தேனி மாவட்டம் பெரியகுளம், தேனி அல்லிநகரம், போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய 6 நகராட்சிகளில் 177 கவுன்சிலர்களும், பூதிப்புரம், வடுகபட்டி, பழனிசெட்டிபட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட 22 பேரூராட்சிகளில் 336 கவுன்சிலர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேனி மாவட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக 6 நகராட்சி தலைவர் பதவிகிகளும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடவுள்

இந்நிலையில், தேனி-அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. தி.மு.க சார்பில் 20-வது வார்டில் பாலமுருகன் என்பவரும், 10-வது வார்டில் அவர் மனைவி ரேணுபிரியாவும் போட்டியிட்டனர். அவர்களை போலவே மொத்தம் 5 தம்பதிகள் போட்டியிட்டனர். இதில் நகராட்சி தலைவர் வேட்பாளரான ரேணுபிரியா, அவர் கணவர் பாலமுருகன் ஆகியோர் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றனர். இது தேனி-அல்லிநகரம் நகராட்சி தேர்தலில் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இதேபோல வித்தியாசமான பெயர்களை கொண்ட `பிரிட்டிஷ்’ என்ற தி.மு.க வேட்பாளரும், `கடவுள்’ என்ற பெயர் கொண்ட தி.மு.க வேட்பாளரும் போட்டியிட்டனர்.

தேனி-அல்லிநகரம் நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டுகளாலும் குறிப்பிட்ட சமூதாயத்தினரின் ஓட்டுகளே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியதாக இருந்தன. இதில் எந்த அரசியல்கட்சியைச் சேர்ந்தவர் எனப் பார்க்காமல், உறவுமுறை மற்றும் உள்ளூர் செல்வாக்கின் அடிப்படையிலேயே வெற்றி முடிவு செய்யப்படக் கூடியதாக இருந்தது.

பிரிட்டிஷ்

இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு 19-ம் தேதி முடிவடைந்து 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து, இன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நகர்மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இதில் தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 19 இடங்களை பெற்று நகராட்சியை தி.மு.க கைப்பற்றுகிறது. பெரியகுளம் சாலையில் உள்ள அலுவலகத்தில் 33 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.

திமுக கவுன்சிலர்

இதில் 26-வது வார்டில் தி.மு.க சார்பாக போட்டியிட்டவர் பெயர் பிரிட்டிஷ். பெயரே மிகவும் வித்தியாசமாக உள்ள இவர் 568 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதே போல் தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கடைசி வார்டான 33-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் கடவுள். இவர் 1,187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

வித்தியாசமான பெயர்களைக் கொண்ட பிரிட்டிஷ் மற்றும் கடவுள் ஆகியோர் நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் வீரமுத்துமார் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.