1993-ல் திமுக-வில் இருந்து வைகோ வெளியானதற்கு, கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி வாரிசு அரசியல் செய்கிறார் என்ற காரணமும் உண்டு. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது நிரூபனமாகும் வகையில், அதே வாரிசு குறித்த சர்ச்சை ம.தி.மு.க-விலும் எழத்தொடங்கிவிட்டது. ம.தி.மு.க-வில் துணைப் பொதுச் செயலாளர்கள், தலைமை கழகச் செயலாளர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஏற்கனவே தலைமை கழகச் செயலாளர் பதவிக்கு வைகோவின் மகன் துரை வைகோ அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதான் ம.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ம.தி.மு.க தலைவர் வைகோ, துரை வைகோ

இதனால், வைகோவுக்கு எதிராகப் போர்க்கொடித் தூக்க சில நிர்வாகிகள் தயாராகிவிட்டனர். சிவகங்கையில் அதிருப்தி நிர்வாகிகள் ஆலோசனையிலும் ஈடுபட்டனர். அக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முக சுந்தரம், உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், வழக்கறிஞர் அணி செயலாளர் பாரத மணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பிரச்னை குறித்து ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் விசாரித்தோம். “போர்க்கொடித் தூக்கியிருக்கும் செவந்தியப்பன் வைகோவின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர். பொடா சட்டத்தின் கீழ் கைதாகி, வைகோவுடன் பல மாதங்கள் சிறையில் இருந்தவர். அப்படிப்பட்ட நபரே இன்று அதிருப்தியில் இருக்கிறார் என்றால் கட்சியின் நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள். கலிங்கப்பட்டியில் கடந்தாண்டு அக்டோபர் 20ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் வைகோ அவரின் மகன் துரை வைகோவை மதிமுக தலைமைக் கழகச் செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்தார். எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி அவசரமாகக் கூட்டம் நடத்தி, துரை வைகோவை ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளராகத் தேர்வு செய்ததால் 8-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து அக்கூட்டத்திலிருந்து வெளியேறியதும் நடந்திருக்கிறது.

மதிமுக அதிருப்தியாளர்கள் கூட்டம்

கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கு எதிராகப் பேசி விமர்சனம் செய்திருக்கிறார் வைகோ. தி.மு.க-வை விட்டு வெளியேறியதற்குப் பலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், வாரிசு அரசியலை, அதாவது ஸ்டாலினை எதிர்த்ததும் முக்கியமான காரணமாகும். அப்படிப்பட்ட வைகோ எம்.பி பதவிக்காக முன்பு, `ஸ்டாலினை முதல்வராக அமர்த்திப் பார்ப்பதே தனது லட்சியம்’ என்றார். இப்போது, தி.மு.க-வைப் பின்பற்றி அவரின் மகன் துரையைப் பொறுப்புக்குக் கொண்டு வந்துள்ளார். தி.மு.க பாணியில் செயல்படுவதோடு நிறுத்திக்கொண்டால்கூட பரவாயில்லை, ஆனால் தி.மு.க-வுடனே ம.தி.மு.க-வைக் கரைத்துவிட வேண்டும் என்பதற்கான மறைமுக பேரமும் நடந்து வருகிறார்கள் என்கிறார்கள். தொண்டர்கள் விருப்பப்பட்டார்களானால் தாராளமாக இணைத்துக் கொள்ளட்டும் என்பதுதான் அதிருப்தியாளர்களின் வாதமும்கூட! எதுவாயினும் குறைந்தபட்சம் நிர்வாகிகளுக்காவது தெரியப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கருத்து” என்றனர்.

அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவனிடம் பேசினோம். “போனில் எந்த விஷயத்தையும் பேச முடியாது. நேரில் வந்தால் ஒன் டு ஒன் பேசிக்கொள்ளலாம். எங்களுக்கு விளம்பரப்படுத்திக் கொள்வதில் எண்ணமில்லை” என்றவரிடம் உங்கள் டிமாண்ட் என்ன என்பதையாவது சொல்லலாமே என்று கேட்டோம். தொடர்ந்து பேசியவர், “கட்சியை தி.மு.க-வுடன் இணைப்பதாக தலைமையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இணைத்துக்கொள்ளுங்கள் என்று நாங்களும் சொல்கிறோம். மற்றபடி பொதுக்குழுக் கூட்டத்துக்கு (இன்று) நான் செல்லப்போவதில்லை” என்பதோடு முடித்துக்கொண்டார்.

வைகோ – ஸ்டாலின்

ம.தி.மு.க தலைமையின் விளக்கமறிய முதலில் கணேசமூர்த்தி எம்.பி-யைத் தொடர்புகொண்டபோது, `வெளியில் இருப்பதாக’ சொல்லி போனை வைத்துவிட்டார். அடுத்ததாக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவைத் தொடர்புகொண்டோம், “செய்தித் தொடர்பாளர் நன்மாறனிடம் பேசுங்கள்” என்று அவரும் இணைப்பை துண்டித்தார். நன்மாறனிடம் பேசினால், ‘நோ கமென்ட்ஸ்’ என்று முடித்துக்கொண்டார். இறுதியாக வைகோ மகன் துரை வைகோவைத் தொடர்புகொண்டோம். பலமுறை போன் செய்தபோதும் ஒருமுறைக்கூட எடுத்துப் பேசவில்லை.

இந்த நிலையில் இன்று சென்னையில் மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அதிருப்தி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வைகோ மகன் துரை வையாபுரி கட்சி தலைமை கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்டதுக்கு பொதுக்குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. கலக குரல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் வைகோ என்ன முடிவை எடுக்க போகிறார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.