முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதியப்பட்டதை அடுத்து, இன்று காலை 5 மணி முதல் அவருக்குச் சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனை

தருமபுரி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றது. மேலும், கே.பி.அன்பழகன் மற்றும் அவர் மனைவி மல்லிகா அன்பழகன், மகன்கள் சசி மோகன், சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய ஐந்து பேர் வழக்கு பதிவுசெய்து தருமபுரி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதிமுக ஆட்சிக் காலத்தின்போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏ-வாக இருந்துவருகிறார்.

`இவர் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலகட்டமான 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்குவிப்பில் ஈடுபட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த வேண்டும்´ என கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து கே.பி.அன்பழகனுக்குத் தொடர்புடைய 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை 5 மணி முதல் சோதனை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கெரகோட அள்ளியில் உள்ள அவரது இல்லத்தின் முன் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு கோஷங்கள் எழுப்பினர்.

வீட்டின் உள்ளே ரெய்டு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, வெளியே ஆதரவாளர்களுக்குக் காலை சூடான வெண் பொங்கல் சாம்பார் மற்றும் புலாவ் அளிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து, கோஷமிட்டுக் களைப்பிலிருந்த ஆதரவாளர்களுக்குச் சூடான டீ பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மதியம் குஸ்கா விருந்து வழங்கப்பட்டது

மதியத்துக்குப் பிறகு ரெய்டு நடக்கும் இடத்துக்கு வந்த முன்னாள் தி.மு.க அமைச்சரும், இந்நாள் அ.தி.மு.க பிரமுகருமான முல்லைவேந்தன் செய்தியாளர் சந்திப்பில், “இந்தியத் துணைக்கண்டத்தில் இப்படி ஒரு பழிவாங்கும் எண்ணமும் அடக்குமுறையும் சர்வாதிகார ஸ்டாலினைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. பொய்யான வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்றினீர்கள். தோசையைத் திருப்பிப் போடத்தான் வேண்டும். இதன் விளைவை நிச்சயமாக அதிமுக ஸ்டாலினுக்கு பரிசளிக்கும்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத தருணத்தில் திடீரென வந்த கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில்,

“தருமபுரியைத் தனது கோட்டையாகக்கொண்டுள்ள அன்பழகன் வீட்டில் ரெய்டு நடந்துகொண்டிருப்பது என்பது எதிர்பார்த்த ஒன்று. ஆட்சி மாற்றம் நிகழும்போது இது போன்ற அவமதிக்கத்தக்கச் செயல்கள் நடப்பது தெரிந்த விஷயம்தான். அவர், தான் நிரபராதி என்பதை நிரூபித்து, மீண்டும் இங்கு நல்ல முறையில் வெற்றிபெற்று மக்களுக்குச் சேவை செய்வார் . நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற்று தாங்கள் மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்கள் என்பதை மெய்ப்பிக்கும். தொடர்ந்து நிகழும் ரெய்டுகளால் அதிமுக-வுக்கு பின்னடைவு என்று எண்ணிக்கொண்டிருக்கும் தி.மு.க-வுக்கு நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் பதிலளிப்போம்” என்றார்.

அவரைத் தொடர்ந்து முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் முன்னாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, விழுப்புரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கே.பி.அன்பழகன் வீட்டுக்கு வருகைபுரிந்தனர்.

அ.தி.மு.க-வினர்

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இன்பதுரை, “உண்மையில் கே.பி.அன்பழகன் சுயநினைவோடுதான் இருக்கின்றாரா… சாப்பிட்டாரா… எப்படி இருக்கின்றார் என்பது குறித்த எந்தத் தகவலும் இதுவரை அதிகாரிகளிடமிருந்து வரவில்லை. சட்டத்துக்குப் புறம்பான‌ சோதனை நடத்திவருகிறது அரசாங்கம். தாங்கள் என்ன கைப்பற்றினாலும் அது பயனற்றுத்தான் போகும். வழக்கறிஞருக்கு உள்ளே அனுமதி இல்லை என்று எந்தச் சட்டமும் கிடையாது” என்றார்.

சோதனை தொடங்கி, கிட்டத்தட்ட 15 மணி நேரம் ஆன நிலையில் எந்தவிதத் தகவலும் வெளியாகாததையடுத்து வீட்டின் முன் இருந்த ஆதரவாளர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் சோதனை நிறைவு பெறும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த பிறகு ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.