சென்னை: மழைநீரில் வழுக்கி விழுந்து, மின்சாரம் தாக்கி தலைமைச் செயலக ஊழியர் பலி!

சென்னை வேப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (45). இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்றி வந்தார். இன்றுகாலை, முரளி கிருஷ்ணன் கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்திருக்கிறார். அப்போது, வீட்டின் முன்பாக தேங்கி நின்ற மழை நீரில் வழுக்கி விழும் நிலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது, கீழே விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முரளி கிருஷ்ணன் வீட்டுக்கதவை பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது, கதவை ஒட்டியிருந்த மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டதால், அவர் கதவை பிடித்த மாத்திரத்தில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

மரணம்

அதைக்கண்டு பதறி போன குடும்பத்தினர், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

தகவலறிந்து கிருஷ்ணன் வீட்டுக்கு விரைந்த போலீஸார், அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை!நீடிக்கும்!’ – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. அதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கனமழையும் பெய்து கொண்டிருக்கிறது.

கனமழை

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

சென்னை: கனமழை எதிரொலி; சுரங்கபாதைகளில் தேங்கிய மழை நீர் –  போக்குவரத்து மாற்றம்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. அதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகள் என நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கின்றனர். சுரங்கபாதைகளில் மழை நீர் தேங்கி குளம் போல காட்சியளிப்பதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டு சுரங்கபாதைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதனால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

போக்குவரத்து மாற்றம்

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துரையினர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கனமழை காரணமாக சென்னையில் கீழ்கண்ட இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன:

* ரங்கராஜபுரத்தில் இருசக்கர வாகன சுரங்கப் பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.

* மேட்லி சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது

* கே.கே நகர், ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு, இரண்டாவது avenue நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.

* வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு சாலை செல்ல கேசவர்தினி சாலை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.

* வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.

* சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணி அண்ணா பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், கே.கே நகர் ஜி.எச் எதிரே உள்ள அண்ணா சாலையில் வடிகால் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கிச் செல்லும் போக்குவரத்து எதிர்திசையில் அனுமதிக்கப்படுகிறது.

அதேபோல உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

* மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்கநல்லூர் நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.

* அசோக் நகர் போஸ்டல் காலனியில் மழைநீர் தேங்கி இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.

என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் கனமழை தொடரும்!’ – வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

மழை

அதேபோல, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உட்பட 21 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.