“இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” – ஆசிரியர்.

கொழும்பு கல்கிஸ்ஸ பகுதியில் கடற்கரையோரமாக அமைந்த உணவகத்தில் அன்று ஆள்நடமாட்டம் குறைவாகிருந்தது. பிரம்புப் பந்தலின் கீழ் இரண்டொரு பிளாஸ்திக் மேசைகளின் மீது கதிரைகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. நிமிர்ந்திருந்த கதிரையொன்றில் நீதனும் மறுபக்கத்தில் ராதாவும் குளிர்பானத்திற்கான பரிசாரகனை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அப்போது அந்த வீதியில் சென்ற பொலீஸ் வாகனமொன்று உணவகப்பக்கமாக நோட்டமிட்டது. வாகனம் தனது வேகத்தை சற்று மெதுவாக்கியது.

தாங்கள் ஜோடியாக அமர்ந்திருப்பதில் சந்தேகம்கொண்டு, பொலீஸ் வாகனம் திரும்பிவர ஆயத்தமாகுவதை நீதன் உறுதியாகக் கண்டுவிட்டான். பொலீஸ் வாகனத்திலிருப்பவர்கள் இறங்கிவருவதற்கு அல்லது தங்களை யார் என்று அவர்கள் பார்ப்பதற்கு எடுத்துக்கொள்ளும் அவகாசத்திற்குள் சுதாரித்துக்கொள்ளவேண்டும் என்று, மெதுவாக எழுந்து சென்று ராதாவிற்கு அருகில் இருந்துகொண்டான். தனது இடுப்பிலிருந்த பிஸ்டலை தொட்டு உறுதிசெய்துகொண்டான். மெதுவாக ராதாவின் தோளின் மேலாக கையைப் போட்டுக்கொண்டு அவளின் கண்களைப் பார்த்தான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இருவரும் அமர்ந்திருக்கும் இடத்துக்கும் வீதிக்கும் இடையில் சுமார் ஐம்பது மீற்றர் தொலைவென்றாலும் எதுவும் செய்யமுடியாத கையறுநிலைதான் அது.

ஓரளவுக்குக் கடற்கரை பக்கமாகவே பார்த்துக்கொண்டிருந்த ராதாவுக்கு, தனக்கு பின்னால் நடைபெறுவது எதுவுமே தெரியாமலிருந்த கணத்தில், நீதன் அருகில் வந்து அமர்ந்து தோளில் கைகளை போட்டுக்கொண்டதும் அதிர்ந்துபோனாள்.

ராதாவின் தோள்களிலிருந்து கையை மெதுவா கீழிறக்கிய நீதன் முதுகின் வழியாக வருடிச்சென்று இடுப்பை அணைத்துக்கொண்டான்.

பொலீஸ் வாகனத்தின் கடற்கரைப்பக்க ஜன்னல் கண்ணாடி சாதுவாக கீழே இறங்கியதை ஒரு கண்ணால் பார்த்தவாறு –

மறுகையால், ராதாவின் கன்னத்தை மிருதுவாக தன்பக்கம் இழுத்தான். மெல்ல அழுத்தி ஒரு முத்தமிட்டான்.

பொலீஸ் வாகனம் அசையவில்லை.

நீதனின் இதழ்களும் ராதாவை விட்டு அகலவில்லை.

ராதா உறைந்தாள். அவளது கன்னத்திலிருந்து மெதுவாக இதழ்களை பிரித்தவன், “அப்படியே இரு, பின்னால பொலீஸ், என்ர தோளுக்கு மேல கையை போடு” – என்றான்.

பேசும்போதும் அவனது மீசை குத்தியது.

ராதா அணிந்திருந்த – மென் மஞ்சள் நிறத்தில் கழுத்தைச்சுற்றி கறுப்பு வளையம் வைத்து தைத்த இறுக்கமான அந்த – சட்டையின் வாசம் நீதனுக்கு முகத்திலடித்தது.

