யுவராஜ் புகழின் உச்சிக்கு சென்ற 2011 உலகக்கோப்பை தொடரில் தான், அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போட்ட புற்றுநோய் அறிகுறியும் தென்பட இறுதியில் அது உறுதியானது.
 
1999 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் மோசமான காலகட்டமாக இருந்தது. அந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய அணி. அந்த உலகக் கோப்பை முடிந்ததும் அசாரூதீன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி, சச்சின் டெண்டுல்கர் மீண்டும் கேப்டனானார். ஆனால். இந்தியாவுக்கு 2000-ம் ஆண்டும் மோசமாகவே இருந்தது. கிரிக்கெட்டில் தோல்விகள் ஒருபக்கம். மறுமுனையில் மேட்ச் ஃபிக்சிங் புகாரில் இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரர்கள் சிக்கினர்.
 
image
இந்திய கிரிக்கெட் தடுமாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் சவுரவ் கங்குலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். உடனடியாக மாற்றங்கள் நிகழ்ந்தது. அந்த காலகட்டங்களில் ஃபீல்டிங்கில், மிடில் ஆர்டரில், ஆல் ரவுண்ட் பெர்பார்மன்ஸில் கொஞ்சம் டம்மியாக இருந்தது இந்திய அணி. அதற்காக புத்தம் புதிய வீரர்களை தேடினார் சவுரவ் கங்குலி. அப்போது 2000-ம் ஆண்டில் நைரோபியில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்கு தேர்வானவர்கள்தான் யுவராஜ் சிங்கும், ஜாகீர் கானும். அதிலும் யுவராஜ் சிங் தான் பங்கேற்ற முதல் தொடரிலேயே அவர் யாரென நிரூபித்தார்.
 
பீல்டிங்கின்போது பாய்ந்து பந்தை பிடிக்கும் லாவகம், மிடில் ஆர்டரில் அதிரடியான ஆட்டம், இடக்கை சுழற்பந்துவீச்சு சரசரவென என இந்திய அணி தேடிக்கொண்டிருந்த கம்ப்ளீட் பெர்பார்மராக கிடைத்தார் யுவராஜ் சிங். அறிமுகமான முதல் தொடரிலேயே காலிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில், தலைசிறந்த பௌலிங் அட்டாக்கை எதிர்த்து 80 ரன்கள் எடுத்து, இந்தியாவை வெற்றி பெற வைத்தார் யுவ்ராஜ். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடத் தவறினார் யுவராஜ். அதற்கு அடுத்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியும் 55 ரன்கள்தான் எடுத்தார்.
 
image
இதனால் அணியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட யுவராஜ், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். இதனையடுத்து திலீப் ட்ராஃபி போட்டியில் அவர் விளாசிய 209 ரன்கள் உடனே அவரை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது. இந்த வாய்ப்பை விடாமல் கெட்டியாக பற்றிக் கொண்டார் யுவ்ராஜ். ஆனால் இந்திய அணியில் அசைக்க முடியாத வீரராக யுவ்ராஜ் உருவெடுத்தது 2002 இல் நடந்த நாட்வெஸ்ட் தொடரில்தான். லார்ட்ஸ் மைதானத்தில் நாட்வேஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 326 என்ற இமாலய இலக்கை வைத்தது.
 
கடைசி 26 ஓவரில் 179 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலையில் களத்தில் யுவராஜ் மற்றும் கைஃப் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்தப் போட்டியில் 69 ரன்கள் எடுத்தார் யுவராஜ் சிங். கடைசியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய கைஃப் இந்தியாவுக்கு வெற்றித் தேடி தந்தார். இதற்குப் பிறகு சில போட்டிகளில் சொதப்பினாலும் 2003 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றார் யுவராஜ் சிங். பாகிஸ்தானுக்கு எதிராக 50 நாட் அவுட், கென்யாவிற்கு எதிராக 58 நாட் அவுட் என சில போட்டிகளில் நன்றாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினாலும், பெரிதாக அந்த உலகக் கோப்பையில் சோபிக்கவில்லை யுவராஜ்.
 
image
அதன்பிறகு இந்திய அணியின் தவிர்க்க முடியாது வீரராக உருவாகினர் யுவராஜ். 2007 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த உலகக் கோப்பை இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்த உலகக் கோப்பை. பங்களாதேஷிடம் தோற்று லீக் போட்டிகளிலேயே வெளியேறியது இந்தியா. இந்திய அணியில் மீண்டும் மாற்றங்கள் செய்யவேண்டிய நிர்பந்தம். கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் திராவிட் விலகினார். இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கு அனில் கும்பளே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
 
அதே ஆண்டில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதிலிருந்து சீனியர் வீரர்கள் விலகிக்கொள்ள, இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு கேப்டனாக தோனியையும், துணைக் கேப்டனாக யுவராஜ் சிங்கையும் நிர்ணயித்தது பிசிசிஐ. இதற்கு கைமேல் கிடைத்த பலனாக டி20 கோப்பையும் இந்தியாவின் வசமானது.
 
ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டிய நிலைமை. இறங்கி ரிஸ்க் எடுத்தது இந்தியா. கேப்டனான மகேந்திர சிங் தோனியையும் வைஸ் கேப்டனாக யுவ்ராஜையும் நியமித்து, முற்றிலும் புதிய இளம் அணியை 20-20 உலகக் கோப்பைக்கு அனுப்பி வைத்தது இந்தியா. எடுத்த ரிஸ்க் வீண் போகவில்லை. அனைத்து அணிகளையும் தோற்கடித்து முதல் டி 20 உலகக் கோப்பையை வென்றது அந்த இளம் இந்திய அணி. அந்த உலகக் கோப்பையில்தான் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர் பிராட் ஓவரின் 6 பந்துகளை சிக்ஸருக்கு பறவக்கவிட்ட அற்புதமும் நிகழ்ந்தது.
 
image
உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கும் தோனி, யுவராஜை முறையே கேப்டன், வைஸ் கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. யுவராஜ் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் மேட்ச்சுகள் யுவராஜிற்கு கடுமையாகவே இருந்தன.
 
இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பெற யுவராஜ் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் அனில் கும்ப்ளே பேட்டி கொடுத்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த தொடரின் மூன்றாவது போட்டியில் 169 ரன்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார் யுவராஜ். மேலும் 2008 இல் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சினுடன் பார்ட்னர்ஷிப் செய்து அபாரமான வெற்றியை தேடித்தந்தார் யுவராஜ்.
 
யுவராஜ் அதற்கடுத்து விஸ்வரூபம் எடுத்தது 2011 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில்தான். அந்த அளவிற்கு பேட்டிங் பௌலிங் ஃபீல்டிங் என்று எல்லாவற்றிலும் அடித்து விளாசினார் யுவராஜ். மொத்தம் 362 ரன்கள், நான்கு 50 அரை சதம், 1 சதம், ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளையும் பெற்றார். உலகக் கோப்பையில் 300 ரன்கள் ப்ளஸ் 15 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆல்ரவுண்டர் என்ற பெருமையையும், அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் ப்ளஸ் 5 விக்கெட் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார் யுவராஜ். யுவராஜ் புகழின் உச்சிக்கு சென்ற இதே உலகக்கோப்பை தொடரில் தான், யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போட்ட புற்றுநோய் அறிகுறியும் தென்பட இறுதியில் அது உறுதியானது.
 
கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்ற நிலையில்தான் புற்றுநோயிலிருந்து மீண்டு, மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்தார் யுவராஜ் சிங். பின்பு 2012 இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் “கம்பேக்” கொடுத்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்தாண்டே அவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவப்படுத்தியது மத்திய அரசு. பின்பு 2014 இல் அவருக்கு பத்ம விருதும் வழங்கப்பட்டது. பின்பு 2014, 2016 ஆண்டுகளில் அவர் இந்திய அணியில் இடம்பிடித்தார். 2016 ஆஸ்திரேலிய சுற்றுப் பயண டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும். அதன்பின்பு பல போட்டிகளில் சொதப்பினார்.
 
image
இதன்காரணமாக அவர் இந்திய அணிக்காக தேர்வாவது அரிதானது. 2017 ஆம் ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக விளையாடினார் யுவராஜ் சிங். அதன் பின்பு இந்திய அணிக்கு திரும்பவில்லை. இதனையடுத்து 2019 இல் தன்னுடைய ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங். கிரிக்கெட் வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்றமும் வீழ்ச்சியும் போராட்டமும் மீள்வதும் என்பது இயல்பாக அமைந்துவிட்டது யுவராஜ் சிங்குக்கு. ஆனால் அவருடைய கேரியர்தான் பல இளம் வீரர்களுக்கு இப்போதும் உத்வேகம் தரக்கூடியதாக இருப்பதென்றால் அது மிகையல்ல.
 
”எனக்கான பாதை. அதை நான் தன்னம்பிக்கையுடன் கடப்பேன்” எனப் போராடிக்கொண்டிருக்கும் யுவராஜ்தான் இன்று பல இளம் கிரிக்கெட்டர்களின் இன்ஸ்பிரேஷன்.
 
பிறந்தநாள் வாழ்த்துகள் யுவி!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.