பல நேரங்களில் அழகிய சிற்பங்களையும் பிரம்மாண்ட கோயில்களையும் எவ்வளவு நேரம் நின்று ரசித்தாலும், அந்த இடத்தை கடந்து செல்வதற்கு மனமே வராது. தன்னை மறந்து அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்போம். இது போன்ற பிரம்மாண்டங்களைத் தஞ்சை, மாமல்லபுரம் போன்ற ஊர்களில் பார்த்திருக்கலாம். நாம் இதுவரை பார்த்த கோயில்களில் நூற்றுக்கணக்கான சிற்பங்கள் இருந்தாலும், அவற்றில் ஒரு சில சிற்பங்களே நம் மனதைக் கவர்ந்திருக்கும். ஆனால், கர்நாடக மாநிலம் பாகல் கோட்டை மாவட்டத்தில், கிருஷ்ணா நதியின் துணை நதியான மலப்பிரபா நதியின் கரையில் அமைந்துள்ள பட்டடக்கல் தொகுப்பு கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும், நம்மை நகரவிடாமல் ஒரே இடத்தில் நிற்க வைத்துவிடும். அந்தளவுக்குச் சிற்பங்களின் வடிவங்களும், நயமும், அழகும் பார்க்கப் பார்க்க ஆர்வத்தையும், மனதையும் கவர்ந்து விடும் என்றே கூறலாம்.

image

கர்நாடகத்தின் வட பகுதிக்குச் சிறப்பு சேர்ப்பது ஹம்பி என்றால், கர்நாடகத்தின் தென் பகுதிக்கு சிறப்பு சேர்ப்பது பட்டடக்கல். இந்த இடம் புனிதமான இடமாக கருதப்பட்டது. சாளுக்கியர்களின் முற்காலத் தலைநகர்களில் ஒன்றாக பட்டடக்கல் இருந்துள்ளது. பட்டடக்கல் என்றால், ‘முடிசூட்டு இடம்’ என்றும், ‘மாணிக்கக் கற்களின் நகரம்’ என்றும் பொருள்.

பெயருக்கு ஏற்றார்போல், செம்பாறைகளில் செதுக்கப்பட்ட அற்புத உலகம்தான் பட்டடக்கல் தொகுப்புக் கோயில் சிற்பங்கள். இந்த இடம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தின் வினயாதித்யா ஆட்சியின்போது முடிசூட்டு விழாக்களுக்கு பயன்படுத்தப்பட்டது. `தேர்ந்தெடுக்கப்பட்ட, பன்முகக் கலையின் உச்சம். தென்னிந்தியக் கட்டடக்கலையும் வட இந்தியக் கட்டடக்கலையும் ஒன்றிணைந்த இணக்கமான கலவை பட்டடக்கல் கற்கோயில்கள்’ என்று பட்டடக்கல் சிற்பங்கள் மற்றும் கற்கோயில்கள் குறித்து யுனெஸ்கோ நிறுவனம் குறிப்பிடுகிறது.

image

சாளுக்கியர்களின் புகழ்பெற்ற சிற்பங்கள், கற்கோயில்கள் காணப்படும் பதாமி மற்றும் அய்ஹோலுக்கு அருகே காணப்படுகிறது பட்டடக்கல். அய்ஹோல், ‘இந்தியக் கட்டடக்கலையின் தொட்டில்’ என்றால், பட்டடக்கல், ‘இந்தியக் கட்டடக்கலையின் பல்கலைக்கழகம்’ என்று அறிஞர்களால் புகழப்படும் அளவுக்கு சிறப்பான சிற்பங்களையும் கோயில்களையும் கொண்டிருக்கிறது. சுமார் 1,200 வருடங்களையும் கடந்து பேரெழிலுடன் காணப்படுகின்றன பட்டடக்கல் கற்கோயில்கள். 

பட்டடக்கல் வரலாறு: கி.பி. 6-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவையும், மத்திய இந்தியாவையும் சாளுக்கிய மன்னர்கள் ஆண்டுவந்தனர். இந்த மன்னர்களில் தலைசிறந்த மன்னராக விளங்கியவர் இரண்டாம் புலிகேசி. இவரின் ஆட்சியில் வாதாபிக்கு அருகில் உள்ள அய்ஹோல் நகரைத் தலைநகராக்கி ஆட்சி செய்து வந்தார். பல்வேறு போர்களைச் சந்தித்து தன்னுடைய எல்லையை விரிவுபடுத்திய இவருக்கு, கட்டடக் கலையின் மீது அளவற்ற ஆர்வம் உண்டு.

