நவம்பர் 27 – ஹரிவன்ஷ் ராய் பச்சன் பிறந்தநாள்

பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் தந்தை என்றால்தான் ஹரிவன்ஷ் ராய் பச்சன் குறித்த அறிமுகம் இங்கு பலருக்கும் புரியும். ஆனால் ஹிந்தி இலக்கிய உலகில் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மிகப் பிரபலமானவர். அதுவும் ஹிந்தி மொழிக் கவியரங்கங்களில் அவரது பாடல்கள் மிகப் பரிச்சயமானவை. மதுஷாலா, தேரா ஹார், சத்ரங்கி ஆகிய அவரது கவிதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவர் வாழ்விலிருந்து நாம் தெரிந்து கொள்ளக்கூடிய பாடங்கள் சில உண்டு

அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் ராய்

‘அடிப்படை மாறுதல்களுக்கு அஞ்ச வேண்டாம்’

ஹரிவன்ஷ் ராயின் குடும்பப் பெயர் ஸ்ரீவத்சவா. எனவே அவர் பெயர் ஹரிவன்ஷ் ராய் ஸ்ரீவத்சவா என்பதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. ஆனால் கவிதைகள் எழுதும் போது அவர் ‘ பச்சன்’ என்ற புனைபெயரில் எழுதினார். பச்சன் என்றால் குழந்தை என்று பொருள். இந்தப் பெயரில் அவர் பிரபலமான பிறகு தன் பெயரின் பிற்பகுதியாகவே அதை மாற்றிக் கொண்டார். ஹரிவன்ஷ் ராய் ஸ்ரீவத்சவா என்ற பெயர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் என்று ஆனது. பிறகு தன் மகனின் பெயரையும் அமிதாப் ஸ்ரீவத்சவா என்பதற்கு பதில் அமிதாப் பச்சன் என்றே வைத்தார். பரம்பரையின் புகழ் தொடர்கிறது.

Also Read: இப்போல்லாம் அந்த வார்த்தையை கேட்டாலே… உண்மை தன்னம்பிக்கை கதை! | Motivational Story

‘கல்வியின் சிறப்பு மகத்தானது’

ஒருவிதத்தில் ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் புதிய பாடங்களைக் கற்று மாணவர்களாகவேதான் இருக்கிறோம். கல்வி கற்கும் வாய்ப்பு இருக்கும்போது அதைத் தவற விடவே கூடாது. வாழ்வில் எந்தக் கல்வி எப்படிப் பயன்படும் என்பதைச் சொல்லவே முடியாது. எதிர்பாராத நேரங்களில் அது கை கொடுக்கும். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த இந்தியர்கள் மிகக் குறைவு. அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டார் ஹரிவன்ஷ் ராய் பச்சன். அந்தக் கல்வியை சிறப்பாகப் படித்து முடித்தார். அதுமட்டுமல்ல உமர் கய்யாமின் எழுத்துக்களை மொழிபெயர்ப்பதற்கு முன்னால் அவர் உருது மொழியைக் கற்றுக்கொண்டார். இத்தனைக்கும் அவரது தொழில் வழக்கறிஞர் என்பதுதான். உமர்கயாமின் பிரபல ருபையத் கவிதை தொகுப்பை ஹிந்தியில் மொழி பெயர்க்க உருதுமொழி குறித்த அவரது ஞானம் பெரிதும் பயன்பட்டது.

அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் ராய்

‘சுய கிண்டல் பிறரை நெருக்கமாகும்’

பிறர் நம்மைக் கிண்டல் செய்வதை ஏற்க முடியாமல் போகலாம். ஆனால் யார் ஒருவர் தன்னைத்தானே கிண்டல் செய்துகொள்கிறாரோ அவரை நமக்குப் பிடித்துப் போகும். இதுதான் மனவியல். பெரும் மேதமை கொண்டவர் என்றாலும்கூட ஹரிவன்ஷ் ராய் பச்சன் தன் பாடல்களில் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்ள தவறியதில்லை. உலக அளவில் பிரபலம் அடைந்த மதுஷாலா என்ற தன் நூலில் தன்னை ‘களிமண்ணால் ஆன உடல், வேடிக்கை நிறைந்த மனம், வாழ்க்கையின் ஒரு நொடி, இதுதான் என் அறிமுகம்’ என்று வர்ணித்துக் கொள்கிறார். ஹிந்தியில் இந்த வரிகள் மிகப் பிரபலம் ஆயின.

‘அறியாததை உணர்த்த அறிந்ததுடன் இணையுங்கள்’

தலைமுறை இடைவெளியைக் கடக்க வேண்டுமென்றால் தகவல் தொடர்பு சரியானதாக இருக்க வேண்டும். அறிவுரை என்பதை ஆலோசனையாக மாற்ற வேண்டும். அவர்களுக்கு விருப்பமான, அவர்கள் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயத்துடன் நாம் கூற வந்ததை இணைத்து வெளிப்படுத்தினால் அவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பு அதிகம். ஹரிவன்ஷ் ராய் பச்சன் தன் கவிதைகளில் இதைத்தான் செய்தார். மதுஷாலா என்பது மது வழங்கப்படும் இடத்தைக் குறிக்கிறது.

அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் ராய்

அதிலுள்ள ஒவ்வொரு கவிதையும் மதுஷாலா என்ற வார்த்தையுடன்தான் முடியும். ‘உன் கைக்கு வருவதற்கு முன் கோப்பைக்கு சில தன்மைகள் இருக்கும். உன் உதடுகளை எட்டுவதற்கு முன் மதுவுக்கு சில தன்மைகள் இருக்கும். மது வழங்குபவர் பலமுறை உன்னை அலட்சியம் செய்யலாம். ஆனாலும் பயணியே, மதுவகம் உன்னை முதன்மையாகவே கருதுகிறது’. இப்படி எளிமையான வாக்கியங்கள் மூலம் வாழ்க்கைக்கான பல பாடங்களை உருவகமாக வலியுறுத்துகின்றன அவரது கவிதை வரிகள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.