உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தாம் களமிறங்கலாம் என, அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, சூசகமாக பதிலளித்து தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல், மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 403 தொகுதிகளில் பதிவான வாக்குகள், மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் 20 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக, காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தாம் களமிறங்கலாம் என, அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி செய்தியாளர்களின் கேள்விக்கு சூசகமாக பதிலளித்துள்ளார். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி இன்று வெளியிட்டனர்.

அப்போது பேசிய பிரியங்கா காந்தி, “உத்தரப்பிரதேச அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். யோகி ஆதித்யநாத் அரசு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தவறிவிட்டது. நாங்கள் உ த்தரப்பிரதேசத்தில் சாதியை வைத்து பிரசாரம் செய்யவில்லை. உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்” எனக் கூறினார்.

image

அப்போது அவரிடம் காங்கிரஸ் சார்பில் முன்னிறுத்தப்படக்கூடிய முதல்வர் வேட்பாளர் யார் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேறு யாருடைய முகத்தையாவது நீங்கள் பார்த்துள்ளீர்களா…? பிறகு என்ன..?” என புன்சிரிப்புடன் பதிலளித்தார். இதுகுறித்து மீண்டும் பிரியங்கா காந்தியிடம் கேட்டதற்கு, “உங்களால் என் முகத்தை பார்க்க முடியுமல்லவா?… ஒவ்வோர் இடத்திலும் என்னுடைய முகம் இருப்பதனை நீங்கள் காணலாம்” எனக் கூறினார்.. இதனால், வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில், முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தியே முன்னிறுத்தப்படலாம் என அவர் சூசக பதில் அளித்துள்ளார்.

எனினும், பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடுவாரா என உறுதிப்படுத்தப்படுத்தவில்லை. ஏற்கெனவே, கடந்த அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 40 சதவீத பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்தநிலையில், இந்த சூசகப் பதில், அக்கட்சி தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.