நாகாலாந்தில் தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
ஒடிங் என்ற கிராமத்தில் நாகாலாந்தின் தேசிய சோஷியலிச பிரிவினைவாத அமைப்பின் கிளை அமைப்பான யுங் ஆங் கிளர்ச்சியாளர்கள் சிலர் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, டிரு – ஒடிங் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது பாதுகாப்புப் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னரே வாகனத்தில் இருந்தவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. 
 
மோன் மாவட்டத்தில் ஒடிங் மற்றும் டிரு கிராமங்களுக்கு இடையே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணி முடிந்து அவர்கள் ஒரு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதுதான் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. சம்பவ இடத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 2 பேருக்கு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், மூன்று வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்நிலையில் படுகாயம் அடைந்த 6 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
image
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உயர்மட்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும் என தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து சம்பவம் இதயத்தை உலுக்குவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். மத்திய அரசு உண்மையான பதிலை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், சொந்த மண்ணில் பொதுமக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் என்னதான் செய்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடத்தப்படும் என அசாம் ரைபிள்ஸ் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினரே துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதால் நாகாலாந்து முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. பதற்றம் அதிகரித்துள்ளதால் நாகாலாந்து மாநிலத்தின் பல இடங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை நாகாலாந்து மாநில அரசு அமைத்துள்ளது.
 
image
”பாதுகாப்புப் படையினர் தவறுதலாக சுட்டது மற்றும் வன்முறை நிகழ்வுகளில் பொதுமக்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” என நாகாலாந்து முதலமைச்சர் நெஃபியு ரியோ அறிவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற மோன் மாவட்டத்திற்கு இன்று நேரில் சென்று ஆய்வு செய்யவும் அவர் முடிவு செய்துள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க 5 உயரதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நாகாலாந்து அரசு அமைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள் இந்த குழு விசாரணையை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.