அவளைப்போலவே அந்த சம்பவம் பொலீஸிற்கும் பிடித்திருக்கவில்லை. இப்போது மறுபக்க சிக்னல் விழுந்தது. மெதுவாக அசைந்துகொண்டு கடற்கரை வீதியால் அந்த வாகனம் வேகமெடுத்தது.

ராதாவுக்குள் அந்தக் கடற்கரை காற்றை மீறியொரு உஸ்ணம் சுழன்றடித்தது.

ஆத்திரம் அலைகளாக ஓங்கியடித்தது. நீதனைத் திரும்பிப் பார்க்காமலேயே, தூரத்தில் போய்க்கொண்டிருந்த பொலீஸ் வாகனத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் கோபத்தோடு இருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு அந்த கணத்தில் நீதனுக்குப் புலனாய்வுத்துறைக்காரன் என்ற தகுதியெல்லாம் தேவையற்றதாக இருந்தது. அவள் பெண்ணாகத்தான் இன்னுமிருக்கிறாள் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்துகொண்டவன், சமரசதுக்கான எந்த சம்பாசணையையும் அந்த இடத்தில் தவிர்த்துக்கொண்டான்.

“வீட்ட கொண்டுபோய் விடுறீங்களா”

ராதா தங்கவைக்கப்பட்டிருந்த வீடு அமைந்திருந்த தெரு முனையிலிருந்த குழாயடியில் இறக்கிவிட்டு, தலைக்கவசத்தை வாங்கி மோட்டார்சைக்கிளில் கொழுவிய நீதன், வெள்ளவத்தையை நோக்கித் திரும்பினான்.

அடுத்தநாள், கானகனிடமிருந்து அழைப்பு வந்தது.

“பெரியம்மாவுக்கு சுகமில்லையாம், அம்மா ஒருக்கா வந்திட்டு போகட்டுமாம்” – என்றான்.

சங்கேத உரையாடலைப் புரிந்துகொண்ட நீதன், கொழும்புப் பொறுப்புக்களையும் போகவேண்டிய பாதையையும் கிளியர் பண்ணிக்கொண்டு கிளிநொச்சி நோக்கிப் புறப்பட்டான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

வன்னியை சென்றடையும்போது மாலை ஐந்தரை மணியாகிவிட்டிருந்தது. போரையும் அதன் வெம்மையையும் மீறிய தனது மண்ணின் மக்களைக் கண்குளிரக்கண்டவாறு, உற்சாகத்தோடு பறந்து சென்ற நீதன், ராகவன் மாஸ்டரின் கிளிநொச்சி அலுவலகத்தை அடைந்தபோது, கொஞ்சம் இருட்டியிருந்தது.

தனக்கே தெரியாமல் ஒருத்தி தன்னை இங்கே அழைத்து வந்திருக்கிறாளோ என்றெண்ணியவாறு ராகவன் மாஸ்டரை கூர்ந்து பார்த்தான். ராகவன் மாஸ்டர் மிகச்சாதாரணமாகக் கதிரையைக் கண்களால் சிக்னல் போட்டுக் காண்பித்து, அமருமாறு கூறினார்.

ராதா அறையிலிருந்து வெளியேறினாள். நீதன் கடைசியாக கொழும்பு – கல்கிஸையில் இறக்கிவிட்டபோது போட்டிருந்த அதே சட்டையுடன்தான் ராதா இங்கேயும் இருந்தாள்.

ராகவன் மாஸ்டரையே அந்த அறையில் கண் வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த நீதனுக்கு ஏதோ ஒரு வகையில் அந்த சட்டையும் நிறமும் மங்கலாகத் தெரிந்து போனது. அதைவிடவும், தன்னைப்பற்றி எவ்வளவு அழகாக ஒரு முறைப்பாட்டை அலங்கரித்திருப்பாள் என்பதைக் கேட்கின்ற ஆவலோடு ராகவன் மாஸ்டரின் முகத்தைப் பார்த்தான் நீதன்.

