மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் தண்ணீர் திறக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை மனு அனுப்பினார். அதனை ஏற்று முதல்வர் உத்தரவின்படி உடனடியாகத் தண்ணீர் தரப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கங்கை நதியானது மக்கள் தன்மீது இறக்கிவைத்த பாவத்தைப் போக்க சிவபெருமானிடம் வேண்டியபோது, “ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் நகரின்  துலாக் கட்ட காவிரியில் நீராடினால் உனது பாவங்கள்  அனைத்தும் போகும்” என்று கூறி கங்கைக்கு அருளாசி  வழங்கினார் ஈசன் என்பது தொன்மையான ஐதிகம்.

ஸ்டாலின்

அதனடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி 30 நாள்களும் கங்கையே தன்னைப் புனிதம் செய்து கொள்ள மயிலாடுதுறை துலாக் கட்டக் காவிரியில் புனித நீராடுவதாகக் கருதி மயிலாடுதுறையிலுள்ள புகழ்மிக்க ஸ்ரீ மயூரநாதர், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீபரிமள ரங்கநாதர் ஆலயத்திலிருந்தும்  தினமும் காவிரியில் சுவாமிகளின் தீர்த்தவாரி நடைபெறுவது  விசேஷம். கங்கை நதியின் பாவத்தையே போக்கிய காவிரியின் மகத்துவத்தையறிந்து எண்ணற்ற மக்கள், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தினசரி மயிலாடுதுறைக்கு வருகை தந்து காவிரியில் புனித நீராடுவது அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் 2017-ம் காவிரி மகா புஷ்கரம் காஞ்சி சங்கராச்சாரியார்கள், தருமபுரம், திருவாவடுதுறை,  ஆதினங்கள், துறவியர்கள் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தினார்கள். 25 லட்சம் பக்தர்கள் புனித நீராடினார்கள். காவிரியில் தண்ணீர் வராதபோது அப்பகுதியில் தண்ணீர் தேக்குவதற்காக சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைக்கப்பட்டு, சிட்டி யூனியன் வங்கியின் உதவியோடு கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே காவிரியில் தண்ணீர்த் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் 30 நாள்களும் மக்கள் புனித நீராடி மகிழ்ந்தார்கள். ஆனால் தற்போது ஐப்பசி மாதம் துவங்கி முதல் இரண்டு நாள்கள் மட்டுமே காவிரியில் தண்ணீர் வந்தது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டதால் மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தண்ணீர் இல்லாமல் பக்தர்கள் புனித நீராட முடியவில்லை.

அப்பர்சுந்தரம்

இதுபற்றி சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரத்திடம் பேசினோம்

“‘ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மோட்டாரைப் பயன்படுத்தி துலாகட்ட காவிரியில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் ஏமாற்றம் அடையாமல் புனித நீராடுவதற்கு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும். அல்லது ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்யவேண்டும்’ என்று தமிழக முதல்வர், பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நகராட்சிக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். அதனை ஏற்று தமிழக முதல்வரின் உத்தரவின்படி 24 மணி நேரத்தில்  பொதுப்பணித்துறையினர் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் தண்ணீர் திறந்து விட்டனர்.

தற்போது ஐப்பசி ஒன்பதாம் நாளில் தண்ணீர் வந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனே நடவடிக்கைக எடுத்தத் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. நகராட்சி நிர்வாகம் சுகாதார ஏற்பாடுகளையும், பக்தர்கள் உடை மாற்றுவதற்காக தற்காலிக அறைகளையும் உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும். இரவு நேரங்களில் காவல்துறை பாதுகாப்பு மற்றும் தற்காலிகமாக அதிக ஒளி உமிழும் மின்சார பல்புகளை ஆங்காங்கே அமைத்து தரவேண்டும்” என்றார் அப்பர் சுந்தரம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.