்பு தொடங்கப்பட்ட இந்த தினம், ஒவ்வோர் ஆண்டும் உலக வானிலையியல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வோர் கருப்பொருள் ஒன்றை எடுத்துக் கொண்டு அதை நோக்கிச் செயல்பட உலக நாடுகளை உலக வானிலை அமைப்பு அறிவுறுத்துகிறது.

World Meteorological Organization

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக, ‘Early warning, Early action’ (‘முன் எச்சரிக்கை, முன்னரே செயல்பாடு’) என்பதை உலக வானிலை அமைப்பு அறிவித்திருக்கிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருளின் நோக்கத்தைக் கண்டறியச் சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் பாலச்சந்திரனைத் தொடர்புகொண்டபோது, “புவி வெப்பமாதலும் காலநிலை மாற்றமுமே நமக்கு முன்நிற்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. பெருங்கடல்களில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது; அதன் தாக்கமே புயல்களாகவும் கனமழையாகவும் உருவெடுக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளில், வானிலை தொடர்பான சுமார் 11,000 பேரிடர்கள் நிகழ்ந்தேறியுள்ளன என்பது தரவுகள் கூறும் உண்மை. இந்தப் பேரிடர்களால் பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். இம்மாதிரி அழிவுகளைத் தடுக்க முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நமக்குத் தேவை. அதை வலியுறுத்தும் அதைச் நோக்கிச் செயல்படும் விதமாகவே, இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘Early warning, Early action’ என்பதை உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ளது,” என்றார்.

இயக்குநர் பாலசந்திரன்

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நமது வலைப்பின்னலை விரிவுபடுத்தும் செயலில் நாம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். நகரமயமாதல் விரைவாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படுவதும் பல்வேறு இடங்களில் புதிய ரேடார்கள் பொருத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. இதுமட்டுமன்றி தாக்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் வானிலை அறிக்கைகளோடு சேர்த்து இடத்திற்கு ஏற்ற வானிலை அறிக்கைகளும் கொடுக்கத் தொடங்கியுள்ளோம். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

-சுபஸ்ரீ

(பயிற்சிப் பத்திரிகையாளர்)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.