சாளுக்கிய மன்னர்கள் அய்ஹோல், வாதாபி போன்ற நகரங்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டாலும், அருகில் உள்ள பட்டடக்கல் நகரை மிகப் புனிதமாகக் கருதினர். மன்னர்கள் முடி சூட்டிக்கொள்வதற்காகவே இந்த நகரம் உண்டாக்கப்பட்டிருந்தது. நம் மனதைக் கவரும் வண்ணம் சாளுக்கியர்களின் கலைச்சின்னங்களும், 7-ம் மற்றும் 8-ம் நூற்றாண்டுகளில் எழுப்பப்பட்ட அழகான சிற்பங்களும், கற்கோயில்களும் இங்கு அமைந்திருக்கின்றன.

image

பட்டடக்கல்லில் இருந்து 22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது வாதாபி. இதுவும் சில காலம் சாளுக்கியர்களின் தலைநகரமாக இருந்தது. குடைவரைக் கோயில்களுக்கு வாதாபி புகழ்பெற்றது. அகத்தியர் ஏரியைச் சுற்றியுள்ள குன்றுகளில் கி.பி. 6-ம் நூற்றாண்டுக்கும் 8-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவனுக்காக உருவாக்கப்பட்ட முதல் குடைவரைக் கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே விஷ்ணு, புத்தர், கணபதி சிலைகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன. வாதாபி குன்றிலிருந்து பார்க்கும்போது பச்சை நிற ஏரியும் சுற்றியுள்ள கிராமமும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். முதலாம் நரசிம்ம வர்ம பல்லவர் இரண்டாம் புலிகேசியை வாதாபியில் அழித்ததால், வாதாபி கொண்டான் என்ற பெயரைப் பெற்றார்.

image

ஆரம்பத்தில் அதாவது ஆறாம் நூற்றாண்டுகளில் இங்கு ஆட்சி செய்து வந்த சாளுக்கிய மன்னர்கள் வைஷ்ணவ மதத்தைப் பரப்புவதற்காக பல்வேறு கோயில்களை எழுப்பினர். ஆனால், 7-ஆம் நூற்றாண்டுகளில் சைவ சமயத்தின் தாக்கம் அதிகரித்து வந்ததால், சைவ கோயில்கள் எழுப்பப்பட்டது. சாளுக்கியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, இப்பகுதி ராஷ்டிரகூட வம்சத்துடன் இணைக்கப்பட்டது. 10 ஆம் மற்றும் 11 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டுவந்த ராஷ்டிரகூடர்களை 12ம் நூற்றாண்டில் வீழ்த்திய சாளுக்கியர்கள் மீண்டும் இப்பகுதியை ஆண்டனர். ஏராளமான கற்கோயில்களும், அழகிய சிற்பங்களும் அமைந்த சாளுக்கியர்களின் ஆட்சிக்கு 13-ம் நூற்றாண்டுகளில் முடிவு வந்தது.

13ம் நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தான்கள் படையெடுத்து வந்து சூறையாடியதில் பல்வேறு கோயில்கள் சிதைக்கப்பட்டன. இவர்களுக்கு அடுத்து உருவான விஜயநகர பேரரசுகள் வாதாபி, பட்டடக்கல் உள்ளடக்கி பல்வேறு இடங்களில் கோட்டைகளைக் கட்டினர். அதில், சுல்தான்களுக்கும், விஜயநகர பேரரசுக்கும் எல்லையாக பட்டடக்கல் இருந்தது. 1565-ல் விஜயநகர பேரரசு தோற்கடிக்கப்பட்டதால் பட்டடக்கல் பீஜப்பூர் சுல்தான்களின் வசம் வந்தது.