அன்றுதான் அவன் ராதாவைக் கடைசியாக கண்டிருந்தான். அதன்பின்னர் அவள் புலனாய்வுத்துறையிலிருந்து அரசியல்துறைக்கு மாற்றலாகியிருப்பதாகக் கானகன் பிறகொருதடவை பேசும்போது கூறியதாக ஞாபகம். அதன் பிறகு யாரோ ஒரு தளபதியைத் திருமணம் செய்துவிட்டாள் என்றும் அறிந்திருந்தான்.

யுத்தம் கழுத்தை இறுக்கத்தொடங்கியிருந்த காலப்பகுதியில், இவை தொடர்பாக விரிவாகப் பேசுவதற்கு எந்த அவகாசமும் அவனுக்குக் கிடைக்கவில்லை.

வன்னியிலிருந்து கிடைக்கப்பெறும் கட்டளைகளுக்கான இடங்களும் மாற்றலாகத்தொடங்கியருந்தன. நீதன் தானே முடிவுகளை மேற்கொள்ளவேண்டிய நிலையில் கொழும்பு நிலமைகளைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

வன்னியின் மேற்கு பகுதியைக் கவ்வியிருந்த யுத்தம், கொஞ்சம் கொஞ்சமாக அகலக்கால் பதித்து, ஆழக்கால் பதிக்கவும் ஆரம்பித்தது. கொழும்பிலும் தென்னிலங்கையின் ஏனைய பகுதிகளிலும் பணிகளிலிருந்த பலநூற்றுக்கணக்கான புலனாய்வுத்துறைப் போராளிகள் வெளிநாடுகளுக்கு பறக்கத்தொடங்கினர். வன்னியில் நிலமை கை மீறிக்கொண்டிருந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

ஒருநாள், கானகனைக் கொச்சிக்கடை பகுதியில் வைத்து இரகசியமாக சந்தித்துக் கன நேரம் பேசினான் நீதன். அவரவர் உயிரைக் காப்பாற்றுவதைத் தவிர, வேறு எந்த வழியும் இல்லை என்றான் கானகன்.

– என்று கூறிக்கொண்டு நிலத்தை வெறித்தான்.

நீதனால் எதையும் ஆரோக்கியமாகச் சிந்திக்க முடியவில்லை. வன்னியோடு தொடர்பெடுத்தாலும்கூட யாரோடு பேசுவது, எதைக் கேட்பது என்பது அடுத்த பிரச்னையாக இருந்தது. எல்லோரையும்போல தானும் இரண்டாரு மாதங்கள் மலேசியா பக்கம் போயிருந்துவிட்டு, நிலமையை பார்த்து திரும்பி வரலாமா என்று யோசித்தான் நீதன். புறக்கோட்டை பக்கமாக உள்ள ஏஜென்ட்டிம் அன்றிரவே போனான்.

மலேசியா வந்த இரண்டொரு வாரங்களுக்குள் வன்னியின் நிலமை இன்னும் மோசமடைந்திருந்தது.

எல்லா செய்தி இணையங்களிலும் வெளியாகியிருந்தன. ‘கொழும்பில் நின்றிருந்தால் இந்த நாய் படைக்கு ஒண்டு குடுத்திருக்கலாம்’ – என்று உள்ளுக்குள் மனம் வெடித்தாலும், தாங்கள் எல்லாவற்றையும் இழந்து, தற்போது தனியாக ஒரு பக்கத்துக்கு ஒதுக்கப்படுவதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று நீதனின் மனதுக்கு, அவனது மூளை அறிவுரை சொன்னது. இப்போதெல்லாம் பொறுமையை அதிகம் கற்றுக்கொள்வதற்கான பயற்சியை, சூழ்நிலை அவனுக்குக் கூர்மையாக உணர்த்தியது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

மலேசியாவுக்கு ஏற்கனவே வந்திருந்த கானகனை சந்திந்துப் பேசியபோது, ராகவன் மாஸ்டரின் தொடர்பு கிடைத்திருப்பதாகவும் அவர் தொடர்புகொள்ளுமாறு நீதனைக் கேட்டதாகவும் கூறினான். ராகவன் மாஸ்டரின் தொடர்பை எடுத்து, அவருடைய அறிவித்தலின்படி திரும்பவும் கொழும்புக்கு போவதுதான் சரி என்று நீதன் முடிவெடுத்தான். கானகன் கொடுத்த தொடர்பின் வழியாக தொடர்ந்து ராகவன் மாஸ்டரை அழைத்துக்கொண்டேயிருந்தான். பிடிக்கவே முடியவில்லை.

