இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட கவிஞர் லீனா மணிமேகலைக்கும், பின்னணி பாடகி சின்மயிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ‘‘மி டூ’’ (#MeToo)ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கிடையில் லீனா மணிமேகலையின் முடக்கப்பட்ட பாஸ்போர்ட் விடுவிக்கபட்டது மற்றும் தனது அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசிகணேசன் இணைவது போன்ற விவகாரங்கள் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலையும், சின்மயியும் கருத்துக்களை பதிவிட்டனர்.

உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தனக்கு எதிராக லீனா மணிமேகலையும், பின்னணி பாடகி சின்மயியும் பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும், இணையதள செய்தி நிறுவனமும் (தி நியூஸ் மினிட்) பரப்பி வருவதால், தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும் இயக்குனர் சுசி கணேசன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

image

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, சுசி கணேசன் தரப்பில், லீனா மணிமேகலைக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு சைதாபேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளாதாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணையவுள்ள நிலையில் திரைத்துறையில் தனது நற்பெயரை கெடுக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

மேலும் வழக்கு குறித்து லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், பேஸ்புக், டிவிட்டர், தி நியூஸ் மினிட் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிக்க: ’ஜெய் பீம்’ படத்தில் நடித்ததற்குப் பெருமைப்படுகிறேன்; நடிகர் ராவ் ரமேஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.