17-ஆம் நூற்றாண்டுகளில் முகலாய பேரரசர் ஔரங்கசீப் பட்டடக்கல்லை கைப்பற்றினார். ஔரங்கசீப்-க்கு கலை ஆர்வம் இல்லாததால் பட்டடக்கல் கைவிடப்பட்ட நிலைக்குச் சென்றது. முகலாயர்களின் வீழ்ச்சிக்குப் பின் மராட்டியர்களின் வசம் சென்றது. 18 ஆம் நூற்றாண்டுகளில் மைசூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சியை நடத்தி வந்த ஹைதர் அலி படையெடுத்து வந்து வெற்றி பெற்றார். கட்டடக்கல் பகுதியின் சிறப்பை உணர்ந்து அவற்றைப் பாதுகாக்கவும் செய்தார். அவருக்குப் பின் அவரின் மகன் திப்பு சுல்தான் அதன் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார். அவர்களுக்கு அடுத்து வந்த ஆங்கிலேயர்களின் வசம் சென்ற பட்டடக்கல், இந்தியத் தொல்பொருள் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சாளுக்கிய மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மராட்டியர்களும் இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் படையெடுத்த காரணத்தால் பல சிலைகள் சேதமடைந்திருக்கின்றன. ஆனாலும் சாளுக்கியர்களின் கட்டிடக்கலையின் சிறப்பை அவை எந்தவிதத்திலும் குறைத்துவிடவில்லை. அய்ஹோலும், வாதாபியும் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கினாலும் பட்டடக்கல் நகர் இவை இரண்டை விடவும் பலவிதங்களில் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

image

கட்டட அமைப்பு: வட இந்தியாவின் நகரி பாணி முறை கட்டடங்களின் வடிவங்களையும், காஞ்சின் தாக்கத்தால் திராவிட முறையும் கலந்த கட்டட அமைப்புகளை இங்குப் பலவற்றைக் காணலாம். இங்கு மொத்தம் 10 முக்கிய கோயில்கள் உள்ளன. அக்காலத்துச் சிற்பிகள் பல்வேறு கட்டடக்கலைப் பாணிகளை வைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நகரி பாணியையும், திராவிடப் பாணியையும் கலந்து இன்னொரு தனித்துவமான பாணியை உருவாக்கினர்.

ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோயில் கட்டும் நடவடிக்கைகள் பாதாமியில் இருந்து பட்டடக்கல்லுக்கு மாறின. பட்டடக்கல்லில் பல கன்னடக் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை: ஒன்று விருபாட்சர் கோயில் வெற்றித் தூணில், கன்னடத்தில் பொறிக்கப்பட்டுள்ள எட்டாம் நூற்றாண்டு இரண்டாம் விக்ரமாதித்தன் கல்வெட்டு. மற்றொன்று சங்கமேசுவரர் கோயிலில் உள்ளது. கிபி 1162 ஆம் ஆண்டில் கன்னடத்தில் பொறிக்கப்பட்ட அக்கல்வெட்டில் சங்கமேசுவரர் கோயிலைக் கட்டுவதற்கு சாளுக்கிய அரசன் விஜயாதித்தன் மானியம் வழங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமாயணம், மஹாபாரதம், கீதை, பஞ்சதந்திரக் கதைகள் எல்லாம் கற்களில் சிற்பங்களாக மாறியுள்ளது. பட்டடக்கல்லில் ஏராளமான கோயில்கள் இருந்தாலும், அவற்றில் சில கோயில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கப்படுகிறது.

