ஒரே நபருக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு? என வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்றுவது குறித்த வழக்கில் நீதிபதி கேள்வியெழுப்பினார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவில்லாமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் நடைமுறைகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும் அங்குள்ள அசையும் சொத்துக்களும் அரசுடமையாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல் வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில், தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும், நினைவில்லமாக மாற்ற தடை விதிக்கவேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

image

வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தங்களிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டது மற்றும் வீட்டிற்கு 67 கோடியே 90 லட்ச ரூபாய் அளவிற்கு இழப்பீடு நிர்ணயித்து, அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துதல் அதிகாரி செலுத்தியது தவறு எனவும் தீபா, தீபக் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை புனிதமாக கருதி முறையாக பராமரிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தங்களின் கருத்துகளை கேட்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முறையாக மதிப்பீடு செய்யாமல் 68 கோடி ரூபாய் என இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

image

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது எனக்கூறி அதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். மேலும் 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்த கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்திய ரூ. 67,90,52,033 இழப்பீடு தொகையை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா செலுத்தவேண்டிய வருமான வரி பாக்கி ரூ. 36,87,23,462 வசூலை வருமான வரித்துறை தனியாகத் தொடங்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி: நீதிமன்ற வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்

தீர்ப்பை வாசித்த பின்னர், ஒரே நபருக்கு இரண்டு நினைவிடங்கள் எதற்கு என்றும், கடற்கரையில் பீனிக்ஸ் நினைவிடம் இருக்கும்போது, வேதா நிலையத்தையும் மக்கள் பணத்தில் ஏன் மற்றொரு நினைவிடமாக அமைக்க வேண்டுமென கேள்வி எழுப்பினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.