திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரெளடிகளான சேகர், சந்துரு இருவரும் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர். சகோதரர்களான இவர்கள் இருவரும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், ஆள் கடத்தல் உட்பட சுமார் 40-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருக்கின்றனராம். இந்த இருவரில் ஒருவரான சந்துரு, அண்மையில் பாமக-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்ததுதான் பெரும் பேசுபொருளுக்கு உள்ளானது.

Also Read: என்கவுன்ட்டர்: 7 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி; சுட்டுக்கொலை! நடந்தது என்ன?

“கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தமிழக பாஜக-வில் குற்றப் பின்னணிகொண்டவர்கள் இணைந்ததைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார் மு.க.ஸ்டாலின். ஆனால் ஆட்சியில் அமர்ந்த பிறகு, சட்ட ஒழுங்கைக் காக்கவேண்டிய நிலையில், பிரபல குற்றவாளி சந்துருவை பொதுமேடையில் பொன்னாடை போர்த்தி தன்னுடைய கட்சியில் இணைத்துக்கொண்டிருக்கிறார்” என்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மேலும் பரபரப்பைக் கூட்டியிருந்தது.

ஸ்டாலின்

இந்தப் பிரபல ரெளடிகளைப் பற்றி விவரம் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட வட்டாரத்தினர் சிலர் நம்மிடம் பேசும்போது, “காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரெளடி ஸ்ரீதர் இருந்தபோது அவருடன் இணைந்து இவர்கள் இருவரும் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தனர். முன்பெல்லாம் இவர்கள் அரசியலில் கிடையாது. கடந்த வருடம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருந்தபோதுதான் பாமக-வில் இணைந்தார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டு வென்ற இவர்களுடைய அம்மாதான் தற்போது வெம்பாக்கம் ஒன்றியக்குழு துணைத் தலைவர். அண்ணன், தம்பி இரண்டு பேருமே ரெளடியிசத்தில் ஈடுபடுபவர்கள்தான். இவர்கள்மீது நிறைய வழக்குகள் இருக்கின்றன. திமுக தற்போது ஆளும் கட்சி என்பதால் அதில் இணைந்திருக்கலாம்” என்றனர் மெதுவாக.

காவல்துறை வட்டாரத்திலோ, “அவங்க இரண்டு பேருமே காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு பயன்படுத்தப்படும் நபர்கள்தான். சேகர் என்பவர் குண்டாஸில் கைதுசெய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை போன்ற சில மாவட்டங்களிலும் இவர்கள் இருவரின் மீதும் அநேக வழக்குகள் இருக்கின்றன” என்றனர்.

Also Read: வேலூர்: `ரவுடிகள் உலாவும் இடங்கள் டார்க்கெட்!’ – மக்களின் பாதுகாப்புக்காக 950 கேமராக்கள்

பிரபல சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவரை, திமுக தலைவர் ஸ்டாலினே சால்வை போர்த்தி கட்சியில் இணைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளுக்கு உள்ளான நிலையில், “சந்துரு மீது பல சட்டவிரோதமான வழக்குகள் நிலுவையில் இருப்பது தற்போதுதான் தெரியவந்தது.

தரணிவேந்தன்

எனவே இவர் மீதான வழக்குகளிலிருந்து விடுதலை தீர்ப்பு வரும் வரை இவருக்கும் கழகத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை” எனப் பதிவிட்டு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தரணிவேந்தன்.

இது தொடர்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தரணிவேந்தனிடம் பேசியபோது, “மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் முக்கிய நிர்வாகிகள் குறித்து எங்களுக்கு முழு விவரங்கள் தெரியும். நிகழ்ச்சி நடக்கும்போது, அதில் கலந்துகொண்ட சந்துரு குறித்து எங்களுக்கு அப்போது தெரியாது. தெரிந்ததும், முதல்வருக்குக் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டேன். அவர் இன்னும் கட்சியில் உறுப்பினராகக்கூட இணைக்கப்படவில்லை. அடிப்படை உறுப்பினர் அட்டை எதுவும் வழங்கப்படவில்லை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.