விருபாட்சர் கோயில்: பட்டடக்கல்லில் ஏராளமான கோயில்கள் இருந்தாலும், இங்குள்ள அனைத்து கோயில்களுக்கும் மகுடம் போன்றது இந்த விருபாட்சர் கோயில். இந்த கோயிலின் அமைப்பானது காஞ்சி கைலாச கோயிலைப் போன்று இருக்கும். காரணம், கி.பி 642-ம் ஆண்டுகளில் நரசிம்ம பல்லவன் சாளுக்கிய நாட்டின்மீது படையெடுத்து, அவர்களின் தலைநகரான வாதாபியைச் சூறையாடினான். இதனால் சுமார் 100 வருடங்களாகப் பகையை மனதில் வைத்திருந்த சாளுக்கியர்கள், இரண்டாம் விக்ரமாதித்யனின் காலத்தில் கி.பி 735ம் ஆண்டுகளில் பல்லவர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றார். இதையடுத்து காஞ்சியை முழுவதுமாக அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புறப்பட்ட சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் விக்ரமாதித்யன், காஞ்சி கயிலாசநாதர் கோயிலையும் பல்லவர்களின் மற்ற சிற்பங்களையும் கண்டவுடன் மெய்மறந்து, தான் காஞ்சியில் கைப்பற்றிய செல்வங்கள் அனைத்தையும் கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, காஞ்சியில் ஒரு செங்கல்லைக்கூடச் சேதப்படுத்தாமல் திரும்பிச் சென்றுவிட்டார். காஞ்சி வெற்றியின் நினைவாக பட்டடக்கல்லில் ஒரு கோயிலை எழுப்ப நினைத்தார். இதையடுத்து, காஞ்சி கைலாச கோயிலை மனதில் கொண்டு அதே பாணியில் கோயில் கட்டினார். இதற்கு அவரின் ராணி லோகமகாதேவி அளித்த மானியத்தின் மூலம் கட்டப்பட்டது.

இந்த கோயில் முழுவதும் மகாபாரதம், ராமாயணக் காட்சிகள் நிறைந்து காணப்படும். அதிலும் முக்கியமானது கொற்றவையின் சிற்பம். இதில், மகிஷனின் தலைமீது ஒரு காலை வைத்து, அவன் கழுத்தில் தன் ஒரு கை சூலத்தைப் பாய்ச்சி, மற்றொரு கரத்தில் இருக்கும் வாளை அவன் மார்பில் செலுத்தும் காட்சி பிரமிக்கவைக்கிறது. மேலும், இங்குள்ள சுவர் முழுவதும் ஆண்கள் மற்றும் கன்னியர்களின் சிற்பங்களும் உள்ளன. பல்வேறு படையெடுப்புகளால் சிற்பங்கள் சிதைக்கப்பட்டிருந்தாலும், சுமார் 1,200 ஆண்டுகள் கடந்தும் பேரழகுடன் காட்சியளிக்கின்றன.

இந்தக் கோயிலில் காணப்படும் வெற்றித்தூண் கல்வெட்டு மிக முக்கியமானது. இரண்டாம் விக்ரமாதித்யன் இளவரசனாக இருந்தபோது… பேரரசனாக முடிசூடிய பிறகு… அவனது இறுதிக்காலத்தில்… எனப் பல்லவர்களுடன் பெற்ற மூன்று வெற்றிச் செய்திகளைச் சுமந்துகொண்டு சுமார் 1,200 ஆண்டுகளைக் கடந்தும் நின்றுகொண்டிருக்கிறது. எதிரி நாடாகக் கருதப்பட்ட காஞ்சியில், தான் கைப்பற்றிய செல்வத்தைக் கொடுத்துவிட்டு வந்த பேரரசனின் கொடைத்தன்மையையும், வீரத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது இந்த வெற்றித் தூண்.

மல்லிகார்ஜுனர் கோயில்: விருபாட்சர் கோயிலுக்கு முன்பாகக் காணப்படும் இந்த சிவன் கோயில், சாளுக்கியப் பேரரசி திரைலோக்ய மகாதேவி அளித்த மானியத்தின் மூலம் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் இந்தக் கோயில் அரசியின் பெயரில் ‘திரைலோகேஸ்வர மகா சைலம்’ என்று அழைக்கப்படுகிறது. தென்னாட்டுத் திராவிட பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோயிலின் ஒவ்வொரு தூணும் குறுஞ்சிற்பங்களால் நிறைந்திருக்கிறது. கோயில் சுவரில் பாற்கடல் கடையும் காட்சி, மகாபாரதக் காட்சி, பஞ்ச தந்திரக் கதைகள், புராணக் கதைகள் என்று அழகிய பல சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன.