நீதன் வருவதற்கு முன்னரே, மலேசியாவுக்கு வந்த பல புலனாய்வுத்துறை பெடியள், நீதனைக் கண்டால் வெருளக்கூடும் என்று, இயலுமானவரை வெளியில் திரியவேண்டாம் என்றும் கானகன் எச்சரித்திருந்தான். கொழும்பின் பட்டி தொட்டியெங்கும் பறந்து திரிந்து, ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருந்த நீதனுக்கு, ஒரு பெட்டி வீட்டிற்குள் அடைந்து கிடந்து, கொடூரமான செய்திகளோடு வாழ்க்கை நடத்துவது பெரும் போராட்டமாகவிருந்தது.

சுதந்திரத்தின் அருமை இன்னும் இன்னும் கொடூரமாகத் தெரிந்தது.

அன்றிரவு நடுநிசி தாண்டி இரண்டு மணியிருக்கும். தூக்கம் வரவில்லை. வன்னியின் எல்லா வனப்பையும் எண்ணியவாறு அறையின் வெளித்தளத்தில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்து தனக்குள் பேசிக்கொண்டிருந்த நீதன், வால் நட்சத்திரம் ஒன்று விழுவதைக்கண்டதும் உள்ளே போய் படுக்கலாம் என்று, படுக்கையில் வந்து அமர்ந்தான். போனை தட்டி “புதினம்” இணையத்தளத்துக்குச் சென்றான்.

அந்தப் படம் வெளிவந்திருந்து.

“உடையார்கட்டு பகுதியில் சுற்றிவளைத்து மேற்கொள்ளபட்ட தாக்குதல் ஒன்றில் பெரும் எண்ணிக்கையான போராளிகள் கொல்லப்பட்டார்கள்” – என்று

எப்போதும் மேவி இழுத்த முடி, நறுக்கி எடுக்கப்பட்ட மீசை, அகன்ற தோள்கள், வெளியே தள்ளிய முயல் காதுகள் என்று கம்பீரமான ராகவன் மாஸ்டர், ஒரு கை மேல்நோக்கி இழுத்துவிடப்பட்டபடி போராளிகளின் ஏனைய சடலங்களின் மீது புரட்டிவிடப்பட்டிருந்தார். முகம் முழுவதும் மண் அப்பிக்கிடந்தது. அது அரைவாசி வழித்துவிடப்பட்டிருந்ததும் தெரிந்தது. நெஞ்சில்தான் குண்டு பாய்ந்திருக்கவேண்டும். இரண்டுபக்கமும் சிவப்பு கலரில் நனைந்து கிடந்தது..

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

பெரிய யுகம் ஒன்றையே கட்டி ஆளுவதற்கு, அவரோடு இணைந்து பணியாற்றிய அத்தனை நாட்களும், அந்த சடலங்களின் நடுவே நொறுங்கிக் கிடப்பதுபோல நீதன் உணர்ந்தான். அந்தப் படத்தை சிறிதுநேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். ராகவன் மாஸ்டர் தன்னுடன் தொடர்புகொள்வதற்காக எத்தனை தடவைகள் முயன்றும் தன்னால் பேசமுடியாமல்போய்விட்டதை நினைக்கும்போது, தானும் அந்தச் சடலங்களின் நடுவில் உடல் பிளந்து சிதைந்திருக்கக் கூடாதா என்றிருந்தது அவனுக்கு. வெப்பக்காற்று நாசித் துவாரங்களினால் மூசி அடித்தது.

அங்கிருந்து அடுத்தடுத்த வாரங்களில்தான் நீதன், பாதுகாப்பு கருதி இந்தோனேசியா புறப்பட்டிருந்தான்.

(தொடரும்…)

Also Read: நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `நீதனின் துப்பாக்கி’ | பகுதி – 11

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.