உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், அங்குள்ள மரியுபோல் நகரில் கடந்த 12 நாட்களில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

image

நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி படையெடுத்தது. இதையடுத்து, அந்நாட்டை சுற்றி வளைத்து சுமார் மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. தரை வழியில் மட்டுமின்றி வான் வழியிலும் தாக்குதல் நடந்து வருவதால் உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்துள்ளன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உயிருக்கு பயந்து இதுவரை 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக உக்ரைனின் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

image

இந்நிலையில், உக்ரைனின் தென் கிழக்கே அமைந்துள்ள முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றும் நோக்கில், அந்நகரின் மீது ரஷ்யப் படைகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குண்டு மழைகளை பொழிந்து வருகின்றன. ராணுவ முகாம்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருவதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக பிரிட்டன் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில், மரியுபோல் நகரமே இடிபாடுகளால் சூழ்ந்திருப்பது போல காணப்படுகிறது.

image

குவியும் சடலங்கள்…

இந்த சூழலில், ரஷ்யாவின் தாக்குதலில் கடந்த 12 நாட்களில் மட்டும் மரியுபோல் நகரில் 1,582 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும், அங்கு சடலங்கள் குவிந்து வருவதால் அங்குள்ள கல்லறைகளில் பெரிய அளவிலான குழிகளை வெட்டி, பிணங்களை புதைத்து வருவதாக மரியுபோல் நகர நிர்வாகம் கூறியுள்ளது. சடலங்களை புதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.