Mallikarjuna Temple, Pattadakal - Timings, History, Best time to visit

காசிவிஸ்வநாதர் கோயில்: மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு முன்பாகக் காணப்படும் ஒரு பழைமையான கோயில் காசிவிஸ்வநாதர் கோயில். ஏழாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த இந்த கோயில், விருபாட்சர் கோயிலைப் போலவே இது காணப்பட்டாலும் அளவில் மிகவும் சிறியது. கோயில் சுவர்களின் பீடத்தில் அனைத்து திசைகளிலும் குதிரை, சிங்கம், மயில் ஆகியவற்றின் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் சுவர்களில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், ராவணன் கயிலாய மலையைத் தூக்குவதற்கு முயற்சி செய்யும் காட்சி, கண்ணனின் சிற்பங்கள் ஆகியவை காணப்படுகின்றன. மண்டபத்தின் கூரையில் எண்திசைக் காவலர்கள் காவலிருக்க, சிவபெருமான் பார்வதி, கார்த்திகேயன், நந்தி ஆகியோருடன் காட்சியளிக்கும் அற்புதக் காட்சியும் சிற்பமாக்கப்பட்டிருக்கிறது.

Hindu Temples of India: Kashi Vishwanatha Temple, Pattadakal, Karnataka

சங்கமேஸ்வரர் கோயில்: பட்டடக்கல்லில் காணப்படும் மிகப் பெரிய கோயில்களில் சங்கமேஸ்வரர் கோயிலும் ஒன்று. இதற்கு `விஜயேஸ்வரர் கோயில்’என்றும் பெயர் உண்டு. இங்கே காணப்படும் கல்வெட்டுகள் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சாளுக்கிய மன்னன் விஜயாதித்யன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட இந்தக் கோயில் அவர் இறப்பால் முழுமையடையாமல் நின்றுவிட்டதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் பிற்கால நூற்றாண்டுகளில் பணிகள் தொடர்ந்துள்ளன. கல்யாணச் சாளுக்கியர்களின் வேலைப்பாடும் இங்கே காணப்படுகிறது. சைவம், வைணவம், சக்தி வழிபாடு என அனைத்தையும் உள்ளடக்கிய சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. இங்கு, சிவன் நடராஜர் வடிவத்தில், சக்தியுடன் இருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

Sangameshwara Temple, Pattadakal (2021) | Timings, Entry Fee, Address

காளகநாதர் கோயில்: அளவில் மிகச்சிறிய கோயிலான காளகநாதர் கோயில் 7-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. இங்கே காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிதைந்து போயிருக்கின்றன. இதன் விமானக் கட்டுமானம் திராவிடக் கட்டுமானத்திலிருந்து மாறுபட்டு, ‘நகரி’ கட்டட பாணியில் அமைந்திருக்கிறது.

இதன் மண்டபத்தின் நுழைவாயிலில் கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. தற்போது இந்தக் கோயில் சிதைவடையும் நிலையில் காணப்படுகிறது. லிங்கத்துடன் காணப்படும் கருவறையை நோக்கி, வெளியே நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை அடுத்து சுற்றுப்பாதை (பிரதட்சிண பாதை) உள்ளது. இந்த அமைப்பு 7 முதல் 8 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இந்த கோயிலில் சமூக சமுதாயக் கூடம் (சபா மண்டபம்), ஒரு முக மண்டபம், என்று பல்வேறு மண்டபங்கள் கொண்ட அமைப்பாகவுள்ளது.

ஜம்பு லிங்கேஸ்வரர் கோயில்: பட்டடக்கல்லில் காணப்படும் மிகச் சிறிய கோயில்களில் இதுவும் ஒன்று. 7-ம் அல்லது 8-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இந்த கோயிலின் சிற்பங்கள் சேதமடைந்து தெளிவில்லாமல் இருக்கின்றன.

Karnataka Is Home To Pattadakal Temples, A UNESCO Site That Dates Back To  The 7th Century! | WhatsHot Bangalore
கடசித்தேஸ்வரா கோவில்: இங்குள்ள கருவறையின் வெளிப்புறச் சுவரின் வடக்கில் அர்த்தநாரீஸ்வரர் (பாதி சிவன், பாதி பார்வதி), மேற்கில் ஹரிஹரன் (பாதி சிவன், பாதி விஷ்ணு) மற்றும் தெற்கே லகுலிஷாவின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் நுழைவாயிலில் ஒரு கோபுரத்தின் மீது சிவன் மற்றும் பார்வதியும், அவர்கள் இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் இருப்பது போன்ற சிற்பமும், கருவறை நுழைவாயிலில் உள்ள படிக்கட்டுகளில் கங்கா மற்றும் யமுனை நதி தெய்வங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பாபநாத கோவில்: ஆரம்பக்கால சாளுக்கிய ஆட்சிக் காலத்தின் முடிவில் 8 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாபநாத கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் திராவிடம் மற்றும் நகரி கோயில் பாணிகளின் புதுமையான கலவையால் சிறப்புப்பெற்றது. இது மூன்று நிலைகளில் கட்டப்பட்டுள்ளது

ஜெயின் நாராயண கோயில்: பட்டடக்கல்லில் உள்ள ஜெயின் கோயில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மற்ற கோயில்களைப் போல் இல்லாமல், வடக்குப் பக்க சன்னிதியில் ஒரு ஜெயின் தீர்த்தங்கரின் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்துக் கோயில்களைப் போலவே இந்தக் கோயிலிலும் சதுர வடிவிலான கருவறை, ஒரு சுற்றுப் பாதை, முன் மண்டபம், ஆகியவை உள்ளன. மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு சுவர்களில் ஏழாகப் பிரிக்கப்பட்டுள்ளது, குறுகிய இடங்களுக்குள், அமர்ந்திருக்கும் நிலையில் சிற்பங்கள் உள்ளன.

சிறந்த கட்டடக்கலையும், சிற்பக்கலைகளின் கருவூலமாகவும் உள்ள நினைவுச்சின்னங்களை, 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், சிறந்த கட்டடக்கலை, சிற்பக்கலை தனித்துவம், நாகரிகம் என்ற பட்டியலின் அடிப்படையில் யுனெஸ்கோவின் 3 மற்றும் 4-வது விதியின் கீழ் உலக பாரம்பரிய இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் பட்டடக்கல்லில் உள்ள நினைவுச்சின்னங்கள் சேர்க்கப்பட்டன.

image

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு..

சென்னையிலிருந்து சுமார் 796 கிமீ தொலைவில் உள்ள பட்டடக்கல்லுக்கு, விமானம் அல்லது பேருந்து மூலம் செல்லலாம். பட்டடக்கலில் இருந்து சுமார் 128 கி.மீ தொலைவில் உள்து ஹூப்ளி விமான நிலையம். அங்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். மேலும், பட்டடக்கல்லில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது பாதாமி ரயில் நிலையம், கடக், சோலாப்பூர், பெங்களூர், புனே, ஹூப்ளி மற்றும் பிஜப்பூர் ஆகிய நகரங்களிலிருந்து இங்குச் செல்லலாம்.

Visit the World Heritage Site of Pattadakal in Karnataka |

அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இங்குச் சுற்றுலா செல்வது சிறந்ததாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதியில் பட்டடக்கல்லில் பாரம்பரிய நடன விழா நடைபெறும். பட்டடக்கல்லில் உள்ள விருபாட்சர் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேர்த் திருவிழா நடைபெறும். மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பட்டடக்கல்லில் மல்லிகார்ஜுனா கோயில் திருவிழாவும் நடைபெறுகிறது.

கி.பி 4 மற்றும் கி.பி 5-ம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள் சிற்பக்கலையைப் பழகுவதற்குரிய பயிற்சிக்கூடமாக அய்ஹோலைப் பயன்படுத்தினார்கள். அதன் பிறகு, பதாமியில் குடைவரைக் கோயில்களையும் கற்கோயில்களையும் நிறுவினார்கள். 7-ம் நூற்றாண்டு காலத்தில் சிற்பக் கோயில்களை எழுப்புவதற்கு பட்டடக்கல்லுக்கு இடம்பெயர்ந்தவர்கள் உலகே வியக்கும் அளவுக்குச் சிற்பங்களையும் கற்கோயில்களையும் செதுக்கியிருக்கிறார்கள். சுமார் 1,200 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகவும், அதே எழிலுடனும் விளங்கும் பட்டடக்கல் வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய சிற்பக்கலைக் கருவூலம்.

(உலா வருவோம்…)

முந்தைய அத்தியாயம்: இந்திய பாரம்பரிய இடங்கள் 14: ஃபதேபூர் சிக்ரி – மகனுக்காக அக்பர் உருவாக்கிய நகரம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.